சாதி பேசும் மனிதர்களே… நயன்தாராவின் நல்ல மனசைப் பாருங்கள்!
இந்த செய்தியை வாசிப்பதற்கு முன் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் காலத்தை சற்றே பிளாஷ்பேக் அடிப்பது நல்லது! “அந்தக் கதை என்னுடையது. நான் ஏ-ஆர்.முருகதாசிடம் சொல்லியிருந்தேன். எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிவிட்டு மொத்த கதையையும் சுருட்டிக் கொண்டார்” என்று கண்ணீர் மல்க போராடிய மிஸ்டர் கோபி, ஒரு தலித்! அவர் சார்ந்த சமூகத்தினர் பலர் இன்று பா.ரஞ்சித்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களே… அப்போது ஒருவர் கூட கோபி பக்கம் இல்லை. முருகதாசா, கோபியா என்று பார்த்தால், கோபியாவது? சாதியாவது? என்று சமாதானம் ஆகிக் கொண்டது அவரவர் உள்ளம்.
வெகு காலம் போராடிய கோபி, முருகதாஸ் போல பணபலம் இல்லாததால், அப்படியே அமைதியாகிவிட்டார். அதற்கு முன் இன்னொரு பிரச்சனையும் அவருக்கு இருந்தது. அதுவும் அவரது சொந்த சாதி சகோதரனால். இதே பா.ரஞ்சித். கோபி எழுதிய ‘கருப்பர் நகரம்’ கதையை அடித்து மெட்ராஸ் ஆக்கிக் கொண்டார் என்றொரு குற்றச்சாட்டு. அதற்கும் ரஞ்சித் பக்கம்தான் நின்றது சாதி பலம். சாதியில் ரஞ்சித்துக்கு சமமாக இருந்தாலும் பொருளாதாரத்தில் வீக்கானவராக இருந்தார் கோபி. அங்கும் அவருக்கு நீதி மறுக்கப்பட நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று ஒதுங்கிக் கொண்டார்.
ரஞ்சித் நினைத்திருந்தால், அல்லது அந்த பஞ்சாயத்துகளின் போது கோபியின் திறமையை உணர்ந்த யாராவது ஒரு தலித் பிரமுகர் நினைத்திருந்தால், அவருக்கு ஒரு படம் இயக்குவதற்கு ஏற்பாடு செய்து தந்திருக்க முடியும். அமைதியாக இருந்துவிட்டார்கள். ஆனால் நல்ல திறமைசாலியை எங்கிருந்தாலும் தேடிப்பிடிக்கிற அறிவு இருந்தது நடிகை நயன்தாராவுக்கு. மேற்படி களேபரங்கள் அனைத்தையும் கேள்விப்பட்டும், நாளிதழ்களில் படித்தும் இருந்த நயன், “கோபியை அழைச்சுட்டு வாங்க” என்றாராம் தன் உதவியாளர்களிடம். போனார் கோபி. அப்புறம் நடந்ததெல்லாம் மிராக்கிள்.
அவருக்கு நடந்த சோகங்களை முதலில் கேட்டாராம். அதற்கப்புறம் நல்ல கதை ஒன்றையும் கேட்டிருக்கிறார் கோபியிடம். அவர் சொன்ன கதை இவருக்கு ரொம்பவே பிடித்துவிட, “நானே ஹீரோயினா நடிக்கிறேன். அந்த படத்தை நானே தயாரிக்கிறேன்” என்றாராம் பெருந்தன்மையோடு.
இதோ- பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை தடபுடலாக முடித்துவிட்டார் கோபி. முருகதாஸ்களை வாழ வைக்கும் அதே கடவுள்தான் நயன்தாரா உருவத்தில் வந்து கோபியையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறான்.
பிரயோஜனமற்ற சாதிக்காரர்களால் தவித்திருந்த கோபிக்கு, நயன்தாரா உதவியது எதற்காக? இந்த கேள்விக்கு விடை தெரிகிற எல்லாருக்கும் தெரியும்… சினிமாவில் ஜாதி இல்லை என்பது!
“கபாலி” படத்தால் சாதியைத் தூக்கி வைத்து்க் கூத்தாடும் அனைவருக்கும் இந்தச் செய்தி பெரிய சம்மட்டி அடி!