எனக்குதான்! இல்லயில்ல எனக்குதான்! இரண்டு கம்பெனிகளிடம் சிக்கித் தவிக்கும் ஒரு படம்?

பிரட் பாக்கெட்டை கூட ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொள்ள மனம் ஒப்பாத உலகத்தில், கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை எனக்குதான்… உனக்குதான்… என்று சொந்தம் கொண்டாடுவதற்கு நடக்கும் சதியும், அந்த சதி செய்த விதியும்தான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்! இந்த கோக்கு மாக்கு கொடூரத்தில் தயாரிப்பாளர் சங்கமும் சிக்கிக் கொண்டது இப்போது.

மணி (Money) என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. முதலில் இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தது அன்னை தெரசா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம். பிற்பாடு இந்த தலைப்பு தங்கள் கதைக்கு பொறுத்தமாக இருக்கும் என்று நம்பிய இன்னொரு நிறுவனமான ஆர்.ஆர்.சினி புரடக்ஷன்ஸ் அந்த தலைப்பை முறைப்படி பணம் கொடுத்து வாங்கிக் கொண்டது. தலைப்பை கொடுத்த அன்னை தெரசா நிறுவன அதிபரே இந்த புதிய கம்பெனியிடம் படப்பிடிப்பு நேரத்தில் உதவியாகவும் இருந்திருக்கிறார். படம் முடிந்தது. விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும். இந்த நேரத்தில்தான் இவ்விருவருக்கும் இடையே தகராறு. தலைப்பை முதலில் விற்ற அன்னை தெரசா இன்டர்நேஷனல், இப்போது முழு படமும் எனக்கு சொந்தம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்தது.

ஆனால் அன்னை தெரசா இன்டர்நேஷனலுக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் உண்மையை கண்டறிந்து நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று ஆர்.ஆர்.சினி புரடக்ஷன்ஸ் சார்பில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டதாம். இவர்கள் தங்கள் சங்கத்தை பதிவு செய்திருப்பது கில்ட் என்ற அமைப்பில்.

பிரச்சனையே இப்போதுதான் ஸ்டார்ட்! ஆர்.ஆர்.சினி புரடக்ஷன்ஸ் கடிதம் கொடுத்த பின்பும், அன்னை தெரசா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பப்ளிசிடி கிளியரன்ஸ் கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

இது முறையல்ல. சரியல்ல. என்று நீதிமன்றத்திற்கு போயிருக்கிறது ஆர்.ஆர்.சினி புரடக்ஷன்ஸ். இத்தனைக்கும் படத்தை சென்சார் செய்து அதன் சர்டிபிகேட் உரிமையையும் தானே வாங்கி வைத்திருக்கிறது இந்த நிறுவனம்.

இருவருமே தங்கள் தங்கள் நிறுவனங்களின் பெயருடன் செய்திதாள்களில் விளம்பரம் கொடுத்து வருவதுதான் அதிர்ச்சி.

ஒரே படத்தை இருவர் உரிமை கொண்டாடுவது இதுவே முதன் முறை என்று களேபரம் ஆகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். படத்துல ஆக்ஷன் இருக்கலாம். இப்படி ஆக்ஷன்ல படம் சிக்கிக்கிச்சே?

1 Comment
  1. VIJAY BOSE says

    படப்பிரச்சனை என்றால் நடுநிலையோடு தீர்க்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கமே சட்ட விரோதமாக செயல்படுபவர்களுக்கு உதவுவது மிகவும் கண்டிக்கத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருட்டு விசிடி எடுப்பதே தியேட்டர்களில்தான்! விஷால் பேச்சுக்கு திருப்பூர் சுப்ரமணியம் ஆத்திரம்! (ஆடியோ இணைப்புடன்)

மருது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், தமிழ்சினிமாவை அழித்து வரும் திருட்டு விசிடி பற்றி சில விஷயங்களை காட்டமாக பேசினார். “24 படத்தின் திருட்டு விசிடி...

Close