‘வாடா… கூலிங்கிளாஸ். வந்து பதில் சொல்லு’ மிஷ்கினின் மானத்தை வாங்கிய பாலா!
‘வித்தை கர்வம்’ என்பார்கள் சிலரது பேச்சை கேட்பவர்கள். நேற்று பாலா பேசியது வித்தை கர்வத்தினாலா? அல்லது விதண்டாவாதத்தினாலா? என்பதை நடுவர் மன்ற குழுவை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியொரு நக்கல் அவரது பதில்களில். அவர் கலந்து கொள்ளும் எல்லா பத்திரிகையாளர் சந்திப்பிலும் நடக்கிற ஏடாகூடம்தான் இது. எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு நேரிடையாக பதில் சொல்லாமல் வேறொன்றை சொல்லி குழப்பிவிடுவது அவரது பாணி. ‘பிசாசு’ பாலா தயாரிக்கும் படம். மிஷ்கின் இயக்குனர். இந்த படத்திற்காக நேற்று பத்திரிகையாளர்கள் சந்தித்தார்கள் இருவரும். ‘வாடா… கூலிங்கிளாஸ். வந்து பதில் சொல்லு’ என்று மிஷ்கினை மேடைக்கு அழைத்து தன் நாகரீகத்தை நிலை நிறுத்தினார் பாலா. (இத்தனைக்கும் பாலாவின் படைப்பாற்றலுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை மிஷ்கின். ம்ஹும்… இது தயாரிப்பாளர் என்கிற கோதா)
மொத்தம் கேட்கப்பட்ட இருபத்தியொரு கேள்விகளில் இரண்டுக்குக்கூட அவர் உருப்படியாக நேரடியாக பதில் சொல்லவேயில்லை. பட விளம்பரங்களில் உங்க பெயரும் மிஷ்கின் பெயரும் மட்டும்தான் இருக்கு. மற்ற யார் பெயரையும் போடல? நீங்க எப்படி முதல் படத்தில் அறிமுகமாகி வந்தீங்களோ, அது மாதிரிதானே மற்றவங்களும்? அவங்க பெயரை போடுறதுக்கென்ன? இது கேள்வி.
அவங்க நல்லா முன்னேறி வரட்டும். அப்புறம் போட்டுக்கலாம். திறமையே இல்லாதவனெல்லாம் மேல வந்துர்றான். திறமை இருக்கிறவன் எங்க இருக்கான்னே தெரிய மாட்டேங்குது என்று என்னென்னவோ சொல்லி அதற்கான பதிலை சொதப்பினார் பாலா.
ஒரு படத்தை தயாரித்து அது தோல்வியானதை கூட மறந்து போன ஒரு பத்திரிகையாளர், ‘இந்த படத்தை நீங்க மிஷ்கினை அழைத்து கொடுத்ததற்கு காரணம் அவர் நல்ல கதையை சொன்னார் என்பதற்காகவா? அல்லது அவர் மீது பரிதாபப்பட்டா?’ என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பாலா, ‘நீங்க கூடதான் ஒரு படம் தயாரிச்சீங்க. நானும் அதை பார்த்தேன்’ என்று கூறி அந்த கேள்வியையே திசை மாற்றிவிட்டார்.
இப்ப வர்ற படமெல்லாம் பேய் கதையாகவே இருக்கு, நீங்களுமா? என்ற அவரது இன்னொரு கேள்விக்கும் இதே பதிலை சொல்லி சமாளித்தார் பாலா.
ஆங்கிலமும் தமிழும் கலந்து மாங்கு மாங்கென்று ஒரு கேள்வி கேட்டார் நிருபர் ஒருவர். ‘நீங்க என்ன கேட்டீங்கன்னு புரியல. எனக்கு இங்கிலீஷ் தெரியாது. தமிழ்ல கேளுங்க’ என்று திரும்பவும் அவரை மாங்கு மாங்க வைத்த பாலா, அதற்கும் உருப்படியாக பதிலை சொல்லாமல் என்னத்தையோ சொல்லி அவரை ஸ்தம்பிக்க வைத்தார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே பத்திரிகையாளராக இருக்கும் ஒருவர் கேட்ட நியாயமான கேள்வியை கூட ஜீரணிக்க முடியாமல், உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா என்றார் அவரிடம்.
நல்லவேளை…. தனக்கான பொறுப்புணர்ந்து செயல்பட்டவர் மிஷ்கின்தான். படத்தின் ஹீரோயின் பிரயாகாவை மகள் என்றும், ஹீரோ நாகாவை மகன் என்றும் அழைத்தார். பிரயாகா பற்றி பேசியவர், அவரது உழைப்பை அவ்வளவு சிலாகித்து பேசியதை பாராட்டியே ஆக வேண்டும். ‘படம் முழுக்க பல காட்சிகளில் அவர் அந்தரத்தில் பறந்து வர்றது மாதிரியே எடுத்துருக்கோம். அதுக்காக அந்த பெண்ணை ரோப்பில் கட்டி பெரிய கிரேனில் தொங்க விட்டு விடுவோம். சில நேரங்களில் அவர் அப்படியே சுவற்றில் மோதி ரத்த காயம் கூட வந்திருக்கிறது. இதையெல்லாம் தொலைவில் நின்று கண்ணீரோடு பார்த்துகிட்டிருப்பாங்க பிரயாகாவோட பேரன்ட்ஸ். அவங்களுக்கு என்னோட நன்றி’ என்றார்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஹிட்டா, பிளாப்பா என்ற கேள்விக்கு சற்று ஆதங்கத்துடன் பதில் சொன்னார் மிஷ்கின். அந்த படத்திற்கு பத்திரிகைகள் நல்ல விமர்சனம் கொடுத்திருந்தாங்க. ரசிகர்களும் வரவேற்ற படம் அது. இருந்தாலும் அது ஓடாமல் போனதற்கு நிறைய காரணம் இருந்தது. அதை இங்கே வெளிப்படையா நான் சொல்ல முடியாது. சில பத்திரிகையாளர்களுக்கு அது என்னன்னு நல்லா தெரியும் என்றார்.
இருந்தாலும் மிஷ்கினின் சுழி சும்மாயிருக்குமா? அருள் என்ற அழகான தமிழ் பெயர் கொண்ட இசையமைப்பாளருக்கு அர்றோல் கொர்லி என்று பெயர் மாற்றி வைத்துவிட்டார். வைட் ஆங்கிள் ரவிச்சந்தின் என்று பத்திரிகையுலகத்தால் அழைக்கப்படும் ஒளிப்பதிவாளரை ரவீ ராய் என்று மாற்றிவிட்டார். எல்லாம் இங்கிலீஷ் பட எபெக்ட்!. இருந்தாலும் இந்த படம் வேறு ஆங்கில கொரிய ஜப்பானிய படங்களின் காப்பியில்லையே என்ற கேள்விக்கு, ‘எல்லா கதையும் ஏதாவது ரிசம்பளன்சோட இருக்கும். அப்படி பார்த்தா இது காப்பிதான்’ என்றார் போல்டாக!
கொஞ்சம் கிர்ர்ர்னுதான் இருக்கு!