உன்னோடு கா- விமர்சனம்

ஒரே சாதிக்காரனுங்க உருண்டு புரண்டு சாவுற கதைகளை ஓராயிரம் முறை பார்த்துவிட்டது கோடம்பாக்கம். அப்படிப்பட்ட ‘அபாய’ அரிவாளை பஞ்சாமிர்த டப்பாவுக்குள் பதுக்கி வைத்த மாதிரி, இந்த படத்தில் வரும் வன்முறையும் சாதி ஆக்ரோஷமும், ஜஸ்ட் ஃபார் பன்! அப்புறமென்ன சிரிச்சுட்டு போங்க மகா ஜனங்களே…

எதிரெதிர் வீட்டில் வசிக்கும் பிரபுவுக்கும் தென்னவனுக்கும் வாலிப வயசில் வாரிசுகள். ‘ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடுறாங்க’ என்றொரு செய்தி கேட்டு சந்தோஷப்படுகிற அந்த குடும்பம் தெருவுக்கே லட்டு கொடுத்து சந்தோஷப்பட, “அட… என்னய்யா நடக்குது படத்துல” என்று நிமிர்கிறது முதுகு. அதற்கப்புறம்தான் சஸ்பென்சை அவிழ்க்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக பகையை வளர்த்துக் கொண்ட இரண்டு குடும்பத்தில் பிறந்த பிரபுவும் தென்னவனும் பிரண்ட்ஸ். கிராமத்துல இருந்தா பகையும் நெருப்புமாதான் வாழணும். அதனால் எஸ்கேப் என்று சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவரும் அந்த நண்பர்கள், தங்கள் வாரிசுகளுக்கு கல்யாணம் செய்து வைத்து பகையை முடித்துக்கட்ட வேண்டும் என்று நினைக்க…. நினைத்தது நடந்ததா? ஊர் பகை முடிந்ததா? க்ளைமாக்ஸ்! நடுவில் வரும் கிளை கதைகள், கிளை கேரக்டர்கள் எல்லாம் நீங்க கொட்டாவி விடுற நேரத்தில் குட்டு வைச்சு எழுப்பதான்!

பால சரவணனும் மிஷா கோஷலும் ஒரு ஜோடி. இவர்களுக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்க கிளம்புகிற இன்னொரு ஜோடிதான் ஆரியும் மாயாவும். மேற்படி ஜோடிக்கு இவர்கள் கல்யாணம் பண்ணி வைப்பதாக சொன்னாலும், அந்த கல்யாணம் முடியாமல் இழுத்துக் கொண்டே போவதற்கும் இதே ஜோடிதான் காரணம். மிஷா கோஷலுக்கு படத்தில் என்ன பெயர் தெரியுமா? அழகிய வடிவுடைய சுந்தராம்பாள். பால சரவணன் இவரை சு சு என்று அழைக்க, அவர் முறைக்க… ஒரே லந்துதான். ஆரியும் மாயாவும் எலியும் பூனையும் போல படம் முழுக்க அடித்துக் கொண்டு கிடந்தாலும், ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பொல்லாத பூனை எலியின் உதட்டை கவ்வ முயல்கிற அந்த தருணம்… ஜிலீர்.

மாயா மட்டும் இன்னும் கொஞ்சம் உயரமிருந்தால், குட்டி நயன்தாரா என்று கொண்டாடப்பட்டிருப்பார். அந்த அழகிய கண்களில் கோபத்தை நிரப்பவும் தெரிகிறது. அதே கண்களில் காதலை நிரப்பவும் தெரிகிறது அவருக்கு.

படத்தின் ஹீரோ ஆரி, மொத்த காமெடியும் முதுகில் சுமக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார். நல்ல பிரமோஷன்தான். ஆனால் அவர் சிரிப்புக்காக செய்யும் சேஷ்டைகளில் பல எரிச்சலுக்காக என்றும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. குதிரை முதுகில் யானை சவாரி செய்தது போலதான் இவர் காமெடி பண்ணியிருப்பதும். ஆனாலும், கூட இருக்கும் மற்றவர்களால் 70 சதவீத சிரிப்புக்கு கியாரண்டி தருகிறது உ.கா!

மன்சூரலிகான், எம்.எஸ்.பாஸ்கர் இருவருக்குமே சற்றே புதிய… பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்கிற கேரக்டர். புரிந்து சிரிக்க வைக்கிறார்கள்.

பிரபுவும் தென்னவனும் ஓடிவருகிற அந்த பிளாஷ்பேக் காட்சியில் நெருப்புக்குச்சியை கிழித்து மண்ணெணை குளியலால் நனைந்த தென்னவன் மேல் வீசுகிறார் யாரோ. ஆனால் அது பற்றிக் கொள்வதற்கு முன்பே காட்சியை கட் பண்ணி, கதையை வளர வைத்திருக்கிறார் எடிட்டர்.

பிரபுவின் கட்டபொம்மன் மீசை. குளோஸ்அப்பில் அந்த மீசையே குளோஸ் ஆகிற அளவுக்கு அவர் முகம் சுருங்கி தென்னவனை விரட்டுவதையெல்லாம் சீரியசாக பார்க்கவே முடியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரம்தான் கண்ணுக்குள்ள வந்திட்டு போகுது. ஸாரி பிரபு சார். இவரும் தென்னவனும் மீண்டும் கிராமத்துக்கே சென்று, பரம்பரை பகைக்கான காரணத்தை கண்டுபிடித்து, ஊரை தெளிய வைப்பதெல்லாம் பொறுத்து ரசிக்க வேண்டிய ஜோக்ஸ் ஏரியா. (ஒரு கோழிமுட்டைக்காக ஐந்து தலைமுறையா அடிச்சுகிட்டு சாவறதெல்லாம் அநியாயம்ப்பா)

கை தென்னவன், நடிப்புப் பொங்கல் ஷண்முக சுந்தரத்தின் இடத்தை விரைவில் பிடித்தே விடுவார் போலிருக்கே? (ஆமா… இந்த படத்தில் ஷண்முக சுந்தரத்தை நடிக்க வச்ச டைரக்டர் அவருக்கு இன்னும் கொஞ்சம் கனம் கொடுத்திருக்கலாமே? ஏமாந்துட்டோம்ல)

ஒரு கொடூர வில்லேஜ். அவர்கள் வீட்டு ஆயா பாட்டிகளின் வீரம். அருவாள் வீச்சு என்று ஒரு டெரர் கிராமத்தின் வெப்பம் முகத்திலடிக்கிற மாதிரி ஒரு டோர்ன் கொடுத்து படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன். இவரும் ஆர்ட் டைரக்டரும் பல காட்சிகளில் பிரமிக்க விடுகிறார்கள். சத்யாவின் இசையில் பாடல்கள் இனிமை.

ஆர்.கே என்ற புதியவர் இயக்கியிருக்கிறார். மிஸ்டர் ஆர்.கே… இந்தப்படத்திற்கு பெரிய சைசில் ஒரு…

ஓ.கே!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
NAMITHA இல்லாத தேர்தல் நாசமா போவட்டும்!

“பொரி உருண்டைன்னு நினைச்சு அணுகுண்டை முழுங்கிருச்சே இந்த பொண்ணு?” பதினைந்து நாட்களுக்கு முன் கோடம்பாக்கத்தை கிராஸ் பண்ணிய எவர் காதிலும் இந்த விமர்சனம் விழாமல் இருந்திருக்காது. நமீதா...

Close