தியேட்டர்களை இடிக்கறது நல்லதுதான்! நாசர் பரபரப்பு பேச்சு

ரஞ்சித்குமார் தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜா.ரகுபதி இயக்கிய ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இப்படக் குழுவினர் திரையரங்கை முதல் முதலாகத் தோற்றுவித்த திரு.சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்தநாளை (18.௦4.2014) ‘திரை அரங்கு தின’மாக அறிவித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசர், அப்புக்குட்டி, வேதிகா, இயக்குனர்கள் நவீன், கமலக் கண்ணன், குழந்தை வேலப்பன், தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்துகொண்டனர்.

நடிகர் நாசர் பேசும்போது,

‘’இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்த திருவுக்கு நன்றி. அதே நேரத்தில் என்னை அழைக்கும்போது இப்படத்தின் இசை வெளியீடு பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு கோபம் இல்லை. சமீப காலமாக நான் மிக அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு நானே தனியாககூட பேசிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு சுதந்திர தினம், மகளிர் தினம், புத்தாண்டு தினம் இவற்றிற்கெல்லாம் வித்தியாசங்கள் தெரியவில்லை. எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறது. இதனால்தான் இந்தப் படக் குழுவிடம், சாமிக்கண்ணு அய்யாவின் பிறந்தநாளை திரை அரங்கு தினமாக அறிவிக்க வேண்டியிருப்பதற்கு தேவையான நடைமுறை சாத்தியங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறேன். அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும்.

இப்போது தியேட்டர்கள் அழிந்து வருவதைக் கண்டு நாம் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது இங்கு மட்டும்தான். நான் லண்டனில் நடைபெற்ற ‘தாண்டவம்’ படத்தின் ஷூட்டிங்கின்போது, அங்கே நாடகங்களுக்கு சென்றேன். அங்கே சாதாரணமாக வருடத்திற்கு குறைந்தது 1௦௦ நாடகங்கள் நடைபெறும். ஒரு காட்சியின் டிக்கட்டின் விலை நம்மூர் மதிப்பின்படி ரூபாய் 2௦௦௦ முதல் 75௦௦ வரை ஆகும். நான் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் காலகட்டத்திலேயே தியேட்டர் இடிப்பதைக் கண்டு ‘’நம் எதிர்காலம் என்னவாகுமோ?’’ என்று பயந்துள்ளேன். ஆனால் இப்போது அப்படியல்ல. காரணம் தியேட்டர்கள் இடிக்கப்பட்டாலும் நிறைய மல்டிப்ளக்ஸ்கள் வந்துகொண்டிருப்பது சந்தோசமாக உள்ளது.

திருட்டு டிவிடியை நாம் அழிக்க முடியாது. ஆனால் நாம் கண்டிப்பாக நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்ப்பார்கள். மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படங்கள் கமல், ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களோடு மோத வேண்டாம். காரணம் வெகுஜன சினிமாக்களோடு மோத வேண்டிய சூழ்நிலையால் கதைக்குத் தேவையில்லாத காதல், பாட்டு, சண்டை போன்றவற்றைத் திணிக்கவேண்டியுள்ளது.

தமிழர்களின் வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று அரசியல் இன்னொன்று சினிமா. தமிழர்கள் சோறு தண்ணியில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் சினிமா இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது.

தியேட்டர்கள் இடிப்பதை நான் பொருளாதார சிக்கலாகப் பார்க்கவில்லை. கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். தயவு செய்து சினிமாவை வியாபாரமாகப் பார்க்க வேண்டாம். பொதுவாக ஒரு நடிகரின் படம் ரிலீசாகும்போது தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால் நான் அதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், பார்க்கும்போது ரசிகனின் மனதில்தான் திருவிழாக்கோல உணர்வு படம் இருக்க வேண்டும்’’.

‘மூடர்கூடம்’ நவீன் பேசும்போது,

‘’தியேட்டர்கள் தேவையா?’’ என்று என்னிடம் கேட்டால் ‘’நான் தேவைதான்’’ என்றே கூறுவேன். காரணம் மக்களிடையே சமத்துவத்தை உண்டுபண்ணுவதே தியேட்டர்கள்தான். ‘மூடர்கூடம்’ படத்தின் ஒருபாடலுக்காக ஒரு பள்ளியில் ஷூட்டிங் நடத்தும்போதுதான் தெரிந்தது அங்கே படிக்கும் குழந்தைகளிடத்தில் கூட ஏற்றத் தாழ்வை உண்டுபண்ணியிருக்கும் வேளையில் அனைத்து மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதே தியேட்டர்கள்தான். அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாளை ‘தியேட்டர் டே’யாக அறிவிக்கும் இவ்விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி’’.

தனஞ்செயன் பேசும்போது,

‘’இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரைப் பார்க்கும்போது ‘பருத்தி வீரன்’ படத்தை நினைவுபடுத்துகிறது. நிச்சயம் அப்படம் போலவே இப்படமும் வெற்றி பெற வேண்டும். ஏப்ரல் 18ஆம் நாளை இனி வரும் ஒவ்வொரு வருடமும் சாமிக்கண்ணு வின்சென்ட்டை நாம் நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்போம். அதற்கு காரணம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாதான்.

திருட்டு டிவிடியை நம்மால் ஒழிக்க முடியாது. ஆனால் சிறந்த படங்களை எடுத்தால் கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வந்தே பார்ப்பார்கள். இது நான் பலமுறை நேரில் கண்ட உண்மை. இந்தப் படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்’’.

நடிகை வேதிகா பேசும்போது,

‘’நான் சிறுவயதிலிருந்தே குடும்பத்தோடு ஞாயிற்றுக் கிழமை, வெள்ளிகிழமைகளில் படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்போம். கொஞ்சம் பெரியவளானவுடன் என் நண்பர்களுடன் சென்று பார்ப்பேன். தியேட்டர்கள்தான் நம்மில் எந்தப் பாகுபாட்டையும் ஏற்படுத்தாமல் நம்மை ரசிக்க வைக்கின்றன. சந்தோசப்பட வைக்கின்றன. எனவே அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்த நாளை திரையரங்க தினமாகக் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி’’.

‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் பேசும்போது,

‘’என் தாத்தா ஒரு தியேட்டர் ஓனர். எனவே நான் சிறு வயதில் தியேட்டர் ஆபரேட்டர் ரூமிலியே இருப்பேன். படம் பார்க்கும் மக்கள் படம் பார்த்து சந்தோசப்படுவதை நேரடியாகவே பார்த்தவன் நான். அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாளை பிறந்த நாளை திரையரங்க தினமாகக் கொண்டாடுவதில் எனக்கு பெருமையே’’.

நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

‘’இந்த விழாவைப் பார்க்கும்போது எனக்கு என் ஊரில் படம் பார்க்கும் ஞாபகம் வந்துவிட்டது. சேரை கீழே தள்ளி, கீழே அமர்ந்து, மண் அள்ளி போட்டுக்கொண்டு சந்தோசமாக படம் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தியேட்டரை கண்டுபிடித்தவருக்கு பெருமை சேர்த்திருப்பது சூப்பர். இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் பெரிய வெற்றி பெற்று, எனக்கும் அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும்’’.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 2 – முருகன் மந்திரம் (சிநேகா-ன்னா ஒண்ணு, சிம்ரன்-னா ரெண்டு, சில்க்-னா எல்லாம்!)

எதிர்பார்த்ததை விட அழகான பாராட்டுக்கள்… அதிரடியான விமர்சனங்கள் என என் சினிமாக்காரிகளுக்கு ஏகபோக வரவேற்பு. பாராட்டிய, விமர்சித்த அத்தனை அன்பர்களுக்கும், அன்பிகளுக்கும் நன்றி. “சினிமாக்காரிகள்”னு ரொம்ப உரிமையோட...

Close