பிச்சுவா கத்தி – விமர்சனம்

பேர்லேயே கூர் இருக்கே… காதுல ரத்தம் வர்ற அளவுக்கு போட்டுத் தள்ளிருவாய்ங்களோ? என்கிற அச்சத்துடன் உள்ளே போனால், உங்கள் எண்ணத்தில் விழுகிறது பலமான கத்திக் குத்து! படு சுவாரஸ்யமான ஒரு கதை. அதை ஆங்காங்கே விழுந்து எழுந்து(?!) ஒப்பிக்கிறார் அறிமுக இயக்குனர் ஐயப்பன். சாதாரணமாக ஆடு திருட முற்படும் இளைஞர்கள் மூவரை, தன் விருப்பத்திற்கேற்ப பலி கொடுக்க முற்படுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இளைஞர்கள் மாட்டினார்களா? தப்பித்தார்களா? இதுதான் இந்த பிச்சுவா!

பொய் வழக்கு, போலீஸ் அராஜகம், லஞ்சப் பிடி, இப்படி தமிழ்நாட்டின் தினப்படி சமாச்சாரத்தை பகிரங்கமாக ‘பொங்கல்’ வைத்தமைக்காக டைரக்டருக்கு ஒரு சபாஷ். ஆனால் ஆடு திருடுன வழக்குக்கெல்லாம் கண்டிஷன் பைலில் மூணு மாசம் கையெழுத்துப் போட அனுப்புறாங்க என்பதெல்லாம் அபத்த களஞ்சியம். ஆங்காங்கே இப்படி லாஜிக் பார்த்திருந்தால் கூட, பொங்கலின் ருசியில் இம்மியளவும் கம்மியாகி இருந்திருக்காது. போகட்டும்… படத்தில் நடித்திருந்தவர்கள் எப்படி?

படத்தின் ஹீரோ இனிகோ பிரபாகர்தான். ஆனால் தயாரிப்பாளரின் மகனான செங்குட்டுவனும் நடிக்க வந்துவிட்டாரே… என்ன பண்ணுவதாம்? சம்பந்தமே இல்லாமல் கதையை அவர் தலையிலும் ஏற்றி வைக்கிறார் ஐயப்பன். பாரம் தாங்காமல் பல்டி அடிக்கிறது குழந்தை. படத்தின் பிற்பாதியில் இனிகோ அண் கோ எப்படி கும்பகோணத்தை ஆட்டிப்படைக்கிறது? தங்களுக்கு இம்சை கொடுத்த இன்ஸ்பெக்டரை இனிகோ எப்படி விரட்டினார் என்று போக வேண்டிய கதை, செங்குட்டுவனின் தலையில் ஏறிக் கொண்டு ததிங்கணத்தோம் போடுகிறது. தேவையில்லாமல் இரண்டு டூயட் வேறு இவருக்கு. ஹ்ம்… கெரகம்!

ஒரு முழு ஆக்ஷன் படத்தையும் கண்களில் சுமக்கிற அளவுக்கு பிரைட்டாக இருக்கிறார் இனிகோ. சும்மாவே சுற்றி திரிபவனுக்கு காதல் வந்தால் எப்படியிருக்கும்? லவ், ஆக்ஷன் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார். முன்னணி வரிசை காத்திருக்கிறது. அதற்கு ஐயப்பன்கள் அருள் புரியணுமே?

பிச்சுவா கத்தியின் பிரைட் சமாச்சாரங்களில் இன்னும் ஒரு முக்கியமான தளபதியாக இருக்கிறார் யோகிபாபு. எதற்குமே அலட்டிக் கொள்ளாமல் அவர் தரும் பதில்களும், அடிக்கும் கமென்டுகளும் தியேட்டரை துவம்சமாக்குகிறது. கடைசிவரை தன் ஓட்டை வாயை அவர் அடைக்காமலிருப்பதே அழகு!

இனிகோவின் ஜோடியாக ஸ்ரீபிரியங்கா. அவருக்கு ஒரு செங்குட்டுவன் என்றால், இவருக்கு ஒரு அனிஷா. படத்தின் ஆரம்பத்தில் வரும் பிரியங்கா, அதற்கப்புறம் தன் ஏரியாவை அனிஷாவுக்கு தாரை வார்த்துவிட்டு ஐயோவாகி விடுகிறார். (வெயிலில் போட்ட குலோப்ஜாமூன் மாதிரி ஏம்மா இப்படி இளைச்சுட்டீங்க? வெரி சேட்)

புதுமுகம் அனிதாவுக்கு நிறைய ஹோப். முடிந்தவரை பில்லப் பண்ணியிருக்கிறார். காளி வெங்கட் தலைமையில் நடைபெறும் அந்த எம்.எல்.எம் பிசினஸ் பகுதியில் நல்ல சுவாரஸ்யம். அதற்கப்புறம் புத்தகங்களை விற்க கிளம்பும் இளசுகள்தான் கதையை ஜவ்வாக இழுத்துத் தள்ளுகிறார்கள்.

மற்றொரு நண்பரான ரமேஷ் திலக், வழக்கம் போல பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

சேரன் ராஜ், ஆர்.என்.ஆர் மனோகர் என்று இந்த கேரக்டர்களுக்காவே பிறந்த சகுனிகள், தத்தமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இசை ரகுநந்தன். பாடல்கள் காதுகளுக்கு இனிமை. அதை படமாக்கிய விதமும், நடன அமைப்பும் மனசை அள்ளிக் கொண்டு போகிறது. கும்பகோணத்தின் அழகை குறையில்லாமல் ஒப்படைக்கிறார் ஒளிப்பதிவாளர் பழனிவேல்.

கத்தி ஷார்ப்! ஆனா, கவனம்தான் பிசகியிருக்கு!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சில்க் நினைவுகள்! அவங்க நெஞ்சுக்கும் இடுப்புக்கும் ஒரு நீ….ண்ட பயணம்! ஓவியர் ஸ்யாம்!

Close