கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14 ஆர்.எஸ்.அந்தணன் பதவி தந்தார் அஜீத் பசியாற்றியது பிளாட்பாரம்
‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம் பகுதியிலிருக்கிற அம்மா உணவகம்தான் இன்று தாய் போல பல உதவி இயக்குனர்களின் பசியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஐம்பது ரூபாய் பேட்டா வாங்குகிற உதவி இயக்குனர்கள் கூட அந்த பணத்தை சேமித்து வைத்து ஷுட்டிங் இல்லாத நாட்களில் இங்கு பசியாறுகிறார்கள். மூன்று வேளை சாப்பாட்டு செலவையும் சேர்த்தாலே முப்பது ரூபாயை தாண்டுவதில்லை.
அம்மா உணவகங்கள் வருவதற்கு முன்பு மட்டுமல்ல, இப்போதும் கூட உதவி இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் அட்சய பாத்திரமாக விளங்குவது கையேந்தி பவன்கள் என்று சொல்லப்படும் பிளாட்பாரக் கடைகள்தான். இப்பவும் கோடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சில கையேந்திபவன்கள் பக்கம் போனால், இட்லி, சட்னி ருசிகளுக்கு மத்தியில் காரமாக கதை பேசிக் கொண்டிருக்கும் இளைஞர்களை பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன் நான் ஒரு வார பத்திரிகையில் பணியாற்றி வந்தேன். அப்போது பக்கம் முடிக்கிற நாட்களில் வேலை நள்ளிரவு வரை நீடிக்கும். பத்து பேராக சேர்ந்து சாப்பிட போனால் என்னாவது? கையேந்தி பவன்கள்தான் எங்கள் ஆசிரியர் குழு மொத்தத்திற்கும் பிளேட் கொடுக்கும். ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு செல்லும்போதெல்லாம் இரவு சாப்பாட்டுக்காக அங்கே வருவார் இன்று பிரபல இயக்குனராக விளங்கும் எஸ்.ஜே.சூர்யா. அப்போது அவர் ‘வாலி’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். பெரும் கஷ்ட நிலையில்தான் அந்த படம் வளர்ந்து வந்தது. அஜீத் வெளிப்படங்களில் நடித்து அதில் வரும் பணத்தை கொண்டுதான் இப்படத்தை உருவாக்கினார்.
‘நேருக்கு நேர்’ படத்தில் அஜீத் நடிக்க வேண்டிய ஒரு கேரக்டரில் அவரை நீக்கிவிட்டு சூர்யாவை நடிக்க வைத்தார் இயக்குனர் வசந்த். அந்த கோபத்தில் வசந்திடம் இணை இயக்குனராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் அஜீத். கொடுத்தது மட்டுமல்ல, பண பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருந்த படத்தை தானே பணம் புரட்டி வளர வைத்தார். இப்படி வருடக்கணக்கில் வளர்ந்த குழந்தைதான் அந்த வாலி. (ச்சும்மா ஒரு இடை சுவாரஸ்யத்திற்காக இந்த தகவல்)
தனது உதவி இயக்குனர் பரிவாரங்களுடன் அந்த சாலையோர கையேந்தி பவனில்தான் சாப்பிட வருவார் எஸ்.ஜே.சூர்யா. இன்று வானுயர கட்டிடங்கள் வளர்ந்துவிட்டது. திரும்புகிற இடமெல்லாம் செல்வ செழிப்போடு இருக்கிறது கோடம்பாக்கம். ஒரு விஷயத்தில் நிம்மதி. இந்த கையேந்தி பவன்கள் மீது கை வைக்கவில்லை மாநகராட்சி. வைத்திருந்தால் அது நேரடியாக உதவி இயக்குனர்களின் வயிற்றிலேயே கை வைத்த மாதிரிதான் என்ற உண்மை அவர்களுக்கும் புரிந்திருக்கிறது!
பெருகி வரும் விலைவாசி. வீட்டு வாடகை. இதையெல்லாம் சமாளித்து இங்கே அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே இவர்களுக்கு ஒரு படத்தை இயக்கிய சந்தோஷத்தை கொடுக்கிறது என்பதுதான் சகித்துக் கொள்ளவேண்டிய உண்மை. முன்பு வடபழனியை சுற்றி வாடகைக்கு குடியிருந்த உதவி இயக்குனர்கள் இன்று வாடகை பிரச்சனையால் இடம் மாறிவிட்டார்கள். பல கிலோ மீட்டர்கள் தள்ளிப் போய் வாழ வேண்டிய துர்பாக்கியம். எனக்கு தெரிந்த ஒரு உதவி இயக்குனர் காஞ்சிபுரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறார். இன்னொருவர் அரக்கோணத்திலிருந்து. எப்படிதான் தினந்தோறும் அவ்வளவு து£ரம் போய் வருகிறார்களோ?
தங்கர்பச்சான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் போதும் சரி, கிடைத்து பணியாற்றிக் கொண்டிருந்த போதும் சரி. சொந்த ஊரான கடலு£ரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். சென்னைக்கும் கடலு£ருக்கும் பஸ் பாஸ் வாங்கி வைத்துக் கொண்டு பேருந்துகளிலேயே பல வருடங்களை கழித்தவர் இவர். இவரை போன்றவர்கள் எல்லாம் இலக்கை மட்டுமே குறி வைக்கிற அர்ஜுனன்கள் என்பதால்தான் இந்த போக்குவரத்து போராட்டம் வெகு சுலபம் ஆனது.
யாரிடமாவது உதவி இயக்குனராக சேர வேண்டும் என்றால் அவர்கள் கேட்கிற முதல் கேள்வி, தம்பி வீடு எங்க இருக்கு? அல்லது ரூம் எங்க இருக்கு? பைக் வச்சுருக்கியா? என்ற கேள்விகள்தான். நள்ளிரவு வரை பணியாற்றிவிட்டு செல்ல வேண்டும். அதிகாலையில் வந்து நிற்க வேண்டும். இரண்டுக்கும் சவுகர்யமான து£ரத்தில் இந்த உதவி இயக்குனர் இருக்க வேண்டும். இதுதான் வேலைக்கு சேர்த்துக் கொள்ள நினைப்பவர்களின் எண்ணம். அவசியம் கருதிய இந்த கேள்விகளுக்கு இந்த உதவி இயக்குனர்களால் என்ன பதில் சொல்ல முடியும்?
தமிழ் சினிமாவிலேயே ரொம்ப சபிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். நள்ளிரவில் கூட ஷுட்டிங் முடிந்து எல்லாரும் சென்ற பின் கடைசி ஆளாகதான் இவர்கள் கிளம்ப வேண்டும். அதிகாலை ஷுட்டிங்காக இருந்தால் முதல் ஆளாக இவர்கள்தான் நிற்க வேண்டும். இடைபட்ட நேரத்தில்தான் உறக்கம், கனவு, இத்யாதி எல்லாம்!
இப்பவும் வெற்றி பெற்ற இயக்குனர்கள் கொடுக்கிற பேட்டியை கேட்டால் ஒரு விஷயம் புரியும் நமக்கு. அத்தனை பேரும் சிறு சிறு குழுவாகதான் வாழ்ந்திருக்கிறார்கள் இந்த சென்னையில். வாழ்ந்தும் வருகிறார்கள். வாடகையை சமாளிக்க, கதை விவாதம் செய்ய, வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ள என்று இந்த குழு வாழ்க்கை அவர்களுக்கு அரு மருந்தாக இருக்கிறது.
பெரும் வெற்றியடைந்த ‘களவாணி’ படத்தின் டைரக்டர் சற்குணமும், அப்படத்தில் கதாநாயகனாக நடித்த விமலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நண்பர்கள். வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், சினிமா அவர்களை ஒன்று சேர்த்தது. ஒரே அறையில்தான் வாழ்க்கை ஓடியது. இருவரில் யாருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்து முன்னேறுகிறார்களோ, அவர் மற்றவரை கை து£க்கிவிட வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டார்கள். பசங்க படத்தில் விமலுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பே சற்குணத்திற்கும் களவாணி படம் இயக்குகிற வாய்ப்பு வந்தது. முன்பே தீர்மானித்தபடி விமல்தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளரை சம்மதிக்க வைத்தார் சற்குணம். இருவருமே வெற்றிப்படிக்கட்டில் நிற்கிறார்கள் இப்போது.
இன்றைய முன்னணி இயக்குனர் லிங்குசாமி பல வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் சிறு அறையில் தங்கியிருந்தார். அவரோடு தங்கியிருந்த நண்பர்களில் நந்தா பெரியசாமி, பிருந்தாசாரதி ஆகியோர் இன்று இயக்குனராக தங்கள் லட்சியத்தை அடைந்துவிட்டார்கள். (படம் வெற்றியா? தோல்வியா? அது வேறு விஷயம்) அப்போது லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திர போஸ் என்பவர்தான் தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் சம்பளத்தில் தன் தம்பியின் கனவுகளை நிறைவேற்ற உதவிக் கொண்டிருந்தார். இன்று லிங்குசாமியின் படக்கம்பெனிக்கு முதலாளி இந்த சுபாஷ்தான்.
சீமானின் அறையில் எப்போதும் இளைஞர்கள் கூட்டம் ஒன்று இருந்து கொண்டேயிருக்கும். அது அவரே வாய்ப்புக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்த காலம். இருந்தாலும், தனது உழைப்பில் வருகிற பணத்தை இவர்களுக்கு இலவச சாப்பாடு போட்டே அழிப்பார் சீமான். அதில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம். இப்படி அங்கு தங்கியிருக்கும் உதவி இயக்குனர்கள் சக தோழர்களின் சட்டையை கூட போட்டுக் கொண்டு சென்றுவிடுவார்கள். சில நேரங்களில் சீமானின் சட்டையையும் சேர்த்து! ‘இங்கதானடா சலவை செஞ்சு வச்சுருந்தேன். சரி… யாரோ ஒரு தம்பி போட்டுட்டு போயிருக்கான் போலிருக்கு’ என்று அவர்களின் சுதந்திரத்தை சுலபமாக சகித்துக் கொள்கிற பெரிய மனசு இருந்தது அவருக்கு.
இன்று பெரிய இடத்திலிருக்கிறார் சீமான். ஆனால் தனது ஆரம்பகால அவஸ்தையை அவர் நினைத்துக் கொள்ள தவறியதேயில்லை. அது பற்றி மேடைகளில் வெளிப்படையாக பேசவும் வெட்கப்பட்டதில்லை. சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடித்த நாடோடி வம்சம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அப்போது சிங்க முத்துவை பற்றி அவர் பேசியது நெகிழ்ச்சி.
‘நானும் என்னோட உதவி இயக்குனர்களா இருந்த தம்பிகளும் ரொம்ப வறுமையில கிடந்த காலம் அது. திடீர்னு சிங்க முத்து அண்ணே வருவாரு. அப்ப அவரும் பெரிய நடிகராக வளராத நேரம். இருந்தாலும், எங்க முகத்தை பார்த்ததுமே, ‘தம்பிங்க கறிசோறு தின்னு ரொம்ப நாளாச்சு போலிருக்கு. வாங்கடா’ன்னு வீட்டுக்கு அழைச்சுட்டு போவாரு. இன்னைக்கு எவ்ளோ இடத்துல சாப்பிடுறேன். அண்ணி கையால அன்னைக்கு சாப்பிட்ட ருசி எங்கேயும் கிடைக்கலே…’ என்றார்! கூடி வாழ்ந்தது மட்டுமல்ல, பசியில் கூட கூடி உண்டு வாழ்ந்தவர் சீமான்.
கவிஞர் அறிவுமதியின் தியாகம் இன்னும் பெரிசு. இவரது அலுவலகத்தில் எப்போதும் வந்து போய் கொண்டிருப்பார்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சிய வெறி கொண்ட இளைஞர்கள். இவர்களின் திறமையை பார்த்து யாரிடமாவது அசிஸ்டென்ட் டைரக்டராகவோ, பாடலாசிரியராகவோ சேர்த்துவிடுவார் அறிவுமதி. இவரது அலுவலகத்தில் இலவசமாக உண்டு, உறங்கி இன்று மிகப்பெரிய இடத்திலிருக்கிறார்கள் அநேக இயக்குனர்கள். என் தம்பிங்க நிறைய பேரு எழுதுறாங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. நான் ஒதுங்கியிருக்கேன் என்று பல வருடங்களாக பாடலே எழுதாமல் இருந்த அற்புதமான மனம் கொண்டவர் அறிவுமதி. பல வருட இடைவெளிக்கு பிறகு வற்புறுத்தி இவரை மீண்டும் பாடல் எழுத வைத்தவர் டைரக்டர் கரு.பழனியப்பன்தான்.
அறிவுமதி, பாலாவை பாலுமகேந்திராவிடம் சேர்த்துவிட்டதே தனி கதை. அப்போது அறிவுமதி பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். ஒவ்வொரு நாளும் பாலாவையும் ஷுட்டிங்குக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அங்கு போகிற பாலா படப்பிடிப்பிற்கு தேவையான வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். ஷுட்டிங் களேபரத்தில் யார் இந்த வாலிபர் என்பதை கூட கவனிக்காமல் தனது வேலையில் கவனமாக இருப்பார் பாலுமகேந்திரா. இப்படியே நாட்கள் பல கடந்தது. ஒரு நாள் டைரக்டரின் வீட்டுக்கு பாலாவை நேரடியாக அழைத்துச் சென்ற அறிவுமதி, இவன உங்ககிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்கணும் என்று சொன்னார். அவரை ஏற இறங்க பார்த்த பாலுமகேந்திரா, ‘தம்பி இதுக்கு முன்னாடி யாருகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தே?’ என்று கேட்க, பாலா சொன்ன பதில்தான் தமாஷ்.
“உங்ககிட்டதான்…!”
உதவி இயக்குனர்களின் அவலத்தை நன்கு உணர்ந்தவர் கவிஞர் அறிவுமதி. அவர்களுக்காகவே உதவி இயக்குனர்களின் குரல் என்றொரு பத்திரிகையை தொடங்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அதை துவங்கவே முடியாமல் போனது அவரால்.
ரட்சகன், ஜோடி ஆகிய படங்களில் டைரக்டர் பிரவீன்காந்த் யூனிட்டில் உதவி இயக்குனராக இருந்தவர்கள்தான் ஏ.ஆர்.முருகதாஸ், வெண்ணிலா கபடிக்குழு சுசீந்திரன், எஸ்எம்எஸ் பட இயக்குனர் ராஜேஷ், மலையன் பட இயக்குனர் கோபி ஆகியோர். இந்த கோபிக்கு முன்னாலேயே படம் இயக்குகிற வாய்ப்பு கிடைத்து வெற்றிக் கொடியும் நாட்டிவிட்டார் முருகதாஸ். ஆனாலும் தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களுக்கு எந்த நேரத்திலும் உதவி செய்ய தயாராக இருந்தார் அவர்.
கரண், ஷம்மு நடித்த ‘மலையன்’ என்ற படத்தை இயக்கிய பின்பும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தது கோபியை. எது? வறுமையும் விதியும். ஆனால் அதற்கப்புறமும் ரூம் வாடகை, மெஸ் பில் ஆகியவற்றை முருகதாஸ், சுசீந்திரன் மாதிரி இவருடைய ஆரம்ப கால தோழர்கள்தான் கவனித்துக் கொண்டார்கள். ஒரு எஸ்எம்எஸ் அனுப்புனா போதும். நான் இருக்கிற இடத்துக்கே பணத்தை கொடுத்தனுப்புற அன்பு தோழர்கள் இவங்க. நீ ஜெயிக்கிற வரைக்கும் உன்னை பார்த்துக்கறது எங்க பொறுப்பு. நீ முயற்சியை கைவிட்றாதே என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். நானும் முயன்று கொண்டேயிருக்கிறேன் என்கிறார் கோபி. இப்போது கஞ்சா கருப்புடன் இணைந்து வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார் கோபி.
எனவே இயக்குனராகும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களே, இந்த குழு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாரம் குறையும். பலன்கள் விளையும்.
சிலர் உதவி இயக்குனராக சேர்வதற்கே பல காலம் ஆகும். அப்படியே சேர்ந்து ஒரு சில படங்களில் பணியாற்றியிருந்தாலும் அவருக்கென்று தயாரிப்பாளர் கிடைத்து தனியாக படம் இயக்குவது என்பது அடுத்ததாக ஏழு கடலை தாண்டி கிளி இறக்கையை தொடுகிற மாதிரி கஷ்டமான காரியம். இந்த இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்து கானல் நீர் குடிக்க அலையும் உதவி இயக்குனர்களின் கதையை கேட்டால் கங்கை- காவிரி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவ்வளவு கண்ணீர் நிரம்பியதாக இருக்கும் அது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எவ்வளவு பெரிய கவிஞர்? அவரது ரத்த சம்பந்தப்பட்ட உறவுதான் பரமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இருபது ஆண்டுகளாக பரமுவின் முயற்சி எப்படியாவது ஒரு படத்தை இயக்கிவிட வேண்டும் என்பது. அவர் ஏறாத ஆபிஸ் இல்லை. இவரது கதையை கேட்காத காதுகள் இல்லை. ஆனால் வாய்ப்புதான் வந்தபாடில்லை. ஏன்? இவர் ஒரே ஒரு கதையை மட்டுமே வைத்துக் கொண்டு அதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவருக்காக தயாரிப்பாளர்களிடம் யாராவது பரிந்துரைத்தால் கூட, ‘புத்தாண்டை வரவேற்க ஆயிரக்கணக்கான பேர் பீச்சுக்கு போவாங்களே. அந்த கதைதானே, அந்த தம்பிய நல்லா தெரியுமே?’ என்பார்கள். இவரது ஒரே பலவீனம் இதுதான். இந்த கதை ஜெயிக்கும். இந்த கதைதான் என்னுடைய முதல் படமா இருக்கணும் என்ற பிடிவாதம்தான்.
வெற்றியை மட்டுமே கனவாக காணுகிற ஒரு உதவி இயக்குனர் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். ஓய்வு நேரங்களில் நிறைய கதைகளை உருவாக்க வேண்டும். ‘இந்த கதை இருக்கட்டும். வேற கதை இருக்கா?’ என்று தயாரிப்பாளர் கேட்டால் பட்டென்று இன்னொன்றை சொல்கிற அளவுக்கு பல கதைகளோடு தன் முயற்சியை தொடர வேண்டும். அப்படியில்லை என்றால் பரமுவின் நிலைமைதான்.
சமீபத்தில் அவரை பார்த்தபோது, ‘ஊருக்கே போயிரலாம்னு இருக்கேன். இந்த முப்பது வருஷ வாழ்க்கை வீணா போச்சு’ என்றார். திருமணம் ஆகவில்லை. வேறு தொழில் தெரியாது. ஊரில் இருந்த கொஞ்ச நஞ்ச நிலமும் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் கரைந்துவிட்டது.
என்ன செய்வார் பரமு?
(தொடர்ந்து கூப்பிடுவேன்…)
எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி
எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.
Sir Arumai ungaludaye indha padippu aarambathil irunthu padikkiren,mudalil ungalai patri konjam sollungal,migavum arumaiya eludiringa