மறைந்தார் எம்.எஸ்.வி, திரையுலகம் கண்ணீர்

இன்று அதிகாலை நான்கு மணிக்கு இந்த பூவுலகை விட்டு மறைந்தார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர் போட்ட மெட்டுகள் காற்றில் கரையாமல் சுற்றிக் கொண்டிருக்க, அந்த மெட்டோடு மெட்டாக கரைந்தார் அவர். இந்த கவலை நேரத்தில் எம்.எஸ்.வி குறித்த சிறிய பதிவு-

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இவரது தந்தை பெயர் சுப்ரமணியன். தாயார் பெயர் நாராயண குட்டியம்மாள்.

நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும் ,டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர் . உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்தார்கள்.

இதனால் தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம்

“”வடநாட்டில் சங்கர் – ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது” என்று சொல்லி தன்னுடைய “பணம்’ என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் ” ராமமூர்த்தி -விஸ்வநாதன்’ என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்

அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை சுமார் 700 படங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.

இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப்பாட்டு, செந்தமிழ்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர்ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.

1951-ல்ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.

`பாசமலர்’ படத்தில் பாட ஆரம்பித்த இவர் வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.

`புதியபறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்

`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு.

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப் `பட்டத்துராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்

எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்!

இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர் தான்

நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் `காதல்மன்னன்,’ `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர்.

1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு “சித்ராலயா” கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.

கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான்

இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம் .

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
”இந்த நூற்றாண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது” கவிஞர் வைரமுத்து இரங்கல்

மெல்லிசை மன்னரின் இசைமூச்சு நின்றுவிட்டது என்று சொல்வதா? இந்த நூற்றாண்டில் அதிகமாக வாசிக்கப்பட்ட ஆர்மோனியம் அடங்கிவிட்டது என்று சொல்வதா? ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி மறைந்துவிட்டார் என்று சொல்வதா?...

Close