மெர்க்குரி – விமர்சனம்

பரிசுத்த ஆவி(?)யின் பெயராலே படம் எடுக்கக் கிளம்பும் அத்தனை இயக்குனர்களுக்கும் கமர்ஷியல் விலங்குக்கு கட்டுப்பட்டவர்கள்தான். அச்சுறுத்த வேண்டிய ஆவிக்கு ரசிகர்களை, ‘கிச்சுகிச்சு’ருத்துவதுதான் ஒரே லட்சியமாகவும் இருக்கும். ஆனால், இந்த மெர்க்குரி வேற லெவல் பிசாசு படம்!

காது கேட்காத, வாய் பேச முடியாத ஐந்து இளசுகள் ஒரே வீட்டில் குடியிருக்கிறார்கள். இடம் ஊட்டி. இவர்களில் ஒரே ஒரு பெண். ஒரு பர்த் டே நாளில் லேசாக மப்பு ஏற்றிக் கொண்டு காரில் உல்லாசமாக கிளம்பும் இவர்களின் தவறான டிரைவிங், ஒரு உயிரை அநியாகமாக பலி வாங்கிவிட…. இறந்தவன் பாடி எழுந்து வந்தது எப்படி? அதே ரத்தக்களறியோடு அவர்களை ஓட விட்டது எப்படி?

வசனம் இல்லை. பாட்டு இல்லை. அட… படத்தில் வரும் பிற கேரக்டர்கள் கூட வாய் திறந்து முழங்கவில்லை. ஆனால் படத்தின் ஒவ்வொரு பிரேமும் பேசுகிறது. ‘மேக்கிங்ல மிரட்டிட்டான்’ என்றொரு வார்த்தை சொல்வார்கள் அல்லவா? அதை தியேட்டருக்குள் சர்வசாதாரணமாக கேட்க முடிகிறது.

ஃபுல் கிரடிட் கோஸ் டூ – கோஸ்ட்டு! அவர் யாரெனில், நடனப்புயல் பிரபுதேவா. இப்படியொரு படத்தில் அவரை பொருத்திப் பார்க்க நினைத்த ஒரே துணிச்சலுக்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தெறிக்க தெறிக்க பாராட்டலாம். அவரும் கிடைத்த வாய்ப்பை ஒரு ராட்சச வெறியோடு பற்றிக் கொண்டு நடித்திருக்கிறார். வெல்டன் மாஸ்டர்.

கண் தெரியாத பேய் ஒன்று, வெறும் ஒலிகளை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துப் போட்டுத் தள்ளுகிற காட்சியில் குலை நடுங்குகிறது. இந்த பேய் மனுஷனாக இருந்த போது நடக்கும் பிளாஷ்பேக் காட்சி மட்டும், கவித கவித… ஒரு சீனே வந்தாலும் போதும். இப்படத்தில் நான் இருக்க வேண்டும் என்று நினைத்த ரம்யா நம்பீசனுக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

இப்படத்தில் நடித்த நான்கு இளைஞர்களும் ஃபுல் மார்க் வாங்கினாலும், அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறார் ஹீரோயின் இந்துஜா. மிக மெல்லிய காதல் உணர்வையும், மித மிஞ்சிய அச்சத்தையும் அப்படியே உருண்டை கண்களுக்குள் கொண்டு உருட்டி புரட்டி எடுத்திருக்கிறார். பலே.

பத்மினிக்கும் வைஜெயந்தி மாலாவுக்கும்தான் போட்டி என்பதைப் போல, இப்படத்தின் பிரமாதமான பின்னணி இசைக்கும், மிரட்டும் ஒளிப்பதிவுக்கும்தான் போட்டியோ போட்டி. யாரை யார் வென்றார்கள் என்பதை சொல்ல, கம்ப்யூட்டர் மனசு இருந்தால் கூட கஷ்டம். முறையே ஒளிப்பதிவாளர் திருவுக்கும், மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணனுக்கும் பாராட்டுகள்.

பேய் படம்தானே. கிடைக்கிற கேப்பில் எல்லாம் கிராபிக்சை விட்டு இம்சிக்கலாம் என்று நினைக்காமல், தேவைப்படுகிற இடத்தில் தேவைப்படுகிற அளவுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள். சிறப்பு.

வெறும் கதையாக இல்லாமல், ஒரு தொழிற்சாலை கழிவின் காரணமாக உடல் ஊனமுற்ற இளைஞர்களின் கதை என்று சோஷியல் தாட்டையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இலையின் ஓரத்தில் ஊறுகாய் போல அடக்க ஒடுக்கமாக தெரிந்தாலும், சுள்ளென்று புத்தி வரைக்கும் ஏறுகிறது காரம். அதற்காகவே ‘மெர்க்குரி போல மின்னுகிறார் கார்த்திக் சுப்புராஜ்’ என்று இந்த விமர்சனத்தை முடிப்பதே பொருத்தம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு! – பேசியது என்ன?

https://www.youtube.com/watch?v=N-Y6QNqdBrk&t=2s

Close