40 வருஷத்துல இப்படி நடந்ததில்ல! சிவகார்த்திகேயனிடம் வருந்திய கமல்?

இப்படியொரு சம்பவம் இனிமேல் எந்த நடிகருக்கும் ஏற்படக் கூடாது என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி! மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துதான் இப்படியொரு பரவலான அதிர்ச்சியும் கருத்தும்! சம்பவம் நடந்தது எப்படி? அதற்கப்புறமான விளைவுகள் என்ன? இது பற்றியெல்லாம் கோடம்பாக்கத்திலும், கமல் மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பிலும் நாம் திரட்டிய தகவல்கள் அப்படியே உங்களுக்கு-

விமான நிலையத்தை விட்டு கமல் முதலில் வெளியேறிய இருபது நிமிடங்கள் கழித்துதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தன்னை நோக்கி ஓடி வந்தவர்கள் தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ளதான் வருகிறார்கள் என்று நினைத்த சிவகார்த்திகேயன் சில நிமிடங்கள் நின்றிருக்கிறார். வந்தவர்கள் என் தலைவனையா தப்பா பேசுற? என்று கூச்சலிட்டபடியே ஓடி வந்த பின்புதான், ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்று உணர்ந்திருக்கிறார் அவர். அதற்குள் முன்னேறி முதுகில் கை வைத்துவிட்டார்கள் அவர்கள். சிலர் நன்றாக குடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நல்லவேளையாக விழா குழுவினர் இரண்டு ஜிம் பாய்ஸ்களை செக்யூரிடிக்காக அனுப்பியிருந்தார்களாம். அவர்கள் உதவியுடன்தான் தப்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நடந்த இந்த அதிர்ச்சியான சம்பவம், முதலில் காரில் போய் கொண்டிருந்த கமலுக்கு உடனடியாக சொல்லப்பட்டதாம். பலத்த அதிர்ச்சிக்கு ஆளான அவர், பின்னால் காரில் வந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயனிடம் பேசியிருக்கிறார். “நாற்பது வருஷத்துல இப்படி நடந்ததேயில்ல. என்னன்னு விசாரிக்கிறேன். மனசுல ஒண்ணும் வச்சுக்க வேணாம்” என்று ஆறுதல் கூறியிருக்கிறார். அதற்குள் இரண்டு கார்களையும் பின் தொடர்ந்த சேனல் நிருபர் ஒருவர், அவர்கள் காரிலிருந்து இறங்குவதற்கு முன்பாகவே சம்பவ இடத்திற்கு சென்றுவிட்டாராம்.

“என்ன சார் இப்படியாகிடுச்சு. தாக்கியது உங்கள் ரசிகர்கள்தான் என்கிறார்களே?” என்று அவர் கமலிடம் கேட்க, “அதோ- எனக்கு முன்னாலதான் சிவகார்த்திகேயன் போயிட்டு இருக்கார். நல்லாதான் இருக்கார். எந்த பிரச்சனையும் இல்ல…” என்று கூறிவிட்டு மின்னலாக சென்றுவிட்டாராம் கமல். விழா முடிந்து பிற்பகல் லஞ்ச் நேரத்தில் இருவரும் ஒன்றாக சாப்பிட்டிருக்கிறார்கள். அப்போதுதான் கமலின் இத்தனையாண்டு கால முதிர்ச்சியையும் அனுபவத்தையும் உணர்ந்தாராம் சிவகார்த்திகேயன்.

“இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை முதலில் உங்களிடம்தான் பேசும். புகார் எழுதிக் கொடுங்கள். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறேன் என்பார்கள். நாமெல்லாம் நடிகர்கள். நம்முடைய வீரத்தை திரையில்தான் காட்ட வேண்டுமே தவிர, இதுபோன்ற விஷயங்களில் இல்லை. படப்பிடிப்புக்காக பல இடங்களுக்கு செல்வோம். சில நேரங்களில் உதவி இயக்குனர்களோ, செக்யூரிடிகளோ இல்லாத சூழலில் லாங் ஷாட்டில் காட்சிகள் எடுக்கப்படும். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவ்வப்போது நடைபெறும் பிரச்சனைகளை பெருசுபடுத்தாமல் இருப்பதுதான் நம் போன்ற நடிகர்களுக்கு நல்லது” என்று மிக நுணுக்கமாக ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

அவர் நினைத்தது போலவேதான் நடந்தது. மதுரை காவல் துறை அதிகாரிகள் சிவகார்த்திகேயனிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்தார்களாம். கமல் சொன்னது போலவே, “ஒரு புகார் எழுதிக் கொடுங்களேன்” என்றும் கேட்கப்பட்டதாம்.

இதற்கிடையில் மதுரையில் இருக்கும் சிவகார்த்திகேயனின் மாமனார் நல்ல அரசியல் செல்வாக்கு உள்ளவராம். மருமகனை தாக்கியவர்களை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அவரும் களத்தில் இறங்க, வேணாம் மாமா… விட்ருங்க என்று அவரை சமாதானப்படுத்தவே பெரும்பாடு பட்டாராம் சிவா. எப்படியோ? இந்த விஷயத்தை கமலும் சிவகார்த்தியேனும் சேர்ந்து அமைதியாக்கிவிட்டார்கள்.

வேறெங்கும் தொடராமலிருக்க வேண்டும் இது!

Read previous post:
பாம்பு கதை தெரியும். சட்டை கதை தெரியுமா? மனோபாலா மறுப்பு!

‘மாற்று அணிதான்! அதற்காக இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வீர்கள் மனோபாலா?’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து நம்மை தொடர்பு கொண்ட மனோபாலா, “என்னிடம் ஒரு...

Close