வந்த இடத்துல வாய வச்சுகிட்டு சும்மாயில்லாம! இவரு வேற…

புரட்சித்தலைவி ஜெ. வின் மறைவுக்கு பின், வறட்டுக் கூட்டமொன்று தனித்தனியாய் கிளம்பிவிட்டது. எல்லாருக்குமே ‘நானே தலைவன்… நானே புலவன் …’ என்ற நினைப்பு வந்துவிட்டது. விளைவு? டி.வி.யை திறந்தால் உபன்யாசங்களும், பஜன் கோஷங்களும் வெளுத்து வாங்குகிறது. போதாக்குறைக்கு இந்த யு ட்யூப் ஆட்கள் வேறு. யாரெல்லாம் மைக் முன்னால் தங்களது புடைத்த மூக்கை நீட்டுகிறார்களோ, கொண்டு போய் அதன் மேல் பிக்ஸ் பண்ணிவிடுகிறார்கள் அந்த மைக்கை.

அப்படியொரு திடீர் போதகராக மாறியிருக்கிறார் நடிகர் ஆனந்த ராஜ். சினிமாவை பொறுத்தவரை அவரது காமெடி ப்ளஸ் வில்லத்தனத்தை ரசிக்கிற கூட்டம், அவரது அரசியல் அட்வைசையும், தனக்கு பின்னால் ஒரு கோடி தொண்டர்கள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் உளறி வைப்பதையும் காண சகிக்காமல் தவித்து வருகிறது.

இந்த உண்மை எதுவும் புரியாமல் நேற்றும் தனது பீரங்கி வாயால் சுட்டுத்தள்ளினார் ஆனந்த ராஜ். இடம்- பிரசாந்த் நடித்த ஜானி படத்தின் பிரஸ்மீட்.

ஜானிக்கே ஜன்னி வரவழைத்த கொடூர நேரமிது.

“சினிமா போஸ்டர் ஒட்டுனா அதை கிழிச்சுட்டு அதன் மேல கட்சி பேனர் எழுதுறாங்க. இப்படி பேனர் எழுதறவங்க மாநகராச்சிக்கு வரியா செலுத்துறாங்க?” என்று ஆனந்தராஜ் கேட்க, நிலைமை ரசாபசமானது. இதையொட்டிய விவாதங்களும் எழுந்தது. நம்ம படத்தை பற்றி நாலு வார்த்தை நல்லதா பேசுவோம். அதுல மூணு வார்த்தையை முழுசா முழுங்கிட்டு ஒத்தை வார்த்தையாவது உருப்படியா எழுதுவானுங்க என்று நம்பிக் கொண்டிருந்த தியாகராஜன் அண் பிரசாந்துக்கு இந்த விவாதம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் நடுவில் புகுந்து நண்டுவாக்கிளி போல கடிக்க முடியாதே?

கோபத்தை அடக்கிக் கொண்டு காத்திருந்தார் மிஸ்டர் மம்மட்டியான். எப்படியோ? வந்த இடத்தில் தனது முகம் நன்றாக கேமிராவில் படும்படி உறுமிவிட்டு கிளம்பினார் ஆனந்தராஜ்.

ஏன்ங்க…ஆன்ஸ். நீங்க கூப்பிட்டா வீட்டுக்கே வந்து வெள்ளையடிக்க ஓராயிரம் யு ட்யூப் சேனல் இருக்கே? அப்புறம் ஏன்… இங்கேயும் வந்து இம்சிக்கிறீங்க?

Read previous post:
அந்த ஜானிக்கும் இந்த ஜானிக்கும் சம்பந்தமேயில்ல! பிரசாந்த் பதில்!

Close