பாலா பேசட்டும்… கருத்து சொல்ல முடியாது! பாரதிராஜா பதில்!
“ஏன்… அவருதான் உணர்ச்சிவசப்படுவாரா? எங்களுக்கெல்லாம் உணர்ச்சி வராதா? புழு பூச்சியெல்லாம் கூட உணர்ச்சிவசப்படுது. அவரு பேசுனா நானும் பதிலுக்கு பேசுவேன்” என்று வேட்டியை மடிச்சு கட்டிவிட்டார் பாலா. இப்படியொரு திருப்பம் நிகழும் என்று பாரதிராஜா அண் கோ நினைத்துக் கூட பார்த்திருக்காது. நேற்று மாலை ஏழு மணியிலிருந்து நிலைமையே வேற! ரத்னகுமார் வாய் மூலம் பாரதிராஜா தன் கருத்துக்களை கொட்டியதாக ஊர் உலகம் கருதினாலும், நிஜத்தில் ரத்னகுமாருக்கென ஒரு ரத்த சரித்திரம் உண்டு. வின்னர் கைப்புள்ள போல பல இடங்களில் அனுபவப்பட்டவர்தான் அவர்.
இப்பவும் பாலா குறித்து குற்றப்பரம்பரை முகாமுக்கு ஒரு அச்சம் இருக்கிறது. எப்படி? சமீபத்திய உதாரணம் இதுதான். இங்கிருந்து படத் துவக்க விழாவுக்காக உசிலம்பட்டிக்கு போனார்கள் அல்லவா? அதில் ஒரு சிலரை தவிர முக்கால்வாசி பேர் முகவரியை தேடி அலைபவர்கள். சிலருக்கு அந்த நம்பிக்கை கூட இல்லை. அவர்களையே அச்சப்பட வைத்துவிட்டார்களாம் அங்கே. பாலா நூற்றம்பது ஆட்களுடன் பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று எவனோ கிளப்பிவிட, பரபரப்பாகிவிட்டதாம் பூஜை ஏரியா! வருபவர்கள் கத்தி கபடாவோடு வருகிறார்களோ, வேல் கம்பு வீச்சருவா வைத்திருப்பார்களோ… என்றெல்லாம் அச்சப்பட ஆரம்பித்துவிட்டார்களாம். உடனடியாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சொல்லியனுப்பி எதற்கும் தயாராக இருந்ததாகவும் போய் வந்தவர்கள் மூச்சு வாங்க விவரிக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்சினிமா இயக்குகர்களில் பலர் இன்றும் பாரதிராஜாவை ‘அப்பா அப்பா’ என்றுதான் அழைக்கிறார்கள். வயதில் மூத்தவர் என்பதால் மட்டுமல்ல, அவரது வருகைக்கு பின்தான் கோடம்பாக்கத்தின் வாசல் சாமான்யர்களுக்கும் திறந்தது என்பதாலும்தான். பாரதிராஜா பேசுனா யாரும் எதிர்த்து பேச மாட்டாங்க என்ற நம்பிக்கையும் இருந்தது. அந்த நம்பிக்கையையும் மரியாதையையும் வண்டுமுருகன் கோஷ்டியின் எக்குதப்பான பேட்டிகள் காலி பண்ணிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
நேற்று பாலா பேசியதற்கு பாரதிராஜா இன்று சுட சுட ஒரு பிரஸ்மீட் வைத்து கொந்தளிப்பார் என்று நினைத்த ஊடகங்களுக்கு பலத்த ஏமாற்றம். இது தொடர்பாக அவரிடம் பேசிய நிருபர்களிடம், “பாலா பேசட்டும்… நான் ஒன்றும் கருத்து சொல்ல முடியாது” என்று கூறிவிட்டார் பாரதிராஜா.
இந்த அமைதி நீடிக்குமா? நீடிக்க விடுவார்களா? போக போகதான் தெரியும்.