17 ந் தேதி காலையில்தான் தணிக்கை சான்றிதழ்! கண்டத்திலிருந்து தப்பிய மெர்சல்!
விஜய்யின் அரசியல் வசனங்களால் அடிக்கடி நெருப்பாகிவிடும் ஆளுங்கட்சிக்காரர்கள் விஜய் படங்கள் வரும்போதெல்லாம் தொல்லை தருவது இயல்புதான். ஆனால் நேரடியாக சிக்கலை உண்டாக்காமல் யார் யாரையெல்லாமோ விட்டு கல்லெறிய வைப்பார்கள். இந்த முறை மெர்சல் விஷயத்திலும் அப்படி நடந்திருக்கலாம். ஏனென்றால், விஜய் நேரில் போய் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்புதான் லேசாக வெளிச்சம் அடிக்க ஆரம்பித்தது மெர்சல் இழுபறி விவகாரத்தில்.
சென்சார் போர்டு U/A கொடுத்திருந்தாலும், நடுவில் மூக்கை நுழைத்து தடை ஏற்படுத்தியது விலங்குகள் நல வாரியம்.
இதற்கிடையில் இன்று காலை (16 அக்டோபர்) விலங்குகள் நலவாரியம் கூடி விவாதித்தது. பின்பு மெர்சல் படத்தை பார்த்திருக்கிறார்கள். சென்சார் அலுவலகம் கொடுத்த கட் போக மேலும் சில கட்டுகள் கொடுக்கப்பட்டதாம். அவற்றையெல்லாம் சரி செய்து விட்டு மீண்டும் அலுவலக நேரத்திற்குள் செல்வதற்கு தாமதம் ஆகிவிட்டதால், நாளை காலை அலுவலகம் துவங்கிய பின்பு கொடுக்கப்பட்ட கட்டுகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பின்புதான் சான்றிதழ் வழங்கப்படுமாம்.
ஒருவழியாக பெரும் சிரமத்திற்கு இடையில் தீபாவளிக்கு வருகிறது மெர்சல். சுமார் 15 நிமிடங்கள் இடம் பெற்ற விலங்குகள் தொடர்பான காட்சிகளில் 13 நிமிடங்கள் வெட்டப்பட்டு விட்டதாக தகவல்.
இதைவிட பகிரங்க தகவல் ஒன்றும் இருக்கிறது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லாததால்————– ஷட்டப் பண்ணிக்குறோம் ப்ளீஸ்.