நகுலுக்கு ஏனிந்த வேலை?
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் நகுலின் நடிப்பை நன்றாகவே ரசிக்க முடிந்தது. ஏன்? ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது என்று அவரை கட்டுப்படுத்தி நடிக்க வைத்திருந்ததுதான். அது திரையரங்கில் நல்லபடியாக ஓடி தயாரிப்பாளரை காப்பாற்றிய படமும் கூட! அப்படியென்றால் பட வாய்ப்புகள் நகுலை சூழ்ந்து கொண்டிருக்க வேண்டுமே? அதுதான் இல்லை. இன்னும் சில எக்ஸ்பரிமென்ட் இருக்கு தம்பி என்று வெயிட் பண்ணுகிறார்களோ என்னவோ? இந்த நிலையில்தான் நகுல் நடிக்கும் மற்றொரு படமாக விரைவில் வெளிவரப் போகிறது ‘நாரதன்’.
எந்த நேரத்தில் நாரதன் என்று பெயர் வைத்தார்களோ, ஏரியாவில் லைட்டாக கலகம்! என்னவாம்? படம் முடியப்போகிறது. நகுல் டப்பிங் பேசினால்தான் படம் அடுத்த கட்டத்தை எட்டும். ஆனால் பத்து லட்சம் சம்பள பாக்கி. பணத்தை எண்ணி வைங்க என்கிறாராம் அவர். இத்தனைக்கும் நகுலின் மார்க்கெட் லெவலை மீறி 50 லட்சம் சம்பளம் பேசி 40 ஐ முன் கூட்டியே கொடுத்துவிட்டார்கள். இந்த பத்து லட்சத்திற்குதான் பலே பலே ஸ்டிரைக்! பஞ்சாயத்து வழக்கம் போல நடிகர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடுவில் நடக்க, ‘பத்து லட்சத்தை குறைச்சுக்கோங்க. படத்தை முடிச்சுக் கொடுங்க’ என்று கூறிவிட்டார்களாம் தயாரிப்பாளர் சங்கத்தில்.
என்னவொரு திருப்பம்… சங்கம் சொன்னதை நகுலும் ஒப்புக் கொண்டார். ஆனால் அடுத்த திருப்பம் இது. தயாரிப்பாளரே முன் வந்து ‘பத்து லட்சம் குறைச்சுக்க வேணாம். அஞ்சு லட்சத்தை குறைச்சுகிட்டா போதும். நான் இன்னும் அஞ்சு லட்சத்தை கொடுத்துர்றேன்’ என்றாராம். (மனுஷன்யா..) எல்லாம் முடிந்தது. டப்பிங்கும் முடிந்தது. ஆனால் படத்தின் பிரமோஷன்களுக்கு வரவேண்டிய நகுல் வர மறுக்கிறாராம். அண்மையில் நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் கூட அவர் வரவில்லை. இப்படி பாலிடிக்ஸ் பண்ணிய பல ஹீரோக்கள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. இந்த வரலாறு தெரியாத நகுலும் அங்கு வரவில்லை.
போகட்டும்… படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் எப்படி? எப்பவுமே வெந்த புண் இருந்தால், அதில் வெண்ணை ஒத்தடம் கொடுக்கவென்றே சில சந்தர்ப்பங்கள் அமையுமே? அப்படிதான் இருந்தது அது. செம இன்ட்ரஸ்டிங். இப்படத்தை இயக்கியிருக்கும் நாகா வெங்கடேஷ், பல சின்னத்திரை சீரியல்களை இயக்கியவர். இதற்கு முன் ‘அகராதி’ என்ற ஒரு படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஸ்டார் காஸ்ட்டிங் எல்லாமே படு பக்கா! கதாநாயகியாக ‘கட்டி வெண்ணை’ நிகிஷா படேல், காமெடிக்கு பிரேம்ஜி என்று கலக்கியிருக்கிறார்கள்.
‘இந்த படத்தில் நடிக்க முதலில் வேறொரு சிரிப்பு நடிகரைதான் அழைச்சிருந்தேன். அவர் கடைசி நேரத்தில் கழுத்தறுத்துட்டார். நல்லவேளையாக திடீர்னு கை கொடுத்தார் பிரேம்ஜி. ஒருவேளை முன்னவர் நடிச்சிருந்தால் கூட இவ்வளவு சிறப்பா இருந்திருக்குமா தெரியாது. கலக்கிட்டாரு பிரேம்ஜி’ என்றார் நாகா வெங்கடேஷ்!
பிரேம்ஜியா…? பார்த்துட்டு சொல்றோம்ணே…!