ஒருநாள் கூத்து விமர்சனம்
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு பக்கம் நீர் பாயும். மறுபக்கம் தென்றல் வீசும். வேறொரு பக்கம் எருமை புகுந்து வயிறு நிரம்ப தின்னும். எல்லாவற்றையும் அசால்ட்டாக கதைக்குள் நுழைத்து, நம்மை நகர விடாமல் ரசிக்க வைக்கிறாரே… அதற்காகவே ‘கவர்’ பிதுங்குகிற அளவுக்கு முதல் மொய்யை நீட்டிவிடலாம்…. “புடிங்க நெல்சன் வெங்கடேசன்”.
‘இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று’ தத்துவத்தை நோக்கிதான் கதை நகர்கிறது. எங்கோ ஆரம்பிக்கிற முடிச்சு, எவரெவர் கழுத்தோ மாறி, கடைசியில் பொறுத்தமான இடத்தில் லேண்ட் ஆகிற அந்த அற்புத தருணத்தை இவ்வளவு ‘லைவ்’வாக சொல்லிவிட முடியுமா? வியப்பு வியப்பு… அதிலும் நாமொன்றை யூகிக்க, “அப்படியா நினைச்சே? இப்ப பாரு…” என்று டைரக்டர் வேறொரு கோணத்தை நோக்கி செல்கிற போது, மனுஷன் மேஜிக் புலியா இருப்பாரோ என்றுகூட எண்ண வைக்கிறார்.
ஐடி-யில் வேலை பார்க்கும் நிவேதாவுக்கும் தினேஷுக்கும் லவ். பிரச்சனை என்னவென்றால், நிவேதா ரிச். தினேஷ் பரிதாப பச்! “அப்பா உன்னை மீட் பண்ணணும்ங்கிறார்” என்று சந்திக்க வைக்க நினைத்தால் கூட, கூச்சத்தால் தள்ளி தள்ளிப்போகும் தினேஷ், ஒரு கட்டத்தில் நிவேதாவின் அப்பா பேசுகிற வார்த்தைகளால் மேலும் கூசிப்போக… அப்புறம் என்ன? லவ் டமால்! இன்னொரு பக்கம் ரித்விகா. சூரியன் எப். எம். ல் வேலை பார்க்கும் தொகுப்பாளினி. நிச்சயம் செய்யப்பட்ட வரன், திடீரென இன்னும் சிவப்பா… இன்னும் அழகா… என்று எவளோ ஒருத்தியை எதிர்பார்த்து இந்த கல்யாணத்திற்கு பேக் அடிக்க… கெஞ்சுகிறார் அவனிடம். மூன்றாவதாக மியா ஜார்ஜ். குடும்ப குத்துவிளக்கு. ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத மஹாலட்சுமி. கொள்ளை அழகு. ஆனால் “எம் பொண்ணுக்கு இன்னும் நல்ல வரன் கிடைக்கும்” என்று வந்த வரன்களையெல்லாம் தட்டிக்கழிக்கிற அப்பா. ஒரு கட்டத்தில் கோட்டானும் குரங்குமாக பெண் பார்க்க வருகிறார்கள். இரண்டாம் தாரமே ஓகே என்கிற அளவுக்கு தள்ளப்படுகிறார் மியாஜார்ஜ்.
இறைவன் போட்ட முடிச்சு, யாரோடு யாருக்கு? சாலையை கிராஸ் செய்யும் மியாஜார்ஜையும், ஒரு கொடூர கார் ஆக்சிடென்டையும் எடுத்த எடுப்பிலேயே காட்டிவிட்டு கதை சொல்ல ஆரம்பிக்கிற டைரக்டர், இறுதியில் அவிழ்க்கிற முடிச்சு… ஒரு தேர்ந்த இயக்குனருக்கான வித்தை!
இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர்தான் போல தினேஷ்! அச்சு அசலாக அப்படியே பொருந்தி விடுகிறார். அந்த வரலாற்று சிறப்பு மிக்க ‘குக்கூ’ கண்ணை வைத்துக் கொண்டு அப்படி இப்படி முழித்தாலும், சில நிமிஷங்களில் கதைக்குள்ளே நம்மை இழுத்துக் கொள்கிறது அவரது நடிப்பு. ஏழைக்கேயுரிய சங்கடம் இருந்தாலும், தன் மாமனார் சொன்ன ஒரு வார்த்தைக்காக திருப்பி பதிலடி கொடுக்கிற காட்சி, கைதட்டல்களுக்குரியது. “என்னை என்ன பண்ண சொல்ற? கோவணத்தோடு எங்கப்பா வந்து உங்கப்பாட்ட பொண்ணு கேட்க சொல்றியா? ஏன் குடும்பத்தோட வாங்கன்னு உங்கப்பா சொல்ல வேண்டியதுதானே?” என்றெல்லாம் நிவேதாவை பிரியும் நேரத்தில் கண்கலங்க பேசும் தினேஷ், அந்த நிமிஷம் விலுக்கென தேம்ப வைக்கிறார். (ஆனால் தம்பி… அதை முன்னாடியே பேச வேண்டியதானே?)
அப்படியே கேரக்டருக்குள்ளேயே கரைந்து போயிருக்கிறார் அந்த நிவேதா பொண்ணு. எப்படியொரு நடிப்பு! காதலனிடம் கோபத்தை காட்டுகிற வேகம், பின் தணிந்தபின் கட்டிக் கொண்டு அழுகிற சோகம். காதலித்தவனே திரும்ப கிடைக்கிற சூழ்நிலை வந்தபோதும், அப்பாவின் முன் அவனை விட்டுக் கொடுக்காத கம்பீரம். இப்படி எல்லா ஏரியாவிலும் நின்று விளாசுது பொண்ணு. பொருத்தமான டைரக்டர்கள் அமைந்தால், எதிர்கால சினிமாவை ஒரு உலுக்கு உலுக்குவார் இந்த ராட்சஸி.
ரித்விகா! அந்த முட்டைக்கண்ணில் எந்த நிமிஷமும் எட்டிப்பார்க்க துடிக்கும் கண்ணீர். அதை மீறி கடமை அழைக்க… உதட்டில் இன்ஸ்டன்ட்டாக ஒரு புன்னகையை ஒட்டிக் கொண்டு ரேடியோ ஜாக்கியாக தொழிலை நிறைவு செய்யும் அழகு என அசரடிக்குது பொண்ணு. “சே… இவ்ளோதானா. இதுக்கா இவ்ளோ போராட்டம்’‘ என்று ரித்விகா சொல்கிற இடமும், சுச்சுவேஷனும், கெட்டப் பொண்ணும்மா நீ! (மீடியா பொண்ணுங்க மேல வருங்கால மாப்பிள்ளைகள் வைக்கிற சந்தேகத்துக்கு ‘ஆமாம் சாமீ’ போட்டுட்டீங்களே டைரக்டர்? வன்மையா கண்டிக்கிறோம்)
சில அப்பாக்கள் எங்கேயோ இப்படியிருக்கிறார்கள். சில மகள்களும் எங்கேயோ இப்படியிருக்கிறார்கள். ஓவியம் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் மியா ஜார்ஜ், கதையில் மட்டுமல்ல, காட்சியிலும் அப்படியேயிருக்கிறார். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்னை வந்தால், இப்படியா முடியணும்? நியாயமாக நான் வர்றேன். நீ ஓரிடத்தில் நில் பெண்ணின் ஊரை நோக்கி பையன் அல்லவா வந்திருக்க வேண்டும்? இடிக்குதே நெல்சன்!
காமெடிக்கு பாலசரவணன் இருக்கிறார். அவரது அசால்ட்டான வசனங்கள் இருக்கின்றன. அவரையும் சமயங்களில் மிஞ்சுகிறாரே… அந்த சாப்பாட்டு ராமன். யார் சார் அவர்? இப்படி படத்தில் வந்து போகிற சில கேரக்டர்கள் மனதில் நச்சென்று அமர்கிறார்கள். நிவேதாவின் அப்பா செந்தில், மியாஜார்ஜின் அந்த கிராமத்து தோழி என்று சிலருக்கு குவிய வேண்டிய அப்ளாஸ்கள் கூடை கூடையாய் ரெடி!
‘எப்போ எவரோ…’ என்கிற அந்தகாலத்து பாடலை இந்த காலத்திற்குள் அப்ளை பண்ணிய அழகு, ‘அடியே அழகே…’ என்று மெலடியால் கொள்ளையடித்த விதம் என இசையால் மேலும் படத்தை ஜொலிக்க விடுகிறார் ஜஸ்டின் பிரபாகர். தமிழ்சினிமாவுக்கு கிடைத்த வெளிச்சமே வருக…
கொஞ்சம் கை தவறியிருந்தாலும் ஆப்ரேஷன் அரோகரா என்கிற அளவுக்கு மூன்று கேரக்டர்களின் குழப்பமான டிராவல், குந்துனாப்ல இறக்கி வைக்கப்பட்டுள்ளது என்றால், அது எடிட்டரின் திறமையன்றி வேறென்ன? பாராட்டுகள் சாபுஜோசப்.
ஆங்… மறந்தாச்சே. நம்ம ரமேஷ்திலக் மற்றும் கருணாகரன். எல்லா படத்திலும் என்னை கைதட்டாமல் ரசிக்க முடியாது என்று சவால்விடும் ரமேஷ் திலக், இதிலும் அதையே அடைந்திருக்கிறார். ஒரு ஜாலியான பையனை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும் என்கிற பார்முலாவை நம்பி இவர் தலையில் ஏற்றி வைத்ததற்கு அந்த கட்டில் காட்சியில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரமேஷ். (நல்லா வரணும் அண்ணே) ஒரு அண்ணனின் பொறுப்பை தங்கைக்காக கரையும் போது காட்டி உணர வைத்திருக்கிறார் கருணாகரன். நல்ல குணச்சித்திர நடிப்பு. சார்லியும் கூட. (ஐம்பதை கடந்த பேச்சுலர்களுக்குதான் இந்த கேரக்டரின் அருமை புரியும்)
கதையோடு பின்னி பினைந்த ஒளியுடன் கூடிய அழகான கேமிரா. வெல்டன் கோகுல் பென்னி.
சிவாஜியின் பர்பாமென்சில் வரும் ‘பூ முடித்தாள் இந்த பூங்குழலி’யையும், ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா’வையும் குழைத்து அடித்து குவளை நிறைய கொடுத்திருக்கிறார் நெல்சன். வயிறு மட்டுமல்ல, மனசும் புல்லாயிருச்சு மக்களே!
-ஆர்.எஸ்.அந்தணன்