இந்த மூஞ்சி ஜனங்களுக்கு பிடிக்குமா அம்மா?
இனி ரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு அம்மாவாக நடிப்பது ஒன்றுதான் பாக்கி. மீதியிருக்கிற முன்னணி நடிகர்களுக்கெல்லாம் அம்மாவாக நடித்து “அம்மாவ்வ்வ்வ்வ்…” என்று அவர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார் சரண்யா பொன்வண்ணன்.
அப்படிப்பட்ட அம்மாவுக்கு தன் பிள்ளைகளில் ஒன்று டாப்போ டாப் என்றால் சந்தோஷம் வரத்தானே செய்யும்? ‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யாதான், முதல் படத்திலும் சேதுவுக்கு அம்மா. ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடிக்கும் போது தனக்கும் விஜய்சேதுபதிக்கும் நடந்த சம்பாஷனைகளை சொல்லி சந்தோஷப்பட்டார் சரண்யா.
“ஷுட்டிங் சமயத்தில், என்னிடம் வந்து ‘இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா?’ என கேட்பார். அப்போது “உனக்கென்னப்பா குறை?. பார்க்க லட்சணமாக இருக்கே. பெரிய ஆளா வருவே” என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்து கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
ரஜினிக்கு மகளாக நடித்த மீனாவே ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதும், படத்தில் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நிஜத்திலும் அம்மா போலவே வாழ்த்துவதும் சினிமா அதிசயங்களில் ஒன்று!
ரஜினி-மீனா டூயட் ரசிக்கப்பட்டது போலவே, சரண்யா பொன்வண்ணனின் மகன் பாசமும் ரசிக்கப்படும்!
கர்த்தாவே…