வெளுத்துக் கட்டுது விமர்சனம்! கமல் திடீர் பல்டி!

சில தினங்களுக்கு கமல் அளித்ததாக இணையதளம் ஒன்றில் வந்த பேட்டிதான், சூடான விவாதத்திற்கு காரணமாகிவிட்டது. “கார்ப்பரேட் திட்டங்களுக்கு 4000 கோடி செலவு செய்வதற்கு பதிலாக அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.?” என்று அவர் கேட்ட கேள்விக்கு, “ஏன் நீங்க எடுக்கிற படத்துக்கு செலவு பண்றதை அப்படியே பிரிச்சு மக்கள்ட்ட கொடுக்கலாமே? ஒரு நாட்டின் உள் கட்டமைப்புக்கு இதெல்லாம் அவசியம்னு கூட தெரியாத நீங்களெல்லாம் ஒரு உலக நாயகனா?” என்று ஆரம்பித்து, கமலை துணியாய் பிழிந்தாக துண்டு போல துடைத்துக் கொண்டது வலையுலகமும், அங்கு நடந்த விமர்சனங்களும்.

அந்த அறிக்கையில் அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார் கமல். அவர் பேட்டி வெளிவந்து சில மணி நேரத்திற்குள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது சமூகம். கமல் சொன்னதில் என்ன தப்பு என்றும், அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்றும் இருவேறு பிரிவினர் விவாதித்துக் கொள்கிற அளவுக்கு போனது நிலைமை. தமிழகத்தின் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கமலுக்கு மிக நீண்ட பதிலையும் செம சூடாகவே பதிவு செய்திருந்தார். அதில் அமைச்சர் என்ற இலக்கணத்தையும் மீறி தெறித்தன வார்த்தைகள். தடிப்புகள்.

அன்றிரவே கமல் வீட்டில் கரண்ட் பிடுங்கப்பட்டது என்றெல்லாம் வதந்திகள் உலாவின. நல்லவேளை… போற ரூட் சரியில்லை என்பதை புரிந்து கொண்ட கமல், “நான் அப்படியொரு பேட்டியே தரவில்லை” என்று இன்று வேறொரு அறிக்கை அனுப்பியிருக்கிறார். எது நிஜம் என்பது கமல் நம்பாத அந்த கடவுளுக்கே வெளிச்சம். அந்த புது அறிக்கை மட்டும் இங்கே-

நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அல்ல. மின் அஞ்சல் வழி என் வடநாட்டு பத்திரிகையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.

என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப்பணம் என்னவாயிற்று? என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு வருடம் தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன். எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான்.

என் வீட்டிற்க்கு சில நாட்களாகச் செய்தித்தாள் விநியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைபேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப்பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்துகொண்டேன். எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல்வாசியல்ல நான்.

பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன். என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைபேசி தொடர்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிவருவதினாலும், அவர்களை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்புக் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாகச் சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாதப்பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவணம் செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் செளகரியத்துக்காகவும் தான்” இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Read previous post:
Actor Mohan gave food, biscuits and clothes to 1000 people in Mylapore Area

Close