ஆட்டமாய் ஆட வைத்த அட்டி! திட்டம் போட்டு கட்டம் கட்டப்பட்ட ஹீரோ!
‘சிவகார்த்திகேயனின் பி டீம்’ என்று சொன்னால், வைகோவே ஒப்புக் கொள்வார். அப்படியிருக்கிறார் மா.கா.பா.ஆனந்த்! எண்ணம், செயல், பேச்சு, பி.பி., சுகர் எல்லாமே சிவகார்த்திகேயனின் அடியொற்றிதான் இருக்கும் போலிருக்கிறது. ஆனால் அவர் நிலைமை ஆகாயத்தில்… இவர் நிலைமை வெங்காயத்தில்! என்ன செய்வது… வரவேண்டிய நேரத்தில்தானே வரும்? அப்படியொரு நேரத்தை கொண்டு வந்து சேர்க்கும் போலிருக்கிறது ‘அட்டி’.
“அப்படின்னா?”
டைரக்டர் விஜய் பாஸ்கரை யார் பார்த்தாலும் கேட்கிற முதல் கேள்வியே இதுவாகதான் இருக்கும். யார் யார் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் அவரும். வடசென்னை பசங்க, ஒரு இடத்தில் கூடி அரட்டையடிக்கிற இடத்துக்கு வச்சுருக்கிற பேர்தாண்ணே அது. ஆனால் தமிழ் அகராதியில் கூட ‘அட்டி’ங்கிறதுக்கு இதுதான் பொருள் என்கிறார் விஜய் பாஸ்கர்.
இப்போது இந்த படத்தை வாங்கி உலகம் முழுக்க வெளியிடப் போகிற இசையமைப்பாளர் சுந்தர்சி பாபுதான் அட்டி படத்திற்கு மியூசிக். “நான் பக்கத்து தெருவில்தான் இருக்கேன். அஞ்சாதே, நாடோடிகள் படம் வந்தபோது, நாம படம் பண்ணும்போது இவரை வச்சுதான் மியூசிக் போடணும்னு பலமுறை நினைச்சுகிட்டே அவர் வீட்டை கிராஸ் பண்ணி போவேன். அந்த நல்ல நாளும் வந்தது. கதை சொன்னேன். கமிட் பண்ணினேன். கடைசியில் அவரே இந்த படத்தை வாங்குவார்னு அப்போ எனக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது” என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் விஜய் பாஸ்கர்.
சுந்தர்சி பாபு என்ன சொல்கிறார்? “இந்த படத்தில் மெலடி பாட்டுன்னு எதுவும் இல்ல. எல்லாமே கானா பாடல்கள்தான். ட்யூன் போடும்போதே ஆடப்போறவரோட கால்களுக்கு ஐயோடக்ஸ்தான் ஒரே தீர்வுன்னு தெரிஞ்சுது. பட்… மா.கா.பா. ஆனந்த் சமாளிச்சு ஆடியிருக்கார். எப்படிதான் ஆடினாரோ…?” என்று வியந்தார்.
ஆடியவருக்குதானே தானே தெரியும் பாத கமலங்கள் எப்படி பஞ்சராயிருக்கும்னு?