இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு / விமர்சனம்

அமாவாசைக்கு லீவு போட்ட காக்காவுக்கு ஆறு வேளையும் பசி நிச்சயம். அப்படிப்பட்ட இருட்டு காக்காக்களுக்காக செய்யப்பட்ட முரட்டு வடைதான் இந்த இ.எ.ம.இ! மூடே வராத முதிர் கண்ணன்கள் கூட இப்படத்தின் முதல் பாதி பார்த்தால், சுவரேறிக் குதித்து சுண்ணாம்பை தடவிக் கொள்வார்கள். அப்படியொரு ஆபத்தான ‘டெம்ட்’டும் ‘டெம்ப்ளெட்’டும் நிறைந்த படம்தான் இது. வில்லேஜ் பாய் விமலுக்கு இனிமேல் திரும்புகிற இடமெல்லாம் தித்திப்புதான். கால்ஷீட்டும் ஃபுல்லாகும். ஆனால் வெளியே தலை காட்ட முடியுமா தம்பி?

மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் கட்டை பிரம்மச்சாரி விமல். அவருடன் பணியாற்றும் சிங்கம்புலி கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி. இவ்விரு சாரிகளும் செய்யும் சைலன்ட் சில்மிஷங்களும் சிற்சில திருட்டுகளும் அவர்களுக்கு எப்படியெல்லாம் இம்சை கொடுக்கிறது என்பதுதான் படம். அதுவும் லண்டனில் ஒரு பெண்ணிடம் சிக்கி சீரழியும் விமல் அங்கிருந்து தப்பித்து ஓடி வருகிற பிளாஷ்பேக்குக்கு தியேட்டரே அகிடு திகிடு ஆகிறது. ஃபுல் மூடில் “…வ்வ்வ்வ்வா” என்று அழைக்கும் அந்த வெள்ளைக்காரி, விமலை வச்சு வச்சு செய்யும் அந்தக்காட்சி ஐய்யோ ஐயய்யோ!

படத்தில் வருகிற ஒவ்வொரு காட்சியும் பெண்ணினத்தையே கேவலப்படுத்துகிறது. அக்கா, தங்கச்சி, அக்கம் பக்க பெண்கள் என்று யாரை பார்த்தாலும் கவுத்துப்போட்டு கட்டி உருள்கிறார் விமல். ‘அவ்ளோ பெரிய ஆணழகனாய்யா நீ?’ என்கிற லாஜிக்கெல்லாம் பார்க்காமல் ஜொள் வழிய உட்கார்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதிலும் பேருக்கு கொஞ்சம் மறைத்துக் கொண்டு வரும் ஆஷ்னா சவேரி, பல வருஷ கன்னிப் பையன்களின் சர்வரோக நிவாரணியாக மாறி கவலை போக்குகிறார்.

ஆஷ்னாவுக்கு அக்காவாக வரும் அந்த ஆன்ட்டியின் படுக்கை ‘போஸ்’டரை ஒட்டியே ஒரு வருஷத்தை ஹவுஸ்புல்லாக ஓட்டலாம் தியேட்டர்கார்கள்!

விமல், ஆஷ்னாவின் கூத்து ஒருபுறம் மகிழ்வித்தாலும்(?) மறுபுறம் சிங்கம்புலியின் பர்பாமென்ஸ் தெறிக்க விடுகிறது தியேட்டரை. அதிலும் ஃபுல் மூடில் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டு செக்ஸ் கதை படிக்கும் அவர் அதை பல்வேறு மாடுலேஷன்களில் படித்து முடிக்கும்போது தியேட்டரில் பேரிறைச்சல். நெஞ்சையும் வயிற்றையும் ஒருசேரப் பிடித்துக்கொண்டு திண்டாடுகிறான் ரசிகன். இப்படியொரு சிங்கம்புலியை பார்த்து எத்தனை வருஷமாச்சு?

காபி கிண்ணத்தில், கட்டி சூடம் விழுந்த மாதிரி இந்தப்படத்தில் பூர்ணாவும் இருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியாக கம்பீரம் காட்டுவதை விட, குற்றவாளிகளின் மனசறிந்து டீல் பண்ணுவது லைக் லைக்!

அப்புறம் மன்சூரலிகான், ஆனந்தராஜ் போன்ற தொழில்முறை சிரிப்பாளிகளும் இருக்கிறார்கள். ஆனால் செகன்ட் ஹாஃப் ஏனோ ட்ரை ஜாமூன்!

பழம் அழுகியிருந்தாலும் ஜுசை இனிக்க வைச்சுடணும் என்கிற போராட்டத்தில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ்.

இருட்டறையில் முரட்டுக்குத்து, ஹரஹர மகாதேவி வரிசையில் வந்திருக்கும் மானங்கெட்ட படம்தான்! ஆனால் Money கொட்டும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உலகம் முழுக்க ஓ.கே! தமிழகத்தில் பெப்பே! 2.0 கலவர கலெக்ஷன்?

Close