கோ2 விமர்சனம்
ஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல்! இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு ஒரு படம் வந்தால், ஒரு எட்டுதான் தியேட்டருக்குள் நுழைவோமே என்று தோணுமா தோணாதா? பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி என்று வகையும் வக்கணையுமாக உள்ளே இழுக்கிறார்கள் தியேட்டருக்கு!
இப்படி Ko வை நம்பி Goனவர்களின் கதி என்ன?
ஒரு படத்தின் முதல் காட்சியிலேயே கதை துவங்கிவிட்டால், அட்றா விசிலு என்று தோன்றுமல்லவா? அதை செய்ய வைக்கிறது அந்த முதல் காட்சி. “என்னது…. சி.எம் மை கடத்திட்டாங்களா?” என்று வாக்கிங்போன இடத்திலிருந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார் உள்துறை அமைச்சர். ஒரு முதியோர் இல்லத்திற்கு புரட்டக்கால் ஆர்ப்பாட்டங்கள் ஏதுமில்லாமல் போன முதல்வரை கடத்திவிடுகிறார் ஹீரோ. இல்லத்தை சுற்றி போலீஸ் ரவுண்டு கட்ட, போலீசுக்கும் ஹீரோவுக்குமான பேச்சு வார்த்தை ஆரம்பிக்கிறது. ஏனிந்த கடத்தல்? பேரம் என்ன? பிரச்சனை என்ன? ஒரு நேர்க்கோட்டில் செல்ல வேண்டிய கதை, முன் பாதியில் முட்டிக்கால் போட்டு முடங்கி உட்கார, “எதுக்குய்யா சுத்தி வளைச்சு சுண்ணாம்பு தடவுறாய்ங்க?” என்று மெர்சல் ஆகிற ரசிகனுக்கு பின் பாதியில் இருக்கு பரபரப்பு.
“என்னை ஏன் கடத்தி வச்சுருக்கே? உனக்கு என்னதான் வேணும்” என்று கேட்கிற முதல்வருக்கும், வெளியே இருக்கிற போலீசுக்கும் பாபி சிம்ஹா வைக்கிற நிபந்தனை தியேட்டரை கலகலப்பாகிறது. “ஆயிரம் ரூபா கொடுங்க. ஆனால் அதுல காந்திப் படம் இல்லாம” என்கிறார் ஹீரோ பாபிசிம்ஹா. அப்புறம் “மெடிக்கல் ஷாப் காரன் 48 பைசா பாக்கி வச்சுருக்கான். அதை வாங்கிக் கொடுங்க” என்கிறார். அதற்கும் சுட சுட ஒரு விளக்கம் கேட்கிறார் அவர். நாட்டில் ஒரு தனி மனிதன் எப்படியெல்லாம் நமது அரசாங்கத்தாலேயே சுரண்டப்படுகிறான் என்பதையெல்லாம் நாக்கை பிடுங்குகிற மாதிரி கேட்கிறது அவர் பேசும் வசனங்கள். டாஸ்மாக், மீத்தேன் வாயு திட்டம் என்று நாட்டு அவலத்தையெல்லாம் பிய்த்து பீராண்டி வைக்கிறது அற்புத வசனங்கள். பலே… ஆனால் சி.எம். கடத்தலுக்கான காரணத்திற்குள் புதைந்திருக்கும் அந்த சுயநலம், அதுவரை படத்தோடு ஒட்டிய ரசிகனை விலகிப் போக வைக்கிறதே டைரக்டர் சரத் .
பாபி சிம்ஹா பேசுவதை கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ரஜினி படம் பார்ப்பதை போலவே இருக்கிறது. இது திட்டமிடப்பட்ட தந்திரமா, இல்லை மெய்யாலுமே அப்படிதானா சிம்ஹா? இருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே ரசிகனை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவருக்கும் முதல்வர் பிரகாஷ்ராஜுக்கும். பால சரவணன் கற்பனையில் பாபிசிம்ஹாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கும் அந்த எபிசோடில் இளமை பொங்குது. அதற்காக “எதையும் குப்பை தொட்டியில் போடுங்க” என்று இருவரும் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை கண்டால் அந்த ஓனிக்ஸ்குக்கே தாங்காது!
ஒரு மினி பொன்னம்பலம் போலிருக்கிறார் பாலசரவணன். சி.எம். கடத்தல் ஆபரேஷனில் இவரது பங்கு முக்கியம் என்றாலும், வளவளவென பேசிக் கொண்டேயிருக்கிறாரா? மிடியல… இந்த படத்தின் மற்றொரு மிடியல, போலீஸ் அதிகாரியாக வரும் ஜான் விஜய். (இவரே படத்தின் மைனஸ் என்றாலும் முழுக்க சரி)
சில நிமிஷங்களே வந்தாலும் அப்படியே மனசுக்குள் கரைந்து போகிறார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். இந்த படத்தில் அவருக்கு குணச்சித்திர வேடம். அனுபவித்து நடித்திருக்கிறார். அப்புறம் நம்ம இளவரசு. பல படங்களில் அவர் ஊதி தள்ளிவிட்டு போன கேரக்டர்தான். போலீஸ் வண்டியில் ஏறப்போகிற அந்த நிமிஷம் கூட அவர் தனது மினிஸ்டர் கெத்தை விட்டுக் கொடுக்காமல் நடக்கிறாரே… மிச்சம் வைக்காமல் நடித்திருக்கிறார். நாசருக்கு அதிகம் வேலையில்லை. அதற்குள் அவர் மீது பரிதாபமும் வந்துவிடுகிறது.
லியோன் ஜேம்சின் இசையில் பாடல்களை தனியாக கேட்டால் நெஞ்சை அள்ளும். படத்தோடு கேட்கும்போது மட்டும் சற்றே அலுப்பு. அதுவும் அந்த டைட்டில் பாடல் இனிமை இனிமை.
இப்படியொரு கான்சப்ட் கைக்கு கிடைத்த பின் நிமிஷத்துக்கு நிமிஷம் வசனங்களில் பெட்ரோலை ஊற வைத்து அடித்திருக்க வேண்டாமா?
அரை குறையாக ரவுத்திரம் பழகியிருக்கிறார் டைரக்டர். அது முழுமையாக அமைந்திருந்தால் இந்த கோ -டூ, அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட வேட்டாக இருந்திருக்கும்!
-ஆர்.எஸ்.அந்தணன்