திருப்பூர் சுப்ரமணியன் தியேட்டரில் திருட்டு விசிடி? அட இதுக்காகதான் கோபப்பட்டீங்களா ஐயா?
கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் திருட்டு விசிடி பற்றி பேசிய ஒரு கருத்துக்காக, அடுத்த நாள் விடிவதற்குள் வாய் நிறைய வெந்நீரை ஊற்றி கொப்பளித்து துப்பியிருந்தார் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாருமான திருப்பூர் சுப்ரமணியன். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களை விட்டு விளாசிய அந்த ஆடியோவை அப்படியே வெளியிட்டிருந்தது நமது இணையதளம். அப்போது பேசிய அவர், வில்லேஜ்ல இருக்கிற தியேட்டர்கள் தினந்தோறும் 2000 கூட வசூல் பண்றதில்ல. அவன் திருட்டு விசிடி எடுக்காம வேறென்ன செய்வான்? என்று வேறு கேட்டிருந்தார். இந்த நிலையில்தான் அவர் ஏன் இந்த பொங்கு பொங்கினார் என்பதற்கான விடை வெளியே வந்திருக்கிறது.
பொள்ளாச்சியில் இயங்கி வரும் ATSC என்ற தியேட்டரில் ‘தோழா’ படத்தை திருட்டு விசிடிக்காக பதிவு செய்திருக்கிறார்களாம். க்யூப் மூலம்தான் தியேட்டர்களில் படம் திரையிடப்படுகிறது. க்யூப் நிறுவனம் நினைத்தால் சம்பந்தப்பட்ட திருட்டு விசிடி எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்பதை துல்லியமாக சொல்லிவிட முடியும். அப்படிதான் தோழா படம் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட விஷயத்தை போட்டு உடைத்துவிட்டது க்யூப் சினிமா நெட் வொர்க்.
இந்த தியேட்டர் திருப்பூர் சுப்ரமணியனுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் திரையுலக அமைப்புகளும் நடிகர் சங்கமும் என்ன செய்யப் போகிறது? எனக்கு வந்தா ரத்தம். உனக்கு வந்தா தக்காளி சட்னி என்று எடுத்துக் கொள்ளும் சுயநலவாதிகள், வழக்கம் போல பலமாக ஒருமுறை தும்மி விட்டு, கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார்களா?
ஆயிரம் கேள்விகள். ஒன்றுக்கும்தான் விடையில்லை.