நெடுஞ்சாலை / விமர்சனம்

சீவலபேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் என்று அந்த கால டெரர் ஆசாமிகளுக்கெல்லாம் ஆயுள் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தையும் வட்டியையும் சேர்த்தே அனுபவித்து அனுப்பியும் வைத்துவிட்டது தமிழ் சினிமா. மிச்சம் மீதியிருக்கிற அக்யூஸ்ட்டுகளை தேடினால் ஆளுக்கொரு கதை கிடைக்கும். அதற்குள் ஒரு லவ் இருக்கும். இந்த படத்திற்கு பயன்பட்டிருப்பவர் ‘தார்ப்பாய்’ முருகன். தேனி மாவட்டத்தில் ஏணி போட்டு வாழ்ந்தவர் என்கிறது போலீஸ் வரலாறு. நட்ட நடு ராத்திரியில் லாரிக்குள் தாவி, அதிலிருக்கிற பொருட்களை கொள்ளையடிப்பதுதான் இவரது பொழுதுபோக்கு, அட்வென்ச்சர், எல்லாம்.

இவரது கதையை இருட்டிலேயே எடுத்து இருட்டிலேயே முடித்திருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா. மேக்கிங், டேக்கிங் எல்லாம் பலே. இருந்தாலும், பளபள நெக்லசை எண்ணெய் தடவி மாட்டிக் கொண்டது போல எங்கேயோ நழுவுகிறதே… ஒருவேளை அந்த கேமிரா டோன்தானோ?

போகட்டும்… கதை என்ன? இந்த தார்ப்பாய் முருகனை பிடிக்கவே முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிற போலீஸ், எப்படியோ பொறி வைத்து பிடிக்க நினைக்கிறது. இந்த நேரத்தில் முருகனின் காதலி மீது அந்த ஊர் போலீஸ் அதிகாரிக்கும் ஒரு ‘இது’ வந்து சேர, முருகனை கொன்றால் ரிவார்டும் கிடைக்கும். காதலியையும் அமுக்கிக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார். அந்த கணக்கை முருகன் எப்படி முறியடிக்கிறான் என்பது மீதி. ஆனால் அந்த க்ளைமாக்ஸ்? இன்னும் ஒரு முறை யோசித்து செய்திருக்கலாம். திருந்தி வாழ்ந்தவன் செத்தான் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

முருகனாக நடித்திருக்கும் ஆரிக்கு இது மூன்றாவது படம் என்று ஞாபகம். ஆனால் இதுதான் அவரை கோடம்பாக்கத்தின் வருகை பதிவேட்டில் ‘வரவு’ வைத்திருக்கிற படம். இந்த படத்திற்காக உடம்பை கட்டுமரமாக்கியிருக்கிறார் மனுஷன். ஓடுகிற லாரியில் தாவி ஏறுகிற லாவகமும், நரம்புகள் புடைக்க சாகசங்கள் செய்கிற அழகும், ‘வாய்யா… ஆக்ஷன் ஹீரோ’ என்று வேறு பல இயக்குனர்களை வாயார அழைக்க வைக்கும். அவ்வளவு அழகான பெண்ணே இவரை உருகி உருகி காதலிக்கும் போதெல்லாம் முரட்டு பரோட்டாவை வாய்க்குள் அதக்கிக் கொண்டது போல அவர் கோபப்படுவதுதான் ஏனென்றே புரியவில்லை. இவருக்கும் அந்த போலீஸ்காரனுக்குமான ‘வார்’ நிஜமாகவே நரம்புகளை முறுக்கேற்றுகிற ரகம்.

ஹீரோயின் ஷிவதா கேரள வரவு. படத்தில் இவரை ‘மங்கா’ என்றே அழைக்கிறார்கள். ஆனால் வைக்கப்பட்டிருக்கும் கேமிரா கோணங்கள் இவரது பெயரை வேறு மாதிரியெல்லாம் உச்சரிக்க வைக்கிறது தியேட்டருக்குள் வருகிற விசில் வீச்சு வீரர்களை. ஒரு காட்சியில் முருகனை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காக அவர் செய்கிற யுக்தி, பேரதிர்ச்சியை தருகிறது. யெஸ்… எல்லா துணியையும் உருவி போட்டுவிட்டு அம்மணமாக நிற்கிறார் அவர் முன். எல்லாம் முருகனின் ஒரு வாய் உண்மைக்காக. அந்த உண்மைதான் இவரை நீதிமன்றத்திலிருந்து காப்பாற்றுகிறது. விபசாரி என்கிற அவச்சொல்லிலிருந்து மீட்கிறது. (அப்படின்னா சரி… )நயன்தாராவின் ஜெராக்ஸ் போலிருக்கும் மங்காவின் ஓடியாடி வேலை செய்யும் அழகுக்காகவே இன்னும் ஒருமுறை தியேட்டருக்குள் போய் வரலாம்.

மங்காவின் சாலையோர பரோட்டா கடையில் பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார் தம்பி ராமய்யா. அவருக்கேயுரிய வார்த்தை சவடால்களில் சிரிப்பு மூட்டுகிறார். அந்த போலீஸ் அதிகாரி பிரசாந்த் நாராயணன். தமிழ்சினிமாவுக்கு புதுசு. வேறு லாங்குவேஜ் படங்களில் கில்லாடியாக இருந்திருக்கலாம். அவரது லாக்கப் ஸ்டைல் அழகோ அழகு. ஒரு கெட்ட போலீஸ்காரன் எப்படியெல்லாம் இருப்பானோ, அப்படியெல்லாம் இருக்கிறார் இவர். அவரே சொந்த குரலில் பேசியிருப்பதுதான் சற்றே டப்பிங் பட எபெக்டை வரவழைக்கிறது.

பிரபல மலையாள நடிகர் சலீம் குமாருக்கு மிக முக்கியமான ரோல். மனிதர் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார். இவர் காமெடியனா, வில்லனா என்கிற குழப்பத்தையெல்லாம் தாண்டி அவருக்குள்ளிருக்கும் இரண்டு குணத்தையுமே ரசிக்க முடிகிறது. கும்கி அஸ்வினுக்கு சொல்லிக் கொள்வது போல ரோல். அதிலும் முதலாளியின் வீட்டம்மா மேலேயே ‘கை’ வைக்கிற ஆள். தப்பு தப்பான கான்சப்டாக இருந்தாலும், காமெடிதானே… சிரிச்சுருவோமே?

எலக்ஷன் நேரத்தில் பணம் எப்படியெல்லாம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்பதை கொஞ்சம் திகில் தடவி காண்பிக்கிறார்கள். அந்த மரக்கடத்தல் முதலாளியிடம் சிக்கிக் கொள்ளும் ஆரி, ஒரு டயலாக்கில் தப்பிப்பது பலத்த கைத்தட்டலுக்கு உரியது. வசனக்காரரின் கூர்மையான வரிகள் இப்படி ஆங்காங்கே பிரமிக்கவும் வைக்கிறது.

இசை சத்யா. ஒரு குத்துப்பாட்டை வழக்கமான தாள கதியில் உருவாக்காமல் வேறு மாதிரி தந்திருப்பது அழகு. த்ரில்லர் ஆக்ஷனுக்கேற்ற பின்னணி இசைக்காகவும் பாராட்டுகள்.

நள்ளிரவை தவிர பிற நேரங்களில் கேமிரா டோர்ன் மாற்றப்பட்டிருக்கலாம். இருந்தாலும் ஒளிப்பதிவாளர் ராஜவேல் பல திருட்டுகளில் பிரமிக்க வைக்கிறார்.

படத்தில் நிறைய காட்சிகளுக்கு லிப் சைலன்ட் செய்திருக்கிறது சென்சார். அதிலும் மங்கா வருகிற காட்சிகள்தான் நிறைய. தனியா ஒரு பொண்ணு இருந்தா டயலாக் ரைட்டருக்கு கூட கை நீளமாகும் போலிருக்கிறது. அதிலும் அந்த ஷேவிங் கடை பையனின் வாய்லேயே போடலாம் போலிருக்கிறது.

ஆங்காங்கே பள்ளம் மேடுகளில் குலுங்கி விழுந்தாலும் நெடுஞ்சாலை பயணம் எப்பவும் சுகம்தான்… இந்த லாரி பயணத்தையும் சேர்த்து!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தேர்தலுக்கு முன்னே வாங்கப்பா… கவுண்டமணியின் குரலுக்கு நோ ரெஸ்பான்ஸ்!

49 முறை ஓ போட்டாலும் கவுண்டமணியின் வேண்டுகோளை யாரும் கேட்பதாக இல்லை. கடந்த பல வருடங்களாகவே ‘அட போங்கப்பா... நீங்களும் உங்க சினிமா அறிவும்’ என்று ஒதுங்கியிருந்த...

Close