ஆணியே புடுங்க வேண்டாம்! 24 பட தயாரிப்பாளர் கோபம்?
கடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு சூர்யா படம் இலவசம் என்று சொல்லி சொல்லியே விற்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆன் லைனிலும் மவுசு குறையாமல் உலா வரத் தொடங்கிவிட்டது 24.
கடந்த பல வருஷங்களாகவே திருட்டு விசிடியை ஒழிப்போம் என்று கூவிக் கொண்டிருக்கும் யாராலும் இந்த ‘தண்ட’பாணிகளை அடக்கவும் முடியவில்லை. இவர்களுக்கு அடங்கிப் போகவும் முடியவில்லை. இந்த நிலையில்தான் அந்த மாபெரும் அதிர்ச்சி சம்பவம். 24 படத்தை கிரிஸ்ட்டல் கிளியர் பிரிண்ட்டாக ஜனங்களுக்கு தர வேண்டும் என்கிற சமூக சிந்தனையுடன் தன் தியேட்டரிலேயே இந்த படத்தை எடுத்து நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறது பிவிஆர் சினிமாஸ். நல்லவேளை… இந்த கொடூரம் நடந்தது இங்கல்ல. பெங்களூரில்.
இந்த பேரதிர்ச்சி 24 பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கலங்க விட்டிருக்கிறது. படத்தை பிவிஆர் சினிமாசுக்கு சொந்தமான ஏராளமான தியேட்டர்களில் திரையிட்டிருந்தாராம். உடனடியாக இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவர் பிவிஆர் சினிமாசுக்கு சொந்தமான எல்லா தியேட்டர்களிலும் இருந்து 24 படத்தை வாபஸ் பெற்றுவிட்டார். மிக சரியான முடிவும் கூட.
சொந்த விரலாலேயே கண்ணை குத்திக் கொள்ளும் இந்த போக்குக்கு யார் முடிவு கட்டுவது? இப்படியே போய் கொண்டிருந்தால், எதிர்கால சினிமாவின் கதி?