லாரன்ஸ் கேட்டார் ரஜினி என்ன சொன்னார்?
லாரன்ஸ் மனதில் ரஜினிக்கு எப்பவுமே ஸ்பெஷல் சிம்மாசனம்தான்! அவருடன் சேர்ந்து நடிக்கணும். அதிலும் அவருக்கு தம்பியாக என்றெல்லாம் ஆசைப்பட்டவருக்கு இன்று வரை ஏமாற்றம்தான் பதில். ஆனாலும் காலத்தை விட சிறந்த கிஃப்ட் வவுச்சர் ஏது? விரைவில் அது நடக்கும். ஆனால் அதற்கு முன்பே தாயினும் பெரிய ஸ்தானத்தை ரஜினிக்கு ஏற்படுத்தித்தர முன் வந்திருக்கிறார் லாரன்ஸ்.
எல்லாரும் அவரவர் அம்மாவுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது இயற்கைதான். மகன்கள் ஒரு தீக்குச்சியை தூக்கினால் கூட தாங்காத அம்மாக்கள்தான் நாட்டில் அதிகம் என்பதால், இவர்கள் செய்யும் எல்லா ஸ்பெஷலும் அம்மாவின் அன்பின் முன் அடிபட்டு போய்விடுவது தனி. சரி, விஷயத்துக்கு வருவோம்.
தாய் வாழும்போதே அவருக்கு கோவில் கட்டிவிட முன் வந்த லாரன்ஸ்தான், பலரையும் ஆச்சர்யப்பட வைத்தவர். இப்படியொரு செயலை இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? உலகத்தில் எங்காவது நடந்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்தால் கூட, மிக மிக அரிதாகவே கிடைக்கும் அத்தகவல். இந்த அரிய பெரிய விஷயத்தை மளமளவென செய்து கொண்டிருக்கும் லாரன்ஸ், அங்கு அமையவுள்ள அம்மாவின் சிலையை அந்த அம்மாவிடமே மினியேச்சர் வடிவத்தில் கொடுத்து பிரமிக்க வைத்ததெல்லாம் தாய்குலங்களை நாள் முழுக்க பேச வைத்த நல்ல காரியம். நல்லவேளை… லாரன்ஸ்சுக்கு வாய்த்த மனைவிகள் நல்லவர்கள் என்பதால் இது நடந்தது. (ஏன்யா சிங்குலர்ல சொல்லாம புளுரல்ல போட்டுத் தாக்குற?)
இப்படி அமையப்போகும் கோவிலை திறந்து வைக்க சகல பொருத்தமான ஒருவர் வேண்டும் என்று தேடக்கூட இல்லை லாரன்ஸ். பளிச்சென்று முடிவெடுத்துவிட்டார்… அந்த கைகள் ரஜினியின் கைகளாகதான் இருக்க வேண்டும் என்று. இந்த விஷயத்தை அவர் ரஜினியிடம் சொல்ல, முதல்ல கோவிலை சீக்கிரம் கட்டி முடிச்சுட்டு சொல்லு. நான் மனப்பூர்வமாக வர்றேன் என்றாராம்.
மனதில் நினைத்ததை மறுபரிசீலனைக்கு வழியில்லாமல் செய்து முடிக்கும் லாரன்ஸ் கரங்கள் ஓங்குக… உயர்க! நம்மால் வேறென்ன சொல்லி வாழ்த்த முடியும்?