கேட்டவரையெல்லாம் கிறுகிறுக்க வைத்த ஒரு கதை! இது மாநகரம் பில்டப்?
சென்னை, யாரையும் ‘போடா வெண்ணை’ என்று சொல்லுவதேயில்லை. பிழைக்க லட்சம் வழிகள் இருக்கின்றன. எங்கெங்கோ பிறந்து இங்கு வந்து வாழும் அத்தனை பேருக்கும் சென்னை பல்வேறு கதைகளையும் அனுபவங்களையும் கொடுத்திருக்கும். அப்படி நான்கு பேரின் கதையைதான் ஒரு படமாக எடுத்திருக்கிறார்கள். பெயர் ‘மாநகரம்’.
‘மாயா’ படத்தை தயாரித்து மாபெரும் வெற்றியை ருசித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுதான் இந்த படத்தின் தயாரிப்பாளர். வித்தியாசமான கதைகளுக்காக பல்வேறு உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த போதுதான், இந்தப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கிடைத்திருக்கிறார். வரும்போதே ஹீரோக்களுடன் வந்து சேர்ந்தவர் இவர். தெலுங்கில் சுமார் 15 படங்களுக்கு மேல் நடித்து ஓரளவுக்கு மார்க்கெட் வேல்யூவில் இருக்கும் சந்தீப் கிஷன், இந்த கதையை கேட்டவுடனேயே நானே இதை தயாரிக்கிறேன் என்றாராம்.
“இவர் மட்டுமல்ல, லோகேஷ் கனகராஜ் இந்த கதையை யார் யாரிடமெல்லாம் சொன்னாரோ? அவர்கள் எல்லாருமே, இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியொரு கதை இது” என்றார் எஸ்.ஆர்.பிரபு.
வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ – யும் இந்த படத்தின் ஒரு நாயகனாக நடித்திருக்கிறார். “இந்தக்கதையை அவர் எங்கிட்ட சொல்லி முடிச்சதும் என்னை உங்க அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்த்துக்குறீங்களா என்றுதான் நான் லோகேஷிடம் கேட்டேன். இதுக்கு முன்னாடி நான் அப்படி கேட்ட ஒரு இயக்குனர் ஆரண்ய காண்டம் பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அதற்கப்புறம் இவர்தான்” என்றார் ஸ்ரீ. (நடுவில் மிஷ்கின் படத்திலெல்லாம் நடித்திருக்கிறார் இந்த ஸ்ரீ)
இப்படி எல்லாருமாக சேர்ந்து இந்த படத்திற்கான பில்டப்பை ஏற்றிக் கொண்டே போக, அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை போல, மிக சாதாரணமாக தன் பட அனுபவங்களை ஷேர் பண்ணிக் கொண்டார் லோகேஷ் கனகராஜ்.
எல்லாம் சரி. படத்தில் ஒரு இங்கிலீஷ் பாட்டு இருக்கிறதாம். அதை எழுத வைக்க ஒரு கவிஞர் கிடைக்காமல்தான் ரொம்பவே சிரமப்பட்டாராம் மியூசிக் டைரக்டர் ஜாவித் ரியாஸ். எப்படியோ, ஆன்ட்டனி என்பவர் கிடைக்க, அதற்கப்புறம்தான் முழுமையானதாம் இசை பணி.
உங்க அவ்வளவு பில்டப்புக்கும் இந்த படம் வொர்த்தா என்பதை பார்க்கதானே போகிறோம்?