வர்லாம் வர்லாம் வா! இப்படிக்கு நல்ல பட ரசிகர்கள்!
‘வர்லாம் வர்லாம் வா…’ என்று காத்திருக்க வைக்கிற படங்கள் தமிழில் எப்போதாவதுதான் வரும். அதிலும் பிரபல நடிகர்கள் இல்லாமல், பிரபல இயக்குனர் இல்லாமல், பிரபல தயாரிப்பு நிறுவனம் இல்லாமல்… கோடம்பாக்கத்தின் ரத்தினங்களெல்லாம் சேர்ந்து பாராட்டிய திரைப்படம் என்கிற ஒரே ஒரு காரணத்திற்காகவே காத்திருப்பது எவ்வளவு பெரிய சுகம்!
விரைவில் தியேட்டருக்கு படத்தை வரவழைப்பதற்கான சாவியே நேற்றுதான் ரெடியானது. யெஸ்…
‘மிக மிக அவசரம்’ படத்திற்கு நேற்றுதான் சென்சார்! பாரதிராஜா, வெற்றிமாறன், ராஜு முருகன், உள்ளிட்ட தமிழ்சினிமாவின் ஆளுமைகள் இப்படத்தை பார்த்துவிட்டு, ‘அடடா… அற்புதம்’ என்று கூறிவந்தார்கள். அதுமட்டுமல்ல, ‘இந்த படத்தை நானே எனது பேனரில் வெளியிடுகிறேன்’ என்று படத்தை பார்த்த மறுவிநாடியே டீல் பேசிவிட்டார் வெற்றிமாறன்.
அப்படிப்பட்ட படம் சென்சாருக்குப் போனால் என்ன கிடைக்கும்? எப்போது பார்த்தாலும் கத்தரிக்கோலும், கடு கடு முகத்தோடும் காத்திருந்தவர்களுக்கு, ஏப்ரல் மாத வெயிலில் சோவென மழையடித்து, அதை பாக்கெட்டுக்குள்ளும் பதுக்கிக் கொண்ட மாதிரி சந்தோஷம். ‘மிக மிக அவசரம்’ படத்திற்கான பாராட்டுகளை படத்தின் இயக்குனர் சுரேஷ் காமாட்சியே கூசி வெட்கப்படுகிற அளவுக்கு அள்ளித்தந்தார்களாம் அதிகாரிகள்.
சென்சார் அதிகாரிகளே பாராட்டிவிட்டார்கள் என்று உப்புமா படங்களுக்குக் கூட விளம்பரம் செய்து வந்த கொடுமைகளை காணாத ஆள் இல்லை நாம். இருந்தாலும், இந்த பாராட்டு நிஜத்தின் அம்சமாக இருக்கும் என்று நம்பலாம்.
ஏனென்றால் இந்த அதிகாரிகளுக்கு முன்பே இப்படத்தை பாராட்டிய பாரதிராஜாவும், வெற்றிமாறனும், ராஜுமுருகனுமே நமக்கு சாட்சி!
க்ளீன் யு சர்டிபிகேட் வாங்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’, அதே அவசரத்துடன் திரைக்கு வந்தால் சிறப்பு.
குளத்தில் தண்ணி இருக்கும் போதே அல்லி பூக்கறதுதானே அழகு! கமான் ஃபார்ஸ்ட்!