கிடாரி விமர்சனம்
தட்டு முழுக்க உப்பையும், ஓரத்துல சாதத்தையும் வச்சு திங்கிற ஊர் போலிருக்கு! அவ்வளவு ரோசமும் ரத்தமாக பொத்துக் கொண்டு வழிகிறது படம் முழுக்க! மானத்தையும் வீரத்தையும் மட்டுமில்ல, துரோகத்தையும் துவையலா அரைச்சு தின்போம்ல… என்கிறது படத்தில் வரும் சில கேரக்டர்கள். வேறு வழி… படத்தின் மையக் கருத்தே துரோகம்தான்! விருதுநகர் சாத்தூர் ஏரியாவில் பெரிய தலைக்கட்டாக வளர்ந்து நிற்கும் கொம்பையா பாண்டியன், தன் கொம்பால் சீவியது எத்தனை பேரை? அதே கொம்பை ஒடித்து ஓரமாக படுக்க வைத்தது யார்? இதுதான் கிடாரி.
படத்தின் ஹீரோ வேண்டுமானால் கிடாரியாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் சுற்றி சுற்றி வருவதென்னவோ கொம்பையா பாண்டியனாக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தியைதான். ஒரு ராத்திரியில் கழுத்தில் குத்துப்பட்டு கிடக்கும் இவரை, குத்தியது யாராக இருக்கும் என்று துவங்குகிறது படம். இவனா இருக்குமோ, அவனா இருக்குமோ என்று பத்து நிமிஷத்துக்கு ஒரு கேரக்டராக திரைக்குள் கொண்டு வந்து, தடதடப்பு ஏற்படுத்துகிறார் அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன். இவரது கதை சொல்லும் யுக்தியில் என்னவோ வித்தை இருக்கிறதய்யா… பல திரைப்படங்களில் பார்த்த விஷயங்கள்தான். ஆனால் படபடக்கிறதே மனசு?
யூனிபார்ம் போடாத ராணுவமாக கொம்பையா பாண்டியனுக்கு துணை நிற்கிறார் சசிகுமார். கிடாரி இவர்தான்! ஆளை துளைக்கிற பார்வையும், ஆக்ரோஷமுமாக மீண்டும் ஒரு சுப்ரமணியபுரத்தை நினைவுபடுத்துகிறது அவரது பாடி லாங்குவேஜ். ஊரில் வெட்டி நாட்டாமை பண்ணும் ஓ.ஏ.கே சுந்தர் பிரதர்சை ஒன்றுமில்லாமல் ஆக்குகிற சசிகுமாரின் அலப்பறை, திகிலும் சிரிப்பும் கலந்த திகுதிகுப்பு. கொம்பையா பாண்டியனை கொல்ல வரும் ஒருவனை, போட்டு புரட்டியெடுத்து கடைசியில் ஒரு சுவற்றில் சமாதியாக்குகிற அந்த கைப்பக்குவம்…. படுபயங்கர த்ரில். காதல் காட்சிகளில் கூட, சண்டை சேவலாக முறுக்கிக் கொண்டு நிற்பதுதான் ‘மிடியல’ சார்.
ஒரு எழுத்தாளனுக்குள், இவ்வளவு பெரிய நடிகனும் இருக்கிறானா? பிரமிக்க வைக்கிறார் வேல.ராமமூர்த்தி. மனுஷன் புருவம் கூட நடித்துத் தள்ளுகிறது. கையில் வேல் கம்பை எடுத்துக் கொண்டு, வெளியே வந்து பீடுநடை போடும் அந்த ஒரு காட்சியில் தன் மொத்த திறமையையும் இறக்கி வைக்கிறார் அவர். க்ளைமாக்சில் பேசவே முடியாத நேரத்திலும் கூட, வெறுப்பையும் ஆற்றாமையையும் அவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்துகிறது அந்த கண்கள். பொருத்தமான படங்கள் அமைந்தால், ஒரு தேசிய விருதே கூட பிற்காலத்தில் நிச்சயம்.
வெகு காலம் கழித்து மீண்டும் திரையில் காட்சி கொடுக்கிறார் நெப்போலியன். நடிப்பெல்லாம் பக்கா! போட்டிருக்கும் சொக்காதான் “நான் அமெரிக்கா ரிட்டர்னாக்கும்” என்று அவரது நிஜ பந்தாவை காட்சிக்கு காட்சி காட்டுகிறது. அவர் வந்து போகிற பத்து நிமிஷத்தில் ஆறு சட்டை… அதுவும் புத்தம் புது சட்டையாக போட்டு மினுக்குகிறார். கதையோடு ஒட்டாத சட்டைகள் ஒவ்வொன்றும்!
இவரது மகனாக நடித்திருக்கிறார் கவிஞர் வசுமித்ரா. நடிகர் சங்கத்தில் மேலும் ஒரு உறுப்பினர் கார்டு!
வீடு கொள்ளாமல் நடமாடும் மனிதர்களுக்கு நடுவில், கொஞ்சமே கொஞ்சம் அழகு காட்டிவிட்டு போகிறார் ஹீரோயின் நிகிலா விமல். உன்னை மறுபடியும் வீட்டுக்கு கொண்டு வந்ததே நான்தான் என்பதை டயலாக்கே இல்லாமல் சசிகுமாரிடம் சொல்கிற காட்சியில், நடிச்சுட்டு போவட்டும்னு விட்டிருக்கிறார் டைரக்டர்.
எப்படியாவது கிடாரியையும், கொம்பையா பாண்டியனையும் கொன்றுவிட வேண்டும் என்று திட்டம் தீட்டும் சுஜா வாருணி, அதற்காக தன்னையே படுக்கையாய் விரிப்பதெல்லாம் துரோக சாம்ராஜ்ஜியத்தின் கேபிடல்! ‘நீ கத்தியா தூக்குனது என் முந்தானையதானே?’ என்று தன் கணவனிடம் அவர் சொல்லும்போது, ஐயோ பாவம்… என்று பரிதாபப்பட வைக்கிறார்.
எத்தனையோ வருஷங்களாக நடித்துக் கொண்டிருக்கும் கே.என்.காளைக்கு இந்த படத்தில் அற்புதமான வேடம். “துஷ்டி கேட்க வந்தேன். உன் பிள்ளையை கூப்பிடு… சொல்லிட்டு போறேன்…” என்று ஒரு கடத்தல் சம்பவத்தை அப்பனின் காதுக்கு கடத்திவிட்டு போகிற அழகு, சூப்பர்ய்யா!
எவ்வளவுதான் ரத்தம் தெளிக்கும் படமாக இருந்தாலும், மதனி, வளர்ப்பு அம்மா, என்று பாசப்பிணைப்பையும் பதநீர் போல தெளித்திருக்கிறார் டைரக்டர் பிரசாத் முருகேசன். கொம்பையா பாண்டியன், தன் மகனின் பிணத்தை புரட்டி தள்ளிவிட்டு அடியில் கிடக்கும் தன் செருப்பை மாட்டிக் கொண்டு போவது போல ஒரு காட்சி. இது போல கிடைக்கிற சின்ன சின்ன சந்தர்ப்பங்களில் கூட, ‘டைரக்டோரியல் டச்’ கொடுத்திருக்கிறார் டைரக்டர்.
ஒரு கேரக்டரை மேய்ந்து அப்படியே மெல்ல டிராவல் ஆகி, இன்னொரு கேரக்டரில் நிலை பெற்று, அர்த்தத்தோடு நடந்து நடந்து கதை சொல்லும் அழகில் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, பிரம்மாதம்!
தமிழுக்கு மேலும் ஒரு நல்வரவு இசையமைப்பாளர் தர்புகா சிவா. பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி. கவனிக்க வைக்கிறார்.
ஒவ்வொரு ஷோ முடிந்த பின்பும், தியேட்டர் ஸ்கிரினை சோப்பு போட்டு கழுவ வேண்டுமோ என்கிற அளவுக்கு வன்முறை! தென் மாவட்டங்களின் ‘செய்முறை’ அதுதானோ என்கிற அளவுக்கு இருக்கே… அது சரியாண்ணே?
-ஆர்.எஸ்.அந்தணன்
To listen audio click below ;-
https://www.youtube.com/watch?v=VMRa6CmT5uw&feature=youtu.be