அனிமேஷன் படத்தில் ஜெயலலிதா! அந்த சிற்பிய மட்டும் கிட்ட சேர்த்துராதீங்கய்யா…

சித்திரமே பேப்பரை கெடுத்த கதையாகிவிட்டது மறைந்த முதல்வரும் இந்தியாவின் இரும்புப் பெண்மணியுமான ஜெ.வுக்கு வைத்த சிலை. நாலாபுறத்திலிருந்து கூடி நின்று கும்மியடித்துவிட்டார்கள். ஜெயலலிதா சிலையை வடிக்கச் சொன்னா, வடிவுக்கரசி சிலையை வடிச்சுட்டீங்களே… என்று சிலையை அமைத்த மந்திரிகளுக்கும் திட்டு. சோஷியல் மீடியாவில் திட்டுகள் தொடர்ந்த அதே நாளில்தான் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் பிரஸ்மீட்.

எம்.ஜி.ஆரை கிராபிக்ஸ் மூலம் நடிக்க வைக்கவிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது சாட்சாத் ஜெயலலிதாவேதான். இரு பெரும் இமயங்கள் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு இப்பவே ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் மட்டுமல்ல… நாடெங்கிலும் பெருத்த எதிர்பார்ப்பு. டி.இமான் இசையில் எம்.ஜி.ஆர் படங்களில் வருகிற அதே ஸ்டைலில் பாடல்கள் உருவாக்கப்படும் என்றார் டைரக்டர் அருள்மூர்த்தி. பல வருஷங்களாக கிராபிக்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கிறார் இவர்.

வால்ட் டிஸ்னி போன்ற நிறுவனங்கள் வருடக்கணக்கில் செய்கிற வேலையை, ஆறு மாதத்தில் முடிக்கிற கெப்பாசிடி எனக்கு இருக்கு என்று இவர் சொன்னதை சற்று ஷாக்கிங்கோடு கவனித்த பிரஸ், அந்த கேள்வியை கேட்டேவிட்டது.

காலையிலிருந்தே ஜெயலலிதாவின் சிலை குறித்து தன் அதிருப்தியை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகிறார்கள் மக்கள். உங்கள் படத்தில் ஜெயலலிதாவையும், எம்ஜிஆரையும் தத்ரூபமாக காட்டிவிடுவீர்களா? அந்த நம்பிக்கை இருக்கா? இதுதான் கேள்வி.

நிச்சயமா? அவங்களை எப்படி இதற்கு முன் திரையில் பார்த்து வந்தீர்களோ, அதில் துளி கூட மாற்றம் இருக்காது. இது உறுதி உறுதி என்றார் அருள்மூர்த்தி.

எதுக்கும் ஜெ-வின் சிலையை அற்புதமாக வடிவமைத்த அந்த சிற்பி அந்தப்பக்கம் வந்தால் மட்டும் உஷாரா இருங்க சார்.

பின்குறிப்பு- இப்படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ், படத்தின் லாபத்தை நடிகர் சங்க கட்டிடத்திற்காக கொடுத்துவிடுகிற ஐடியாவில் இருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தென்னிந்தியாவின் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்களுக்காக முதல் ஆன்லைன் வர்த்தகம்

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com)...

Close