‘எள்ளுருண்டை விழுந்து எறும்பு சாவு!’

‘தண்ணீரில் மனிதன் எடையிழப்பான்’ என்கிறது ஆர்கிமிடீஸ் தத்துவம்! தண்ணீரில் மனிதன் எடையை மட்டுமா இழப்பான்? உடை, மானம், மரியாதை, குடை, அண்ணாக்கயிறு, செருப்பு அத்தனையும் இழப்பான் என்கிறது ‘நீர்’க்கிமிடீஸ் தத்துவம்! குப்புறவோ, மல்லாந்தோ ஒருக்களிச்சோ கிடக்கிற ஒவ்வொரு குடிகாரனும் நல்ல செருப்போடு கடைக்கு போய் வெறுங்காலோடு திரும்புகிறான். செகன்ட்ஹான்டில் செருப்பு விற்றே பிழைக்கிறார்கள் பலர்! செருப்பிலிருந்து செல்வாக்கு வரை எல்லாவற்றையும் தொலைக்கிற குடிகாரனுக்கு அதே போதை மடத்தில் ஒரு செல்லுலாய்டு சிற்பம் கிடைத்த கதை இது!

அள்ளுவதற்கு மேகமும், அணைத்துக் கொள்ள பஞ்சுமிட்டாயும் வேண்டுமென்று நினைக்காத மனசிருந்தால் சொல்லுங்களேன் பார்க்கலாம்…! சினிமா பார்ட்டிகளுக்கு போகிற பல நடிகர்களுக்கு சியர்ஸ் தவிர வேறு பல சைட் டிஷ்கள் கிடைக்கிறது. எறும்புக்கு எள்ளுருண்டை கிடைத்தால் என்ன செய்யுமோ? அது போல முயற்சி செய்தாவது உருட்டிக் கொண்டு போகிறார்கள். முடிவில் ‘எள்ளுருண்டை விழுந்து எறும்பு சாவு’ என்று கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாகிறது அந்த பார்ட்டியும் அவர்களின் சொந்தக் கதையும்!

முதல் மழைத்துளி விழுவது நிலத்திலா, செடியிலா, பூத்திருக்கும் ரோஜாவின் இதழ்களிலா? அல்லது யாராவது ஒரு வழுக்கை தலையரின் நடு மண்டையிலா? அது இரு தரப்புக்குமான அதிர்ஷ்டத்தை பொருத்த விஷயம். இந்த மழைத்துளி விழுந்தது எங்கே? எப்படி?

அது ஒரு சினிமா ஹீரோவின் 100 வது நாள் பட விழா பார்ட்டி.

தெருமுனையில் மந்திரிச்சு தாயத்து விற்பவனின் ‘லாகிரி’ வார்த்தைகளை விட மோசமான பொய் இந்த 100 வது நாள் விழா என்பதுதான். ஒரு தியேட்டரில் 100 நாள் ஓடினால்தான் அது 100 வது நாள். ஆண்டிப்பட்டியில் ரெண்டரை ஷோ, பல்லாவரம் தியேட்டரில் பதினொரு மணி ஷோ, முப்பாத்தம்மன் கோவில் திருவிழா டி.வி.டியில் முக்கா மணி நேரம் என்று கணக்கை கூட்டிக்கழித்து 100 வது நாள் வரும்போது ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்கிறார்கள். அதற்காகவே காத்திருக்கிற நாக்குகள் ‘சியர்ஸ் சியர்ஸ்’ என்கிறது.

அப்படியொரு 100 வது நாள் பார்ட்டிதான் அது!

ஒரு சில நடிகர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எப்படிதான் மூக்கு வியர்க்குமோ? எல்லா பார்ட்டிகளிலும் இருப்பார்கள். அவர்களின் வருகையை துச்சமாகவோ மிச்சமாகவோ மதிக்க மாட்டார்கள் பார்ட்டியை ஏற்பாடு செய்யும் பிரபலங்கள்! ஏன்? அவர்களின் பங்கு அந்த பார்ட்டியில் அப்படியிருக்கும்! எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். அவனுக்கு அது பிடிக்கும். இவனுக்கு இது பிடிக்கும். “ஏன்யா… பச்சை மிளகாயை நடுவுல ரெண்டா அறுத்து, அதை கிளாசின் ஓரத்துல சொருவி கொண்டு வா. அதுதான் தலைவருக்கு பிடிக்கும்” என்று ‘பேரரை’ விரட்டுவார்கள். “விஸ்கி கிளாஸ்ல பீர் ஊற்றி அடிச்சா, அது விஸ்கிக்கும் கேவலம், பீருக்கும் பிராப்ளம்…” என்று சூத்திரம் மாறும்போதெல்லாம் ஆத்திரம் கொண்டு சரி பண்ணுவார்கள். அதெல்லாம் ஒரு வித்தை. கலை. சாமர்த்தியம்! பிரேம் போட்ட காமெடியனும் அப்படியொரு கலையை கைக்குள் வைத்திருந்தார்.

அதனால் கோடம்பாக்கத்தில் நடக்கிற அநேக பார்ட்டிகளில் அவரும் இருப்பார். அதையெல்லாம் விட பெரிய வித்தை அவரிடம் இருக்கிறது. அதுதான் படா படா ஹீரோக்களையும் பல்லிளிக்க விடுவது! மைக்கை கையில் எடுத்துக் கொள்வார். அங்கு வந்திருக்கும் ஹீரோக்களையும் ஹீரோயின்களையும் அப்படியே பார்வையாலேயே நோட்டம் விடுவார். ரகசியமாக இவர் காதில் போய், “மச்சி… எப்படியாவது என்னை அவ கூட பேட்ச் அப் பண்ணிடுறா” என்று சொல்லிவிட்டால் போதும். அந்த பார்ட்டி முடிவதற்குள் இருவருக்கும் நடுவே ஆயுளுக்கும் நீடிக்கிற அளவுக்கு ஒரு பந்த பாசத்தை பயிரிட்டு, பார்ட்டி முடிவதற்குள் அறுவடையும் செய்து வைப்பார்.

அன்றும் அப்படிதான் நடந்தது. முன்னணி தாரகைகளும், முதல் தர ஹீரோக்களும் கூட இருந்தார்கள் அங்கே. “நானும் ரொம்ப நேரமா பார்க்குறேன். இந்த கிளிக்கு அந்த கொய்யாப்பழத்து மேல ஆச. ஹ்ம்…கரெக்டா? உங்களைதான் தலைவா?” என்று ஒரு ஹீரோவை எழுப்பி, “நீங்க ஏன் தொலைவிலேயே இருந்து வெறிச்சு வெறிச்சு பார்க்குறீங்க? போய் அவங்க பக்கத்துல உட்காருங்க. பேசுங்க” என்று ஜாயின்ட் அடித்தார்.

அதற்கப்புறம் இந்தப்பக்கம் திரும்பி, “ஆங்… உங்களையும்தான் கவனிக்கிறேன். ஆமா… போன வாரம் கூட வண்ணத்திரையில நீங்க ரெண்டு பேரும் ஊர் சுத்துறீங்கன்னு போட்ருந்தானுங்களே? இப்ப என்ன தயக்கம். ஹ்ம் கௌம்புங்க” என்று இன்னொரு ஜோடிக்கு பாலீஷ் அடித்தார். இப்படியே ஜோடி ஜோடியாக கிளம்பிக் கொண்டிருக்க, எல்லாவற்றையும் வேண்டா வெறுப்பாக கவனித்துக் கொண்டிருந்த கடிகாரம் “யப்பா… வீட்டுக்கு போங்கடா. நாளைக்கு உங்களுக்கெல்லாம் வேலை இருக்கோ இல்லையோ, உங்களை பார்த்துக்கிற டிரைவர், உதவியாளர்னு அவங்களுக்கு இருக்குல்ல?” என்று கெஞ்சியது.

பெரிய மனிதர்களின் நிழலாகவே திரிகிற பலருக்கு தன் வீட்டில் நாலைந்து நிழல்கள் இருப்பது அநேக நேரங்களில் மறந்து போகும். ராப் பகல் பாராமல் ராணுவ வீரன் போல சேவை செய்வார்கள். “நான்தான் அவருக்கு எல்லாமே… தெரியும்ல?” என்கிற பெருமையோடு முடிந்து போய்விடும் ஆயுசு! திரும்பி பார்த்தால், தேறியது எதுவும் இருக்காது அந்த வெற்றுப் பெருமையை தவிர. இப்படி நடக்கும் பார்ட்டிகளில் ஊறுகாயாக கூட அல்ல. அதை மடிக்கும் பொட்டலங்களுக்கான மரியாதைதான் இவர்களுக்கும்.

பார்ட்டி களை கட்டியது. அந்த இறுதி நேரத்தில்தான் அந்த கொடுமை. விரிந்து பறந்த ஹாலில் இந்த மூலையில் தனியாகவும், அந்த மூலையில் தனியாகவும் அமர்ந்திருந்தார்கள் இருவர். ஒருவர் மும்பை கோதுமை! அந்தி வெயிலுக்கு சந்தனம் பூசினால் எப்படியிருக்குமோ, அப்படியிருப்பார். வேண்டுமென்றால் அவர் பெயரில் அரை பாதி மட்டும் சொல்கிறேன். ‘…சென்!’ இன்னொருவர் கப்பலின் பெயர் கொண்ட ஹீரோ. புலிப்பாய்ச்சல் பாயும் ஒரு பிரபல ஹீரோவின் ஒன்றுவிட்ட தம்பி.

ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்த அந்த அழகு தேவதையை அருகில் சென்று அப்ரோச் பண்ணவே அஞ்சுவார்கள் ஹீரோக்கள். ஏன்? “இதென்ன மாட்டு யாவாரமா, முதுகுல தட்டி வாஞ்சையா தடவறதுக்கு? பழகணும்யா… பழகணும். வா.. ஒரு மாசம் பிரண்டா இருப்போம். உன்னை எனக்கு பிடிச்சிருந்தால்தான் மற்றதெல்லாம். பிடிக்கலேன்னை லைப் லாங் வெறும் நட்புதான்” என்பார். ருசியோ, பசியோ, எக்ஸ்பயரி டேட் ஆனதோ? எதுவாகவும் இருக்கட்டும் என்கிற மனநிலைதான் அநேக ஹீரோக்களுக்கு. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்சுக்கு பழகிப் போனவர்களுக்கு இதற்கெல்லாம் ஏது நேரம்? “அட அந்த பொண்ணு செம போர்… போங்கப்பா” என்று சீண்டுவதேயில்லை ‘சென்’னை.

இருந்தாலும் இவர் மீது ‘சேது’வாகிக் கிடந்தார் அந்த ஹீரோ. இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது வந்த ஈர்ப்பு அது. பொசுக்கென்று தன் ஆசையை சொல்லியும் விட்டார். அசரவேயில்லை சென். அதே மாட்டு யாவார பார்முலாவை சொல்லி, ‘வாங்க பழகலாம்’ என்றார் ஹீரோவிடம். புடிச்சிருந்தா ஓ.கே. புடிக்கலேன்னா வெறும் பிரண்ட்சாகவே ஒதுங்கிடலாம் என்பது திட்டம். பழக ஆரம்பித்தார் ஹீரோ. அதற்கப்புறம் அவருக்குள் அந்த கீழ்த்தரமான எண்ணம் வரவேயில்லை. அப்படியொரு தோழியாக இருந்தார் சென். “ம்ஹும்… உன்னை அப்படி என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது. நீ என் சகோதரியில் ஒருத்தி” என்பதாக முடிந்தது அந்த ஒப்பந்தம்!

பழக்க வழக்கங்களிலும் பாசம் காட்டுவதிலும் அப்படியொரு ஜீவகாருண்ய போரொளிதான் இந்த நடிகை. வழக்கம் போல அவர் பார்த்த பல பார்ட்டிகளில் ஒன்றுதான் இது. அங்கு நடக்கும் எல்லா ‘பேட்டரிமோனியல்’ வி(வ)காரத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். சே… விலங்குகள் கூட்டம் என்று அலுத்துக் கொண்டது மனசு. இன்னும் ஒரு கிளாசை ஏற்றிவிட்டு கிளம்ப வேண்டியதுதான் என்றிருந்தவருக்கு, அந்த ஹாலின் மூலையில் ‘தேமே’ என்று உட்கார்ந்திருந்த அந்த கப்பல் ஹீரோவைக் கண்டதும் மனசு என்னவோ போலானது. தொலைவில் இருந்தபடி இவரையே உற்று கவனித்துக் கொண்டிருந்தார்.

‘மார்க்கெட் உச்சத்தில் இல்லை என்றால், மனுஷனை கமர்கட் லெவலுக்கு கூட மதிக்க மாட்டாளுக’ என்பது நம்ம ஹீரோவின் நம்பிக்கை! இருந்தாலும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சென்னின் பார்வையில் இருப்பது எளக்காரமா, பலகாரமா என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தார். மெல்ல தன் கையை உயர்த்தி சொந்த உதட்டுக்கே கேட்காமல் ஒரு ‘ஹாய்’ சொன்னார்.

கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் சுண்டலை பொறுக்கி எடுக்க கலங்கரை விளக்கம் ஒருபோதும் தலை சாய்ந்ததில்லை! முதன் முறையாக லைட் ஹவுஸ் குனிந்து சுண்டல் பொட்டலுத்துக்கு கை குலுக்கியது.

“ஏன்…இங்கு நடக்கும் கூத்துகள் எதிலும் நீ கலந்துக்கலையா?”

யார் கேட்பார்கள் என்பதற்காகவே காத்திருப்பார் போலிருக்கிறது. பொசுக்கென்று இவர் மடியில் சாய்ந்து கொண்டார் ஹீரோ.

“இங்கே மார்க்கெட்டுக்கு இருக்குற மவுசு, மனுஷனுக்கு இல்லையே?” கருணை மனுவை கதவிடுக்கில் சொருகிவிட்டு சென்னின் கண்களையே நோக்க, உடனடி அப்ரூவலுக்குள்ளானது அது. நடிகரின் வாழ்வில் அப்படியொரு பார்ட்டி முன்னும் நடந்ததில்லை. பின்னும் நடந்ததில்லை.

ஒரு வாரம் கழித்து எங்கோ போராடி சென்னின் மொபைல் நம்பர் வாங்கி போன் அடித்தார் நம்ம டல் மார்க்கெட் ஹீரோ. எதிர்முனை பதில் என்னவாம்?

வேறென்ன…? ‘எள்ளுருண்டை விழுந்து எறும்பு சாவு!’

(ஜனனம் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதி வரும் மாலை நேரத்து மயக்கம் தொடரிலிருந்து…)

4 Comments
  1. kabalidevan says

    vikram reemasen

  2. Bob says

    Vikranth rema sen?

  3. kabalidevan says

    aamalla. kappal thaan idikkuthu

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐயோ கவிதா…! மூணு மணி நேரமும் அதேதானா?

தலைப்பை படிச்சுட்டு தப்பு தப்பா யோசிச்சா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல! ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சுந்தர்சி சொன்ன சுவாரஸ்மான விஷயம்தான்...

Close