NAMITHA இல்லாத தேர்தல் நாசமா போவட்டும்!

“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு?” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா அதிமுக வில் இணைந்ததை பற்றிதான் இப்படியொரு காமென்ட்! இங்கு மின்னிய பல நட்சத்திரங்கள் இப்படி அணுகுண்டை முழுங்கிவிட்டு அவஸ்தை பட்ட கதைகள் நிறைய உண்டு.

“ஏன்… வண்டி நல்லாதான போயிட்டு இருக்கு? ஏம்ப்ப்பு இப்படியெல்லாம் கேட்கிறீங்க?” போன வாரம் ‘கத்தி சண்டை’ பட துவக்கவிழாவுக்கு வந்த வடிவேலு, நிருபர் ஒருவரின் கேள்விக்கு சொன்ன நறுக் சுருக் பதில்தான். இது. “இந்த தேர்தலில் திமுக வுக்காக பிரச்சாரம் பண்ணுவீங்களா?” இதுதான் நிருபர் கேட்ட அந்த பொல்லாத கேள்வி. தெனாலிராமனின் பூனை போல, டம்ளரை கண்டாலே நாக்கை சுருக்கிக் கொள்கிற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டார் வடிவேலு. வரும் தேர்தல் முடிவுக்கு பிறகு எத்தனை ஸ்டார்களுக்கு இந்த அனுபவம் கிட்டப் போகிறதோ?

கால காலமாக கட்சியிலிருந்த நடிகர்களை விடுங்கள். திடீரென கட்சிகளுக்குள் ஐக்கியமான சிலருக்கு இந்த தேர்தல் பல அனுபவங்களை தந்துவிட்டது. “யேய்…. ஓட்டு கேட்கப் போனா செருப்பெல்லாம் எடுத்து வீசுறானுங்கப்பா…” என்று உற்ற நண்பர்களுக்கு போன் போட்டு புலம்புகிற அளவுக்கு அனுபவத்தை சந்தித்துவிட்டார்கள். அதிமுக வுக்காக பிரச்சாரம் செய்த மனோபாலா, விந்தியாவுக்கெல்லாம் இப்படியொரு அனுபவம் நேர்ந்தது துரதிருஷ்டம்தான். இந்த தேர்தலில் நோட்டபுள் பர்சன் ஆகிவிட்ட மனோபாலாவுக்கு சினிமா தரப்போகும் அதிர்ச்சியை நினைத்தால்தான் அச்சமாக இருக்கிறது.

சினிமாவை பொறுத்தவரை அவர் சால்ட் பெப்பர்! எல்லா சமையலுக்கும் இவரை இழுத்து போட்டுக் கொள்கிற வழக்கம் டைரக்டர்களுக்கு இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான மனிதன் படத்தில் கூட உதயநிதி ஸ்டாலினுடன் நடித்திருந்தார் அவர். இனிமேல் அது நடக்குமா? டைரக்டர்கள் முன்பு போல மனோபாலாவுக்கு வாய்ப்பு தருவார்களா? விந்தியாவுக்கு அந்த பிரச்சனையெல்லாம்இல்லை. இனி சினிமாவில் அண்ணி வேடத்தில் கூட நடிக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை அவர். முழு நேர அரசியல்தான் அவரது இலக்கு. அவரது பேச்சும் மதில் மேல் பூனை ரகத்தில் இல்லை. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்.

“நேத்து அம்மாவை மீட் பண்ணினாரு. இன்னைக்கு சீட் வாங்கிட்டாரே…?” என்று சினிமா இன்டஸ்ட்ரியே மூக்கில் விரல் வைத்தது கருணாசை பார்த்து. இன்று…? ஆளுக்கொரு கர்சீப்பை கொடுத்தனுப்பினாலும் ஆச்சர்யமில்லை. அவர் போட்டியிடும் திருவாடனை தொகுதியில் இவருக்கு பயங்கர எதிர்ப்பு. அதிமுக காரர்கள் ஒருவர் கூட கருணாசுக்காக ஓட்டுக் கேட்டு வரவில்லை. அப்படி வருகிறவர்களும் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு, ஓட்டு போட்றாதீங்க என்று சொல்லிவிட்டு போகிறார்களாம். “கவுத்துட்டானுங்களே?” என்று கருணாஸ் ஓப்பனாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார் சில நாட்களாக.

அடிப்படையில் இலக்கிய சொற்பொழிவாளராக இருந்தவர் சிங்கமுத்து. அவர் கம்ப ராமயணத்தையும், சிவ தொண்டர் புராணத்தையும் பேசினால் வாயடைத்துப் போகும் கூட்டம். கத்துகிட்ட மொத்த வித்தையையும் இப்போது ஊர் ஊராக சென்று இறக்கிக் கொண்டிருக்கிறார். ஜெயா தொலைக்காட்சியை திறந்தால் அம்மாவுக்கு அடுத்தபடியாக வருவது சிங்கமுத்துதான்! செந்திலும் இவரும் மாறி மாறி சீட் கேட்டு அலுத்துவிட்டார்கள். சட்டமன்றத்திற்கு வந்து என்னத்தை கிழிக்கப் போறாங்க என்று நினைத்திருக்கலாம். தொடர்ந்து ஊர் ஊராக சுற்ற சொல்லி பணித்து வருகிறது கட்சி. குண்டு கல்யாணம் அதிமுக வுக்காக நினைவு தெரிந்த நாளிலிருந்தே கூவி வருகிறார். அவ்வப்போது மருத்துவ செலவு. கவர்மென்ட் குவார்ட்டஸ், கூட்டத்திற்கு வந்தால் கொள்ளை கொள்ளையாய் நோட்டு என்று அவரை இளைக்காமல் வைத்திருக்கிறது கட்சி. அவரும் எம்.எல்.ஏ சீட்டுக்காக தொடர்ந்து பணம் கட்டி வருகிறார். சட்டி சுட்டாலும், கை விட்டால்தானே?

சத்தியமூர்த்தி பவனுக்கே தனி டிரான்ஸ்பார்மர் போட்டு, மொத்த கரண்டிலும் ஒரே ஒரு நியான் விளக்கை ஏற்றிய மாதிரியிருக்கிறது குஷ்புவின் வரவு. பிரச்சாரத்திற்கு இவர் போகிற இடமெல்லாம், “வெளிச்சமா இருக்காரே?’’ என்று வியப்பில் ஆழ்கிறது கூட்டம். கருத்தா பேசுற குஷ்புவிடம், மக்கள் எதிர்பார்ப்பது கருத்தாவது ஒண்ணாவது?

ஐயோ பாவம். மத்தியில் ஆள்கிற பி.ஜே.பிக்கு மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய ஒரு உருப்படியான ஸ்டாரும் கிடைக்கவில்லை. நாட்டாமை விஜயகுமாரையும், பவர் ஸ்டார் சீனிவாசனையும் பார்த்துவிட்டு ஒரே தீர்மானத்திலிருக்கிறார்கள். பிஜேபி க்கு ஓட்டு இல்லையென்று. கூட்டத்தை சிரிப்பால் திணறடிக்கிற எஸ்.வி.சேகரை கூட கையாள தெரியாமல் கை நழுவ விட்டுவிட்டது அக்கட்சி.

ஒரு வருஷமாகவே “அதிமுக வுக்கு போவலாம்னு இருக்கேண்ணே…” என்று நிருபர்களிடம் அழையா விருந்தாளியாக வந்து அபிப்ராயம் சொல்லிக் கொண்டிருந்த கஞ்சா கருப்புவை கண்டு கொள்ளவே இல்லை அக்கட்சி. அவரும் அரிப்பை தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ஜெயம் கொண்டம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக நிற்கும் சினிமா பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் என்பவருக்காக வாக்கு கேட்டு போனார். இரண்டே நாள்தான். அட… ரொம்ப போரடிக்குதுண்ணே… என்று தலைதெறிக்க ஓடிவந்துவிட்டார்.

திமுக வுக்கு இந்த முறை சிக்கியவர் இமான் அண்ணாச்சி. ‘‘நான் திடீர்னு கட்சியில சேர்ந்தவன் இல்ல. பேசிக்கலாவே திமுகதான்” என்று போகிற இடத்திலெல்லாம் சொல்லி வருகிற அண்ணாச்சி பேச்சுக்கு அநேக ரெஸ்பான்ஸ். கணவரே கண் கண்ட தெய்வம் என்று போகிற திசைக்கெல்லாம் பிரச்சாரத்திற்கு போகும் ராதிகா சரத்குமாருக்கு ஒரே வருத்தம். இந்த நேரத்தில் சித்தி சீரியல் ஓடலையே? என்று.

இவ்வளவு நட்சத்திரங்கள் தெருவெல்லாம் சுற்றி சுற்றி வந்தாலும், திருவாளர் பொதுஜனத்திற்கு ஒரே ஒரு குழப்பம்தான் மண்டை முழுக்க மாவாய் பிசைகிறது. “இந்த நமீதா பொண்ணு கட்சியில சேர்ந்து இம்புட்டு நாளாயிருச்சு. தொகுதி பக்கமே வரக் காணோமேப்பா…?”

அதுக்கென்ன பண்ணுறது? கோல்கேட்டு பளிச்சுன்னு தெரியணும்னா டோல்கேட்டு ஓப்பன் ஆக வேணாமா?

அம்மா தாயே… டூ வீலர், செல்போன்லாம் அப்புறம் கொடுங்க. மொதல்ல நமீதாவை பிரச்சாரத்துக்கு அனுப்புங்க. மச்சானுங்க அல்லாரும் வெயிட்டீ…………….ங்!

(கல்கி வார இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதியது)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கோ2 விமர்சனம்

ஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல்! இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு...

Close