மனோரமா ஒரு நெடிய கலைப் பயணம்!

நீங்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட வேலையை எத்தனை வருடம் சலிப்பில்லாமல் செய்வீர்கள்? கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா? ஆம், எனில் நீங்கள் கோபிஷாந்தா என்கிற மனோரமாவாகிய ஆச்சியின் நீண்ட நெடிய கலைப் பயணத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கென்ன சினிமாக் காரர்கள் புகழும் பணமும் மலிந்த இடம் பிறகு உழைப்பதெற்கென்ன என்று எளிதில் புறந்தள்ளவும் முடியாது, புகழுக்கும் உழைப்பெனும் முதலீடு தேவையாயிருக்கிறதே…..

ஆயிரம் மேடை நாடகங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள். குறைந்தது படத்திற்குப் பத்து நாட்களென்றாலும் வருவது பத்தாயிரம் நாட்கள். ஏறத்தாழ இருபத்தி ஏழு வருடங்கள். நாடகங்கள் அதற்கான ஒத்திகைகள் தனி. குறைந்த பட்சமாக கணக்கிட்டாலும் முப்பது முப்பத்தைந்து வருடங்கள் நடிப்பதில் செலவிட்டிருக்கிறார். யதார்த்தத்தில் தானல்லாத ஒருவராய் வாழ்வதற்கு தேவைப் பட்டிருக்கும் பொறுமையும் டெடிகேசனனும் வியப்பூட்டும் சான்றுகள்.. மாறிவரும் மூன்று தலைமுறை ரசிகர்களின் ரசனைக்கேற்ப தன்னைத் தயார் செய்து கொண்டு இன்றும் களத்தில் நிலைத்திருப்பவர்.

அவரின் திரைமொழியில் தனித்து ஜொலித்த படங்களைக் முற்றிலுமாகக் கணக்கிடுவதென்பது இயலாத காரியம், ஆயிரத்தில் சில முத்துக்களை மட்டும் காண்போம்.

தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமா மணியை கடந்த தலை முறை ரசிகர்கள் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள், ஏன் இந்தத் தலை முறையினரும் இதில் அடக்கமே. அக்காலத்திய கடை நிலை பொழுதுபோக்கு நடனக்காரி வேடம், சற்றே பிசகியிருந்தாலும் கதா பாத்திரம் அதன் ஸ்திரத்தன்மயை விட்டு விலகி ஆட்ட நாயகி ஆசை நாயகியாகப் பார்க்கப் பட்டிருப்பார். அதை அவர் வெற்றிகரமாக மிகச் சரியாகச் செய்து முடிக்க உதவியது அவரின் குழந்தைத் தனமான குரல். வாய்ஸ் மாடுலேஷன். தற்போதைய சினிமாக்களில் குளோஸ் அப் ஷாட்டுகளின் உபயோகம் அனைவரும் அறிந்ததே, சமயங்களில் கதா நாயகிகளின் வாய்க்குள் வரை கேமரா சென்று வர அறிவியல் அனுமதி அளிக்கிறது. அக்காலங்களில் நாடகத் துறை சார்ந்தவர்கள் சினிமாவில் கோலோச்சிய நேரத்தில் இந்த வாய்ஸ் மாடுலேஷன் பாத்திரத்தின் குணாதிசியங்களை விளக்க நன்கு உதவியது. இது மேடை நாடக பாணி. எம்.ஆர். ராதா இதில் உச்சத்தை தொட்டவரென்றால் அது மிகையாகாது. ரமா மணியின் குரல் அந்தக் கேரக்டரை வெற்றிகரமாக துளியும் ஆபாசமின்றி ஜஸ்டிஃபை செய்கிறது.

சின்னக் கவுண்டரில் பெரிய கவுண்டச்சியாக தவசியின் தாயாக கதா நாயகனுக்கு இணையான பாத்திரத்தில் நம் கண் முன்னே நேர்மையான ஒரு மூத்த கவுண்டச்சியை நிறுத்தியிருப்பார். அப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு அவர் ஒரு முக்கிய காரணியென்பதை யாரும் மறுக்க இயலாது.

வெள்ளி விழா கொண்டாடிய சின்ன தம்பி மற்றும் சம்சாரம் அது மின்சாரம் படங்களில் மனோரமா எங்கேயும் தெரிய மாட்டார், கதா பாத்திரமான கண்ணம்மாவே புலப்படுவார், இத்தனைக்கும் இரு வேறு துருவங்கள் அவ்விறு பாத்திரமும். இரண்டையும் நிரப்பும் நுட்பமான நடிப்பாற்றல் அவரிடமிருந்தது.

உலக மொழிகளில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நம் நினைவிலிருக்கலாம்., ஆனால் நகைச்சுவை வேடமேற்ற பெண் நடிகைகள் அதிலும் பெறும் வெற்றி பெற்ற நடிகைகள் அரிதிலும் அரிது, அக்குறையை தென்னிந்திய பிராந்திய சினிமாக்களில் சந்தோசமாக உடைத்தவர் மனோரமா.

பங்காளி, புது மனிதன், சின்ன கவுண்டர், பாட்டி சொல்லை தட்டாதே படங்களில் நகைச்சுவை நடிப்பிலும் மிளிருவார், குறிப்பாக நடிகன் படத்தில் அவர் வேடம் நகைச்சுவயின் உச்சம்.

நகைச்சுவைக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வேடமது, இது நகைச்சுவயைக் காட்டிலும் கடினம். இன்று பரவலாக அறியப்பட்ட பிளாக் காமெடியை அவரின் வேடம் நினைவு படுத்தும்.

ஏராளமான குணச் சித்திர வேடத்திலும் மனதை அள்ளியவர். சிறந்த எடுத்துக் காட்டு வெற்றிக் கொடி கட்டு தெய்வானை மற்றும் உன்னால் முடியும் தம்பி அங்கயற்கரசி. பொறுப்பான ஒரு சங்கீதக் குடும்ப மருமகளாக தாயை இழந்த உதய மூர்த்திக்கு வந்து சேர்ந்த சிற்றன்னையாக தக்க சமையத்தில் அப்பனுக்கே பாடம் சொன்ன முருகனைப் போல் மாமனாருக்கு நாசூக்கைச் சொல்லிக் குடுக்கும் மகளைப் போல் படம் நெடுகிலும் மனோரமாவின் மகோன்னதம் நிரம்பி வழியும்.

காட்சிகளுக்கு வலு சேர்க்கும் மிகச் சிறப்பான நடிப்பு. மேலும் நான் பெற்ற மகனே படத்தில் ஊர்வசியின் மாமியாராக இவர் வெளிப்படுத்திய திரை மொழி 90 களின் நடுத்தர மாமியாரை அப்பட்டமாகப் பிரதி பலித்திருக்கும்.

அவர் சிறப்பாக நடித்த படங்களையோ அதற்கு அவர் பெற்ற அங்கீகாரங்களையோ பட்டியலிடுவதென்பது மூன்று தலைமுறை தமிழ் சினிமா வரலாற்றை முன்னூறு வார்த்தைகளில் பட்டியலிடுவது போலாகிவிடும். புராணப் பட இயக்குனர்களிலிருந்து இன்றைய குறும்பட இயக்குனர் வரை ஆச்சி வேடமா கூப்பிடு மனோரமாவை என்று எண்ண வைத்ததும் அதை அங்கணமே அங்கீகரித்து வழிமொழியும் ரசிகர்களின் மன நிலைப்பாடும் தான் ஆச்சி மனோரமாவின் ஆளுமையின் சான்றுகள்.

எந்த ஒரு தமிழ் சினிமா ஆளுமைக்கும் நடிகரெனும் எல்லயைத் தாண்டி மக்கள் அறிந்த சுய முகம் ஒன்று உண்டு. மனோரமா என்றவுடன் நம் நினைவிற்கு வருவதென்ன? அவரின் திரை மொழியும் அவரின் நடிப்பும் மட்டுமே… இதை விட ஒரு பெரிய அங்கீகாரம் ஒரு திரை ஆளுமைக்குத் தேவயில்லை.. தொடரட்டும் அவர் பயணம்.

கடலிலே சில துளிகள்:

1. ஐந்து முதல்வர்களுடன் நடித்த நடிகை என்கிற புகழுக்குச் சொந்தக்காரர். முறையே, பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் என்.டி.ஆர்.

2. நடிப்பாற்றலோடு பாடுவதிலும் வெற்றி கண்டவர். அவர் பாடிய பாடல்கள் அனேகமாக அனைத்துமே பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டவை, பொம்மலாட்டம் படத்தின் வா வாத்யாரே ஊட்டாண்ட, பாட்டி சொல்லை தட்டாதேவில் இவர் பாடிய டில்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே பாடல் பாட்டிகளின் தேசிய கீதமாக அக்காலத்தில் கொண்டாடப் பட்டது, மற்றும் இசைப் புயலின் இசையில் இவர் பாடிய மே மாதம் பாடலான, மெட்ராச சுத்திப் பாக்கப் போறேன் பாடலும் நன்கு வரவேற்பைப் பெற்ற பாடல்.

3. தமிழ் சினிமாவின் மூன்று தலைமுறை துருவங்களுடன் எந்த மனக்கசப்புமின்றி நடித்த புகழுக்கும் சொந்தக்காரர் இவர். எம்.ஜி.ஆர் – சிவாஜி. ரஜினி – கமல். விஜய் – அஜித்.

அவரின் நீண்ட நெடிய கலைப்பயண அனுபவங்களை தொகுக்கப்பட வேண்டியது அவசியம். அது அவரின் வாழ்கை வரலாறு மட்டுமின்றி அறுபது வருட தமிழ் சினிமாவின் ஆவணமாகவும் இருக்கும். சாதனைக் கலைஞர்களை அந்திமக் காலங்களில் கண்டு கொள்ளாமல் விட்டது தான் இது வரையிலான தமிழ் சினிமா வரலாறு, ஆச்சி மனோரமா விஷயத்தில் அவ்வாறு நடக்காதென நம்புவோம்.

அவரின் கலைப்பயணம் தொடரவும் அவரின் நாடக சினிமா அனுபவங்கள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப் படவும் வலியுறுத்துவோம்.

நன்றி -சிவகுமார் கனகராஜ்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘Maiem’ Cast & Crew Interview

https://www.youtube.com/watch?v=uDFPOcFPm-c

Close