கஸ்தூரி நக்கல்! கரெக்ட் பண்ணிய விக்ரமன்!
திறப்பு விழா கண்டு இத்தனை மாதங்கள் கழித்து, இப்போதுதான் கலைவாணர் அரங்கத்திற்குள் காதல் காற்று அடித்திருக்கும். அங்கு நடந்த ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தின் இசை வெளியீட்டு விழாதான் அப்படி யோசிக்க வைத்தது. நிஜமாகவே(?!)காதலிக்கிற வயசில் இருக்கும் இரண்டு இளசுகளை போட்டு இப்படத்தை எடுத்திருக்கிறார் வாசுதேவ் பாஸ்கர். நந்தன் ராம்- வெண்பா ஜோடி அப்படியொரு சர்வ பொருத்தம்!
நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் பொறுப்பு நடிகை கஸ்தூரிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதிமுக வின் மூன்று கோஷ்டிகளும் போதும் போதும் என்று போஸ்டர் ஒட்டுகிற அளவுக்கு தன் முதுகை திறந்து போட்டுக் கொண்டு வந்திருந்தாலும், கஸ்தூரியின் ‘ஸ்பான்டேனியஸ்’ தொகுப்புரைக்கு அரங்கமே அடிமையாகிக் கிடந்தது. அவர் எந்தளவுக்கு சமூக அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வார்த்தைக்கு வார்த்தை உணர்த்திக் கொண்டிருந்தார்.
மருத்துவர் ஒருவர் இப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவர் மருத்துவர் என்பதையே மேடையில் ஏற்றிய பின்பு அறிந்து கொண்ட கஸ்தூரி, “வாங்க… உங்களைதான் தமிழ்நாடே எதிர்பார்க்குது. பாடுங்க. உங்க கட் ஆஃப் மார்க் என்னன்னு பார்த்துருவோம்…” என்று சொன்னது ஒரு சாம்பிள்தான்!

படத்தின் நாயகி வெண்பா பற்றி குறிப்பிட்ட கஸ்தூரி “இவர் தமிழ் பொண்ணு. தமிழ் நல்லா பேசுவார். அதனால் ஆந்திர சினிமாவில் கொடி கட்டி பறப்பார்னு நம்புவோம்” என்று கலாய்க்க, அரங்கம் அதிர்ந்தது.
அவ்வளவு பிரமாண்டமான மேடையில், அந்த மேடையே நசுங்குகிற அளவுக்கு நாற்காலிகளை அடுக்கி, விருந்தினர்களை நிரப்பியிருந்தார்கள். ‘இவங்கள்லாம் பேசி முடிக்கணும்னா நாளைக்கு மதியானம் நாலு மணியாகிரும்’ என்று போகிற போக்கில் பொங்கிவிட்டு போனார் மனோபாலா.
இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் பேசும்போது, பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராமுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, கதாநாயகி வெண்பாவுக்காக தனியாக கொஞ்சம் பேசினார். “பொதுவா தமிழ் பொண்ணுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குது. வெண்பா தமிழ் பொண்ணு. அழகாகவும் இருக்கிறார். தமிழ் பேசுற ஒரு பொண்ணுக்கு தமிழ்சினிமா நிறைய வாய்ப்புகளை கொடுக்கணும். கஸ்தூரி சொல்ற மாதிரியில்ல. அவர் தமிழ்சினிமாவிலேயே பெரிய இடத்தை பிடிக்கணும்” என்று வாழ்த்தினார்.
அலைகள் ஓய்வதில்லை, காதல் பட வரிசையில் பள்ளிப் பருவத்திலே -யும் சேரும் போல இருந்தது பாடல்களும், அங்கு திரையிடப்பட்ட சில காட்சிகளும்!
விஜய நாராயணன் என்ற புதியவர்தான் இசை. பாடல்கள் தனி அட்ராக்ஷன் என்றால், அந்த பாடலுக்கான நடன அமைப்பு இன்னும் இன்னும் பிரமாதம்.
படம் பார்க்கிற ரசிகர்களையும் பள்ளி நாட்களுக்கு கூட்டிப் போகுமா பள்ளிப்பருவத்திலே?