மெர்சல் -விமர்சனம்

வினையறுக்க வந்த வேலவனே…. சுளுக்கெடுக்க வந்த சுந்தரனே… மலை பிடுங்க வந்த மாவீரனே… என்றெல்லாம் புகழ்ந்தாலும், எல்லாவற்றுக்கும் தகுதியானவர் ஆகிவிட்டார் விஜய். ஒரு படத்தில் டைரக்டர் சொல்வதற்கு எத்தனையோ இருக்கும். ஆனால் ‘ஹீரோ என்கிற வகையில் நான் சொல்வதற்கு நிறைய இருக்கணும்ப்பா…’ என்கிற அவரது நிபந்தனைக்கும், அது தொடர்பான நம்பிக்கைக்கும், துணிச்சலுக்கும், ஆசைக்கும், ஆணென்ற மீசைக்கும் முதல் வணக்கம். குறிப்பாக க்ளைமாக்சில் ஜி.எஸ்.டி வரி விஷயமாக விஜய் பேசியிருக்கும் அந்த நாலு வரி டயலாக், எண்ணிலடங்கா இடி! மக்களின் மனக்குரல்!

படத்தில் ஒரு விஜய் அல்ல. இரு விஜய் அல்ல. மூன்று விஜய்(கள்)! மூவருக்குமான ஏரியாவை முறையாக பிரித்துக் கொடுத்து, யாருக்கும் யாரும் நொள்ளை இல்லை என்கிற விதத்தில் காட்சி படுத்தியிருக்கும் அட்லீக்கு தனி பாராட்டுகள்.

சரி… கதைக்கு வருவோம். மருத்துவமனை தொடர்பான நால்வர் கடத்தப்படுகிறார்கள். அவர்கள் எங்கே என்று தேடக் கிளம்புகிறது போலீஸ். ஒருவழியாக டாக்டர் விஜய்யை கண்டு பிடித்து விசாரிக்கிறார்கள். பிளாஷ்பேக் விரிகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் மருத்துவக் கொள்ளையை புட்டு புட்டு வைக்கிறார் விஜய். அஞ்சு ரூபா டாக்டர் விஜய். மேஜிஷியன் விஜய், மதுரைக்கார தளபதி விஜய். இந்த மூவரின் கதையும் அவர்கள் சம்பந்தமான காட்சிகளும் படு சுவாரஸ்யமாக விரிகிறது. யாருக்கு யார் யார் எப்படியெப்படி கனெக்ஷன் என்கிற தகவலையும் வலிய திணிக்காமல் இயல்பாக கடக்கிறார் அட்லீ.

படம் முடிந்து வெளியே வரும்போது எங்கேனும் தனியார் மருத்துவமனைகள் தென்பட்டால், கல்லெறியலாமா என்கிற அளவுக்கு ஆவேசம் வருகிறது. அதுதான் மெர்சலின் தாக்கம்.

சிறந்த மருத்துவர் விருது பெற பாரீஸ் போகும் விஜய், அங்கு விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டாலும், தமிழனின் பெருமையை நிலைநாட்டுகிற அந்த காட்சி… விஜய் மீது மேலும் அன்பு கொள்ள வைக்கிறது. மனதை டச் பண்ணுகிற வேலையை படு சுலபமாக செய்துவிடுகிறார் இந்த டாக்டர். ஹவுசிங் போர்டு ஏரியாவில் ஒரு மருத்துவராக மட்டுமல்ல… விளையாட்டு பையனாகவும் அவர் டிராவல் பண்ணுவதெல்லாம் கரைச்சல்மா கரைச்சல்!

மேஜிஷியன் விஜய்தான் மெயின் பில்லர். ஏனென்றால் போட்டுத்தள்ளுவதெல்லாம் இவர்தானே? ஜெயிலிலிருந்து இவர் தப்பிக்கும் அந்த காட்சி வரைக்கும் கூட, இவர் பண்ணும் மேஜிக்குகளில் புதுமையில்லை. ஆனால் சுவாரஸ்யம் உண்டு.

மதுரைக்கார விஜய்தான் பாதி படத்தை குடித்துவிடுகிறார். (அவ்வளவு நீண்ட பிளாஷ்பேக் விஜய்யையும் மீறி கண்களை சோர்வடைய வைக்கிறது. கொஞ்சம் கத்தி போட்டிருக்கலாம்) படத்தில் பொருத்தமாக இவரையும் எம்ஜிஆரையும் ஒரே பிரேமில் காட்டுவதெல்லாம் அரசியலுக்கு வைக்கப்பட்ட கோலப் புள்ளி போல. (எடப்பாடி ஜெயக்குமாரெல்லாம் ஷோ பார்த்தால் விஜய் வீட்டு குடிநீர் பைப், கரண்ட் வொயர், கழிவுநீர் குழாயெல்லாம் கண்டந்துண்டம்)

படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் சமந்தா வரும் அந்த துளியூண்டு போர்ஷன் பிரம்…………..மாதம்! ‘டேய் தம்பி. இங்க வா’ என்று சமந்தா விஜய்யை அழைப்பதும், அவர் ‘சொல்லுங்கக்கா…’ என்று பம்முவதும் அழகு. அப்புறம் சரியாக பத்தே நிமிஷத்தில் லவ்வை ஓப்பன் பண்ணி டூயட்டுக்கு போய் விடுகிறார்கள் இருவரும்.

காஜலுக்கு கொடுத்த சம்பளத்தை வட்டியோடு பிடுங்கினால் சந்தோஷம். கொடுத்த காசுக்கு மேலே கூவியிருக்கிறார் நித்யா மேனன். ஆனால் அவர் வரும் பிளாஷ்பேக் காட்சிதான் படத்தின் சென்ட்டிமென்ட் ஏரியா என்பதால் மன்னிச்சூ…

எஸ்.ஜே.சூர்யாதான் வில்லன். தெரு பொறுக்கிக்கு டாக்டர் வேஷம் கொடுத்தது போலிருக்கிறது அவரும் அவரது நீண்ட கிருதாவும். இன்னும் முப்பது வருஷம் கழிச்சு, யாருக்காவது நார்மல் டெலிவரின்னா அதிர்ச்சி வரும் என்கிற அந்த டயலாக் நெருப்பு. அதை சூர்யா வாயால் கேட்பது இன்னும் சூடு.

விஷ்ணுவின் ஒளிப்பதிவு கிராண்டியர் மற்றும் கலக்ஸ்!

இசை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். ஆளப்போறான் தமிழன் பாடல் தவிர, வேறொன்றும் உருப்படியாக இல்லை என்பதில் வருத்தமே.

கிட்டதட்ட மூன்று மணி நேரப் படம், ஒரு மின்னல் போல ஓடி முடிவதுதான் அட்லீயின் திறமைக்கான சர்டிபிகேட்! மிக ருசியான காம்போவாக தந்திருக்கிறார். இது சுட்ட கதை என்கிற விமர்சனத்தையெல்லாம் கூசாமல் தூக்கி ஓரத்தில் எறிந்துவிடலாம். அந்தளவுக்கு திரைக்கதையில் சித்துவேலை செய்திருக்கிறார் அட்லீ.

விஜய், கரை வேட்டிகளை மெர்சலாக்குகிற நேரம் வந்தாச்சு என்பதற்கான அபாய சங்குதான் மெர்சல். அந்த சப்தத்தை ஆனந்தமா அனுபவிங்க ரசிகர்களே…

முக்கிய குறிப்பு- படத்தில் வடிவேலுவும் இருக்கிறார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

-ஆர்.எஸ்.அந்தணன்

https://youtu.be/i2TraVUBJWg

1 Comment
  1. ayyanar kavi says

    pongadaa … neengalum unga vimarsananmum … amount perusaa kuthuduttangala ? enna … mokkai padathai ipti vimarsanam panringa ? etho nayagan kamal padam maathiri ….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மெர்சல் திண்டாட்டம்! லைக்கா கொண்டாட்டம்! முடிவு மட்டும் புஸ்….!

Close