பெண் இயக்குனர்களுக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் மரியாதை இதுதானா?

தமிழ்சினிமாவில் பெண் இயக்குனர்களின் அந்தஸ்தை சுதா கொங்கராவுக்கு முன், சுதா கொங்கராவுக்கு பின் என்றுதான் பிரிக்க வேண்டும். எந்த பெண் இயக்குனரும் தத்தமது படைப்புகளுடன் வந்தாலும் கிளிஷேவாகதான் படம் எடுத்துத் தள்ளுவோம் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் இறுதிச்சுற்றும், சுதாவும் வாராது வந்த மா மணிகள்தான்! லேட்டஸ்ட்டாக சுதாவின் பெயரை கெடுக்காதளவுக்கு ஒருவர் வருவார் போலிருக்கிறது. (அல்லது அதுக்கும் மேல) அவரது கம்பீரமான பேச்சும், உறுதியான நம்பிக்கையும் அப்படிதான் எண்ணம் கொள்ள வைத்தது நம்மை.

சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய உஷா கிருஷ்ணன்தான் அவர்.

சிதம்பரம் அருகிலிருக்கிற குக்கிராமத்திலிருந்து கிளம்பி முதுகலை பட்டம் பெற்று, “ஒரே லட்சியம் சினிமாதான்” என்று வந்து சேர்ந்திருக்கிறார். பாண்டியநாடு, ஜீவா ஆகிய படங்களில் பணியாற்றியவருக்கு தனியாக படம் பண்ண வேண்டும் என்ற ஆசை வந்ததும் ஒவ்வொரு ஹீரோவாக சந்தித்து கதை சொல்லக் கிளம்பினாராம். பல முன்னணி ஹீரோக்கள் வீட்டு கதவு திறக்கவேயில்லை. சிலர் வருஷக்கணக்காக அலையவிட்டார்கள். அந்த நேரத்தில்தான் பூ படத்தில் துவங்கி சண்டி வீரன் வரைக்கும் ஆறேழு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிஜி.முத்தையாவிடம் கதை சொல்லியிருக்கிறார் உஷா. அவருக்கும் கதை பிடிக்க, அதற்கப்புறம் அவரது சிபாரிசின் பேரில் கூட சில பல ஹீரோக்களை சந்தித்திருக்கிறார். கதை சொல்லியிருக்கிறார். ம்ஹும்… ஒரு பூவும் உதிரவில்லை.

ஒருமுறை விஜய் சேதுபதிக்கே கூட போன் அடித்தாராம் உஷா. வருஷக்கணக்காக அலைய விடும் நடிகர்கள் மத்தியில் இவர் வெல்லக்கட்டி. ஒரே வாரத்தில் அழைப்பு வந்துவிட்டது. முழு கதையையும் கேட்டாராம் அவர். ஆனால், “இந்த கதை எனக்கு பொருத்தமா இருக்குமான்னு தெரியல. ஆல் தி பெஸ்ட்மா”ன்னு சொல்லி அனுப்பினாராம். ஒரு நடிகருக்கு கதை கேட்பதை தவிர வேறென்ன முக்கிய வேலை இருக்கப் போகிறது? என்ற அலுப்பு சலிப்பான கேள்விக்கெல்லாம் பதில் சொல்வது போல, உஷாவை ஒரே வாரத்தில் அழைத்து கதை கேட்ட அந்த பெருந்தன்மைக்காகவே அவருக்கு ஒரு பாராட்டு. (அப்புறம் ஏண்டா இப்படியொரு தலைப்பு?)

தன் வாழ்வில் நடந்த சொந்தக் கதையைதான் இப்போது ‘ராஜா மந்திரி’ என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் உஷா கிருஷ்ணன். கலையரசன், காளி வெங்கட் இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். ஷாலின் என்ற கேரள நடிகையை இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் உஷா.

“அதென்னங்க தமிழ் பொண்ணுங்களை தேடாம கேரளாவுக்கு போயிட்டீங்க?” என்றால், “நல்லா பாருங்க… ஷாலின் என்னை மாதிரியே இருக்காருல்ல?” என்கிறார் உஷா.

ஓ… கதை அப்படி போகுதா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நயன்தாரா ஜெயிக்கிறார்னா சும்மாயில்ல!

ஹீரோ ஹீரோயின்களுக்கு கதை சொல்லுதல் என்பதே பெரிய அனுபவமாக இருக்கும் ஒவ்வொரு இயக்குனருக்கும். அதுவும் ஆரம்ப நிலையிலிருக்கும் இயக்குனர்கள் என்றால் ஆறிப்போன தோசையை ஊற வச்சு ஊட்டுனாலும்...

Close