களை கட்டிய பேட்ட! முக்கிய விஐபி ஆப்சென்ட்!

உலகத்தின் ஒட்டுமொத்த கண்களும் நம்ம பக்கமேதான் இருக்கணும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டப்படுத்தி விட்டது தயாரிப்பு நிறுவனமான சன். இதே பொங்கலுக்கு அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் திரைக்கு வருவதால் யார் பவுடருக்கு ஜொலிப்பு? என்கிற போட்டியும் சொல்லாமல் கொள்ளாமல் அரங்கேறியது அங்கே.

‘சர்கார்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்த அதே கல்லூரி வளாகத்தில்தான் ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. கல்லூரி தாளாளர் தீவிர ரஜினி ரசிகர். காலா படத்திற்கே ஆடியோ ரிலீசை இங்க நடத்துங்க என்று கேட்டாராம். அப்போது கிடைக்காத கொடுப்பினை நேற்று அமைந்தது அவருக்கு.

எப்பவும் ரஜினி என்ட்ரிக்குதான் ஆடிட்டோரியம் அலறும். நேற்று அதையும் தாண்டி அலறியது விஜய் சேதுபதிக்காக. என்ன காரணத்தாலோ சற்று லேட்டாகதான் வந்தார் வி.சே. இவருக்கு முன்பே வந்துவிட்டார் ரஜினி. சேதுவின் வருகையை தெறிக்க தெறிக்க கொண்டாடினார்கள் ரசிகர்கள். ஒரு கணம் ரஜினியே அசந்துதான் போனார்.

‘நான் காணாத கனவு ஒன்று நிஜமாகியுள்ளது. இவ்வளவு பெரிய மனிதரோடு நடிப்பேன்’ என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றார் விஜய் சேதுபதி. மேடையில் அனிருத் பாடிய பாடலுக்கு துள்ளிக் குதித்தார்கள் ரசிகர்கள். இந்த பேரழகை நேரில் காண்பதற்கு ஒரே ஒரு விஐபிக்கு மட்டும் கொடுத்து வைக்கவில்லை. அவர்? ரஜினியின் மருமகன் தனுஷ்!

அனிருத் தனுஷ் இடையிலான சண்டையை தீர்த்து வைக்க பாடுபட்ட ரஜினி, இப்படத்தில் தனுஷை ஒரு பாடல் எழுத வைத்திருந்தார். ஆனால் பொயட்டுக்கு என்ன பிரச்சனையோ? இன்னும் முறுக்கிக் கொண்டே நிற்கிறார்.

கையில போட்ட மருதாணி, காலையில் வரைக்கும் கூட தாங்கலையே தலைவா?

Read previous post:
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு / விமர்சனம்

Close