தொடரும் ரஞ்சித் பீதி!
சினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால்? “குழந்தை பாவம்… தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள் பிரார்த்திப்பார்களாக!
ஏன்? நம்ம சினிமா அப்படிதான். எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குனர் பிற்பாடு ஹீரோவானார். பெரிய பிசினஸ். கோடிகளில் கொண்டாட்டம். ஆனால் அவருக்கும் சாதி அரிப்பெடுத்தது. தன் படங்களில் லேசாக அதை உள்ளே நுழைத்தார். ஆயிரம் கோடி ஜனங்களில் ஒருவன் என்ற அவரது இன்ட்ரோ பாடல், நான் ஒரு சமுதாயத்தின் போர்வாள் என்பதாகவே காட்டியது நடுநிலை ரசிகனுக்கு. இனிமே உன் படம் எனக்கெதுக்கு? என்று முடிவெடுத்தான். இன்று எஸ்.ஜே.சூர்யா, யார் யார் படங்களிலோ வில்லன்.
இப்படி ஒருவர் இருவரல்ல… பலர் கூடி தேர் இழுக்கும் சினிமாவில், நான்தான் உற்சவர் என்று கிளம்பும் பலருக்கு சினிமா தந்தது தண்டனை மட்டுமல்ல, வாலின்ட்டரி ரிட்டையர்மென்ட். இதெல்லாம் ரஞ்சித்துக்கு புரியாத விஷயமும் அல்ல. இப்பவே அவருக்கு ஹீரோ கிடைப்பார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது கோடம்பாக்கம். சூர்யாவின் படம் கூட அரைகுறை ஸ்டேஜில் இருப்பதாகதான் செய்திகள் கசிகின்றன. இந்த நேரத்தில் அவரது உறுதியான ஸ்டேட்மென்ட் வியக்க வைத்தாலும், அட்டகத்தி, மெட்ராஸ் மாதிரியான படங்களை கொடுத்தவராச்சே என்கிற அக்கறையில் கவலை கொள்ளவும் வைக்கிறது.
நேற்று நடைபெற்ற கபாலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிய உரையில் கடைசி பகுதி இது.
“சமுதாயம் என் மீது பெரிய பொறுப்பை சுமத்தியிருக்கு. என் படங்களில் நான் அதை தொடர்ந்து செய்வேன்! மகிழ்ச்சி!”
பின்குறிப்பு- நல்ல படைப்பாளிக்கு சூர்யாவின் கால்ஷீட் கிடைத்தாலென்ன, கிடைக்காவிட்டால்தான் என்ன? மொக்கை தினேஷே போதும்! ஆனால் மொக்கை தினேஷ் போதும் என்ற முடிவுக்கு வியாபாரிகளும் வரணுமே?