அடுத்த நோட்டீஸ் அஜீத் விஜய்க்கா?
சில தீர்ப்புகள் வரும்போது, அதை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்பார்கள் அரசியல்வாதிகள். அப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க நோட்டீஸ் ஒன்றை ரஜினிக்கு அனுப்பி, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்திருக்கிறது கர்நாடகா நீதிமன்றம். பெரிய அதிரடியெல்லாம் ஒன்றுமில்லை. சின்ன விழிப்புணர்ச்சிதான்…
ரஜினியின் படங்கள் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும்போது அங்கிருக்கும் ரஜினி ரசிகர்கள் அவரது கட் அவுட்டுக்கு லிட்டர் லிட்டராக பால் அபிஷேகம் செய்ததை கவலை பொங்க பார்த்த ஒரு காருண்ய ஆசாமி, இந்த கொடூரத்தை அடக்க வேண்டும். நாட்டில் எத்தனையோ குழந்தைகள் ஒரு வேளை பாலுக்கு தவிக்கும் போது இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று நீதிமன்றத்தை நாடிவிட்டார். நல்லவேளை… அவர்களும் அலட்சியம் காட்டாமல் இது தொடர்பாக விளக்கம் கொடுக்கும்படி ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டது.
“முதல்ல உங்க குடும்பத்தை கவனிங்க. அப்புறம்தான் நாங்கள்லாம்” என்று அரசியல்வாதிகளின் நாக்கை வைத்துக் கொண்டு சப்புக் கொட்டி சப்புக் கொட்டி பேசினாலும், நிஜத்தில் இதுபோன்ற செயல்களை ரசிக்கவே செய்கிறார்கள் நம்ம ஊரு ஹீரோக்கள். அவங்களா பால் வாங்கி அபிஷேகம் பண்ணினா அதுக்கு நான் என்ன பண்ணுறதாம்? என்று சிம்பிளாக ஒரு விளக்கத்தை கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட முடியும். ஆனால், அதுதான் உண்மையா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியத்திலிருக்கிறார் ரஜினியும் கூட.
சரி… போகட்டும். கர்நாடகாவில் நடந்த மாதிரி இங்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? ஒரு வேளை அப்படி யாராவது வழக்கு தொடரும் பட்சத்தில், ரஜினி கமல் அஜீத் விஜய் நால்வருக்கும் நோட்டீஸ் போகும். அவர்களும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
சைலண்ட்டாக மன்றத்தை பணம் கொடுத்து ஆபரேட் செய்து வரும் படா படா ஹீரோக்கள், ஒரு முறை ஆற அமர உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நேரமிது!