ஏண்ணே… மதுரக்காரங்கன்னா அருவாளோடவே திரிவாங்களா?
“ஏண்ணே… மதுரக்காரங்கன்னா ஸோல்டர்ல அருவாளோடவே திரிவாங்கன்னு யாருண்ணே சொன்னா?” அப்பாவியாக கேட்கும் ஜி.மணிகண்டனுக்கு மதுரைதான் நேட்டிவ்! “உங்க சினிமாதாண்ணே சொல்லுது!” என்று பதில் சொன்னவர்களுக்காகவே தயாராகி வருகிற படம்தான் 144. “மதுரைன்னா லந்து இருக்கும். அதை மட்டும் வச்சு ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்பட்டோம். ஃபுல் காமெடியா மதுரைய சுத்தி சுத்தி காமிச்சிருக்கோம். பாருங்க. என்ஜாய்…” என்ற டைரக்டர் மணிகண்டன் பற்றி சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். இவருக்கு இதுதான் முதல் படம். இதற்கு முன் இவர் யாரிடமும் அசிஸ்டென்ட் டைரக்டராக கூட இருந்ததில்லையாம்!
சுஜாதாவின் கதை ஒன்றை முறைப்படி ரைட்ஸ் வாங்கி, இந்த படத்தை தயாரிக்கிறார் சி.வி.குமார். இவருக்கும் மதுரைதான் நேட்டிவ். இவரும் டைரக்டர் மணிகண்டனும் சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். பழக்க வழக்கமெல்லாம் படப்பிடிப்பு முடிஞ்சப்புறம்தான். ஸ்பாட்ல நான் தயாரிப்பாளர். அவர் டைரக்டர். தேவைக்கு அதிகமா பத்து பைசா கொடுக்க மாட்டேன். அப்படியிருந்தும் படம், லெங்த்தா வந்திருச்சு. ஐயோ பாவம்…. நாலு மணி நேர படத்தை இரண்டரை மணி நேரமா குறைச்சவர் நம்ம லியோ ஜான் பால்தான். செம டென்ஷன் கொடுத்துட்டோம் அவருக்கு என்றார் சி.வி.குமார்.
அட்டக்கத்தி, பீட்ஸா, சூதுகவ்வும், முண்டாசுப்பட்டின்னு சி.வி.குமாரின் சுக்ர திசையை சொல்கிற படங்கள் ஏராளம் வந்தாலும், அவர் உருண்டு புரண்ட மதுரை மண்ணில் அவரே ஒரு படத்தை எடுக்கும் போது எவ்வளவு சந்தோஷம் இருக்கும்? “இருந்திச்சே… என் பாடி வெயிட்டை கேட்டிங்கன்னா பட்டன் தெறிச்சுரும்”என்கிறார் படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா. சும்மாவே மதுரை சாப்பாடு மணமணக்கும். சி.வி.குமாரின் ஊர் என்பதால் விருந்து போட்டே மிரட்டினார்களாம் தினம் தினம்.
இதில் பூட்டை உடைத்து திருட்டுத் தொழில் செய்பவராக நடித்திருக்கிறார் மிர்ச்சி சிவா. அவருக்கு ஜோடி ஓவியா. கதை கூட கேட்கல… கால்ஷீட் கொடுத்துட்டேன் என்றார் ஓவியா. விடும்மா… சூழ்நிலை அப்படிதானே இருக்கு?