வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 2 – முருகன் மந்திரம் (சிநேகா-ன்னா ஒண்ணு, சிம்ரன்-னா ரெண்டு, சில்க்-னா எல்லாம்!)

எதிர்பார்த்ததை விட அழகான பாராட்டுக்கள்… அதிரடியான விமர்சனங்கள் என என் சினிமாக்காரிகளுக்கு ஏகபோக வரவேற்பு. பாராட்டிய, விமர்சித்த அத்தனை அன்பர்களுக்கும், அன்பிகளுக்கும் நன்றி.

“சினிமாக்காரிகள்”னு ரொம்ப உரிமையோட ஆசையோட இந்த தலைப்பை வச்சேன். காரிகள்னு சொல்றது மரியாதையான வார்த்தையா? மரியாதைக்குறைவான வார்த்தையா? ன்னு சாலமன் பாப்பையாவையும், லியோனியையும் எதிர் எதிரா பேச விட்டு, கோபிநாத்தை ஜட்ஜா போட்டு ஒரு பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு சினிமாக்காரிகள்னு ஏன் தலைப்பு வச்சீங்க, எப்டி வச்சீங்கன்னு கேள்விகள்…

கூடவே இன்னொண்ணையும் சொல்லியாகணும். இல்ல கேட்டாகணும்… காரன் என்பதை காரர் என்று சரவணர் மாதிரி ர் போட்டு சொல்லும்போது அது மரியாதையான வார்த்தை ஆகிவிடுகிறது. அதுபோல காரிக்கும் ஏதாவது மரியாதையான தமிழ் இருக்கான்னு தெரிஞ்சா சொல்லி உதவுங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரே…!

நடிகை பானுமதி அக்காவைத் தொடர்ந்து எனக்குப்பிடித்த சினிமாக்காரிகளில் முக்கியமான சினிமாக்காரி சில்க் ஸ்மிதா.

நான் வயசுக்கு வராத காலகட்டந்தான் சில்க் ஸ்மிதா வயசுக்கு வந்தவங்க மனசுகளிலும் ராத்திரிகளிலும் கோலோச்சுன, காலோச்சுன, கண்ணோச்சுன காலகட்டமா இருக்கும்னு நெனைக்கிறேன். சில்க் ஸ்மிதா கிட்ட எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப பிடிச்சது… அப்டின்னு தனியா எதையும் சொல்ல என்னால மட்டுமில்ல… யாராலயும் முடியாது.

மந்த்ரா கிட்ட ஒரு ஸ்பெஷல்… ரம்பா கிட்ட ஒரு ஸ்பெஷல்… சினேகா கிட்ட ஒரு ஸ்பெஷல்… சிம்ரன் கிட்ட ரெண்டு ஸ்பெஷல்… ஸ்ரீதேவி கிட்ட சில ஸ்பெஷல்…

இப்படி எல்லா சினிமாக்காரியுமே ஒரு ஸ்பெஷல், ரெண்டு ஸ்பெஷல்… அல்லது சில ஸ்பெஷல்களுக்குள் நின்று கொண்டார்கள். ஆனால் எல்லாமே ஸ்பெஷலா இருந்த ஒரே சினிமாக்காரி சில்க் ஸ்மிதாவாக மட்டுந்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மின் காந்தத்தை விட அதிகமான சக்தி கொண்டது, சில்க்கின் கண் காந்தம். கண் மட்டுமல்லாது… எப்போதும் யாருக்கோ அழைப்பு விடுவது போல… ஈரமாய் மினுமினுக்கும் உதடுகள்… எப்பேர்ப்பட்ட ஆணையும் ஒருநொடி திகைக்க வைத்து விடும்… முக வசிகரம்… முகத்தை தாண்டி தொடரும் ருசிகரங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்த எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இவ்ளோ விபரம் தெரிந்த பிறகு நான் ஒரு சில்க் பாட்டையோ காட்சியையோ இன்னும் பார்க்கவில்லை. அல்லது… இவ்ளோ விபரமாக சில்க் ஆடியதையும் நடித்ததையும் நான் இன்னும் பார்க்கவில்லை.

இனிமேல் பார்க்குப்போது கண்டிப்பாக விவரமாக பார்ப்பேன். அப்போது என் அறிவுப்பற்றாக்குறையால் சில்க் பற்றி நான் குறிப்பிட மறந்த அத்தனை விசயங்களிடமும் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

சில்க்கின் உடல் அழகிலும் அசைவுகளிலும் வளைவுகளிலும் எந்த அளவு கிளாமர் கொட்டிக்கிடந்ததோ… அதே அளவு திமிரும் கொட்டிக்கிடப்பதாய் எனக்கு தோன்றும். ஆண் தன்மை சேர்ந்த அழகு கொண்ட சினிமாக்காரிகள் நிறைய பேர் உண்டு. அவரவர் ரசிகர்கள் கோபித்துக்கொள்ளக் கூடும், இருந்தாலும் சொல்கிறேன்… தபு, சமீரா ரெட்டி, பத்மப்பிரியா, அனுஷ்கா… இப்படி ஒரு வரிசைக்கு அப்படி ஒரு ஆண் தன்மை கலந்த அழகு இருப்பதாய் எனக்கு தோன்றும். (ஆண் தன்மை கொண்ட அழகு… இந்த உவமைக்காக எத்தனை பேரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறேன் என்று தெரியவில்லை.) ஆனால் சில்க்கை அப்படி ஆண் தன்மை கொண்ட அழகி என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி சில்க் உடலில் ஒரு கம்பீரம் இருப்பதாகவே தோன்றும்.

குறுக்கும் நெடுக்குமாக இந்திய சினிமாவின் எல்லா திசைகளுக்கும் அநேகமாக எல்லா மொழிகளுக்கும் சில்க் ஸ்மிதாவைத் தெரியும். இறந்து 15 வருடங்களுக்கு மேல் தாண்டியபின்னாலும்… ஒரு ஹிட் படம் எடுத்து சம்பாதிக்கும் அளவுக்கு வரலாறும் புகழும் பெருமையும் கொண்ட ஒரே இந்திய நடிகை சில்க் ஸ்மிதாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆந்திர “விஜயலட்சுமி”யை தமிழ் சினிமாவுக்கு “ஸ்மிதா”வாக அறிமுகம் செய்து வைத்த புகழுக்கு சொந்தக்காரர் வினுச்சக்கரவர்த்தி.

1978ல் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் படம் தான்… இந்திய சினிமாவின் வரலாற்றுச்சக்கரங்களில் “ஸ்மிதா” என்ற பெயரின் பயணத்தை துவக்கி வைத்தது. திரையில் எழுதிய “ஸ்மிதா” என்ற பெயரும்… திரைக்குள், திரைக்கதைக்குள் எழுதப்பட்ட கதாபாத்திரப்பெயரான “சில்க்” என்ற பெயரும் இணைந்ததும் அந்த ஒரே படத்தில் தான் என்பது வண்டிச்சக்கரம் படத்தின் வரலாற்று சிறப்பு.

அறிமுகம் செய்துவைத்த வினுச்சக்கரவர்த்தி பெயரிலும், அறிமுகமான வண்டிச்சக்கரம் படத்தின் பெயரிலும் “சக்கர” என்ற வார்த்தை இருப்பதால் தானோ என்னவோ.. இன்றளவும் சுற்றிக்கொண்டே இருக்கிறது…சில்க் ஸ்மிதாவின் புகழ் சக்கரம்.

எனக்கு ரொம்ப நினைவில் இருப்பது, பாக்யராஜின் ‘அவசரபோலீஸ்’ படத்தில் நடித்த சில்க் தான். தெலுங்கு பேசியபடி, பாவா, பாவா என சில்க்… வளையும்போது தியேட்டரில் ரசிகனும் வளைந்திருப்பான்.

1989ல் ஆர்.பி.சவுத்ரி தயாரித்து சில்க் நடித்த “லயனம்”(Layanam) என்ற மலையாள திரைப்படம், சில்க்கின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாம். அந்த படம் தமிழில் “முதல் பாவம்” என்ற பெயரில் வெளிவந்ததோடு மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் பெரிய வெற்றி பெற்ற படமாக அமைந்திருக்கிறது.

சினிமாக்காரிகளை பார்க்கும் ஆண்களின் கண்கள் வேறானவை. அல்லது ஆண்களின் கண்களுக்கு சினிமாக்காரிகள் வேறு மாதிரியானவர்கள். சினிமாக்கார ஆண்களின் கண்களாக இருந்தாலும், சினிமாக்காரர்கள் அல்லாத சராசரி ஆண்களின் கண்களாக இருந்தாலும் சினிமாக்காரிகள்… பண்டங்களாக, உல்லாசப்பொருள்களாக பார்க்கப்படுதல் என்றென்றும் தவிர்க்க முடியாத யதார்த்தமாகவே இருக்கிறது.

அப்படி சில்க்கை மொய்த்த, ஆண் கண்களின் கூட்டம் மிக நீளமானதாய் இருந்திருக்கும். பல உயர்ந்த மனிதர்களின் உல்லாச அறைகள், சில்க் ஸ்மிதாவின் பாதங்களின் வருகைக்காக ஏங்கி பைத்தியம் பிடித்து கிடந்திருக்கக்கூடும். ஒரு மகாராணியை விடவும் மிக அதிகமான மரியாதைகளோடும் பணிவுகளோடும் சில்க் ஸ்மிதாவுக்காக பல வரவேற்புரைகள் வாசிக்கப்பட்டிருக்கக்கூடும். மாதக்கணக்கிலும் வருடக் கணக்கிலும் நீண்ட காத்திருப்புகள்… மீண்டும் மீண்டும் கெஞ்சி அழைத்திருக்கக் கூடும்.

பந்திகள் முடியும் வரை சில்க்கின் காலடியில் தலையணைகளாய் கிடந்த கிரீடங்கள் யாவும் பந்தி முடிந்ததும் தலையில் ஏறி இருக்கும். பின் அந்த தலையணைக் கீரிடங்களுக்கும் அதைச்சுமக்கும் தலைகளுக்கும் சில்க்கின் திசை என்பது கருப்பு திசையாய் தோன்றி இருக்கக்கூடும்.

படுக்கைக்காக பெருங்கூட்டமும் அதற்கு சரிசமமாக சில்க் சம்பாதித்த பணத்திற்காக இன்னொரு கூட்டமுமாக… சில்க்கோடு வாழ்ந்தவர்களும் சில்க்கினால் வாழ்ந்தவர்களும் நிறைய நிறைய… என்று சொல்கிறார்கள்.

இன்னும் சில்க் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை நீடிக்கிறது. தன் கடைசி காலங்களில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் தனிமைக்குள் தள்ளிவிடப்பட்ட சில்க் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்கிறது வரலாறு.

சலசலத்த மர்மங்களின் வாயையும். உண்மைக்கதையின் கதவுகளையும் யாரோ, அடைத்திருக்கலாம். யார், யாரோ அடைத்திருக்கலாம். 36 வயதில் மரணத்தை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறார் சில்க். அல்லது சில்க் 36 வயதில் மரணத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.

சில்க்கின் இளமைக்காலங்களையும், சினிமாவின் இளமைக்காலமாய் சில்க் இருந்த காலங்களையும், சில்க்கின் கடைசிக்காலங்களையும் சேர்ந்து மொத்தமே 36 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த சில்க்கின் வரலாறு…. அவரின் உடல் மீதான உணர்வுக் கவர்ச்சியை அற்ப விசயமாய் மாற்றி விடுகிறது. எந்தச் சிற்பியும் செதுக்காத சிலையாக இருந்த சில்க்கின் வாழ்விற்குள்… சற்றே பயணித்து வெளிவந்தபோது… அந்த காவிய நாயகிக்காக கண்களில் துளிர்த்திருந்தது சில கண்ணீர்த்துளிகள்.

அக்கா ரேவதியும் நாசரும் சில்க்கின் இறுதிச்சடங்கு நிகழ்வில் முக்கியமானவர்களாக முன் நின்றார்கள் என்று சொல்கிறார்கள்.

அக்கா ரேவதி… ரேவதி அக்கா..! சென்னை எந்த திசையில் இருக்கிறது என்று எனக்கு தெரியும் முன்பாகவே என் உள்ளமும் உதடுகளும் உச்சரித்த வார்த்தைகள்… இவை. ரேவதியைப்போலவே இன்னொரு அக்காவும் உண்டு.

அந்த அக்கா யார் தெரியுமா?

(இன்னும் ஜொலிப்பார்கள்)

Read previous post:
ஜெய் இஸ்லாமியராக மாறிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!

யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாமியராக மாறிய செய்தியை அந்த செய்தி பிற ஊடங்களில் வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தது நமது நியூதமிழ்சினிமா.காம். அதற்கப்புறம் கோடம்பாக்கத்தில் தன்னை இஸ்லாத்தில்...

Close