நமக்கும் மன்றம் வந்திருச்சே! சே சே சேச்சே!
நாய்க்கறி தின்கிற நாகலாந்திலேயே கூட, இவ்வளவு ‘வள் வள்’கள் இருக்குமா தெரியவில்லை. ஆனால் ட்விட்டரை திறந்தால் இரு வேறு ஹீரோக்களின் அதி தீவிர ரசிகர்கள் வெட்டு ஒண்ணு, துண்டு நாலு என்கிற ரேஞ்சுக்கு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். படிப்பதற்கு ஏதுவாகவும், சாதுவாகவும் சில பல ட்விட்டுகள் இருந்தாலும், பெரும்பாலான ட்விட்டுகள் அநாகரீகத்தின் உச்சம். பெண்கள் அந்த ட்விட்டுகளை எட்டிக் கூட பார்க்க முடியாது என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது இந்த நாகரீகம்.
சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் தலையிட்டு தங்கள் ரசிகர்களை அமைதிப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் மட்டும் செவிடன் காதில் ஊதிய விசிலாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆங்… விசிலு என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. அட்ரா மச்சன் விசிலு என்ற படத்தில் கூட, இந்த ரசிகர்களின் கதையை நாலு பேருக்கு உரைக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் இந்த அலைகள் ஒரு போதும் ஓய்வதில்லை என்பது போல ஒரு சம்பவம் இப்போது.
சம்பவம் நடந்த இடம் மதுரைதான். (வேறு யாருக்கு இதுபோன்ற ஐடியாக்கள் வரும்?) மொட்டை ராஜேந்திரனுக்கு ரசிகர் மன்றம் திறந்துவிட்டார்கள். இந்த மன்றம் திறக்கிற நாளில் மேள தாளங்களோடு தடபுடல் பண்ணிய அவர்கள், லோக்கல் செய்தி சேனல்களுக்கும், நாளிதழ் நிருபர்களுக்கும் அழைப்பு விடுத்து வரச்சொன்னார்களாம். ஒருவர் கூட அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. “ஏம்ப்பா வரமாட்டேங்குனானுங்க… தலைவன்ட்ட சொல்லி ஒரு படத்துல இவனுங்களை காட்டு காட்டுன்னு காட்டணும்” என்று ராஜேந்திரனின் ஏழு ஸ்வர குரலிலேயே இவர்கள் சபதம் போட்டது தனிக்கதை.
இந்தக் கும்பல் அப்படியே கிளம்பி சென்னைக்கு வந்து ராஜேந்திரனை சந்திக்க பிரியப்பட்டதாம். “தம்பிங்களா… வேணாம்ப்பா. ஏம்ப்பா என் பொழப்பை கெடுக்கிறீங்க? உங்க ஆர்வத்துக்கு ஒண்ணு பண்றீங்க. அது இங்க இருக்கிற ஹீரோங்களுக்கு புரியாது. வாய்ப்பு கொடுக்காம விட்டுட்டாங்கன்னா, உங்க வீட்ல வந்தா நான் உப்புமா திங்க முடியும்? அண்ணனுக்கு கோவம் வர்றதுக்குள்ள இடத்தை காலி பண்ணுங்கப்பா” என்றாராம் மொட்டை.
வழுக்கை தலையில் வாக்கிங் போன கரப்பான் பூச்சி போல, தத்தி தடுமாறி தப்பித்து ஓடியதாம் வந்திருந்த ரசிகர் கூட்டம்.