மீண்டும் ரஞ்சித்துக்கு ஒரு படம்! தாணு அறிவிப்பு!
ஒரு ஹீரோவையோ, ஒரு இயக்குனரையோ ஒரு தயாரிப்பாளர் ரிப்பீட் பண்ணுகிறார் என்றால், சம்பந்தப்பட்ட இயக்குனருக்கும் மகிழ்ச்சி அந்த தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம்? பொதுவாகவே பட ரிலீசுக்குப் பின், ‘ஹிட் ஸ்பிரே’யை கண்ட கொசு மாதிரி ஓடி ஒளிவதுதான் இயக்குனரின் இயல்பாக இருக்கும். ஏனென்றால் படம் துவங்கி அது முடிவதற்குள் ஒருவர் காதில் இன்னொருவர் ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருப்பார். சிலர் கட்டி உருண்டு புரண்ட கதையெல்லாம் கோடம்பாக்கத்தில் உண்டு.
அப்படியொரு உறவாக இருக்கும் என்று கூட கபாலி விஷயத்தில் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் தம்பி… தம்பி… என்று தாணு உருகியதையும், சார் சார்… என்று பா.ரஞ்சித் குழைந்ததையும் மேடை நாகரீகமாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஏன்? தாணு உள்ளத்திலிருந்து பேசிய வார்த்தைகள் அப்படி.
“ரஞ்சித் தம்பி இந்தக் கதையை சொல்லும்போது நானும் ரஜினி சாரும்தான் உட்கார்ந்து கேட்டோம். அவர் சொல்லி முடித்ததும் நான் எழுந்து கைதட்டினேன். அப்படியே தம்பியை கட்டிப்பிடித்துக் கொண்டேன். தயாரிப்பாளர்களின் இயக்குனர் ஆகிவிட்டார் தம்பி ரஞ்சித். நான் அவரிடம் என் கம்பெனிக்கே இன்னொரு படம் இயக்கச் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றார் உணர்ச்சிக் குவியலாக!
அப்படியே ரஜினி குறித்து தாணு பேசியது, ரஜினி ரசிகர்களுக்கு பூஸ்ட்!
சூப்பர் ஸ்டார் அவர்களோடு பயணிக்கும் போது கிட்ட தட்ட 24 மணி நேரம் உழைத்தார் என்ற கூற வேண்டும்.காலை ஏழு மணிக்கு படபிடிப்புக்கு வந்த சூப்பர் ஸ்டார் விடியற்காலை நான்கு மணிக்கு சென்றார். அப்போது நான் அவரிடம் இப்படி உழைத்தால் உடல் நலம் என்ன ஆவது என்றேன் அதற்க்கு அவர் , எல்லோரும் ஆர்வமாக உழைக்கிறார்கள் இப்படியே போகலாம் என்று கூறினார். உடல் நலம் சரி இல்லாத போது கூட அவர் படபிடிப்பில் பங்கேற்று நடித்தது நிஜமாகவே பெரிய விஷயம்.
படம் தயாரானதும் நான் அவரும் படத்தை சேர்ந்து பார்க்க வேண்டியது , ஆனால் வேலை பளுவால் என்னை படத்தை பார்க்க முடியவில்லை. சூப்பர் ஸ்டார் அவர்கள் மட்டும் படத்தை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு எங்களுடைய 36 வருட நட்புக்கு கபாலி ஒரு மகுடம் என்று கூறினார். அதன் பின்னர் அவர் நேரில் சென்று பார்த்த போது தாணு எல்லோரும் “ பாட்சா “ பாட்சா” என்று கூறுவார்கள் ஆனால் இது “ தளபதியும் “ “ நாயகனும் “ கலந்த ஒரு கலவை , ரஞ்சித் கிரேட் என்றார்.இன்னும் நிறைய பேச வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது அதை நான் படத்தின் வெற்றி விழாவின் போது பேசுவேன் என்றார் தாணு.
அதுக்காவது ரஜினி நேர்ல வருவாரா?