பிசாசு -விமர்சனம்
காலகாலமாக நமக்குள் புனையப்பட்டிருக்கும் பிசாசு என்பதன் பிம்பத்தை பீஸ் பீஸாக்குகிற படம்! பிசாசை திரையில் பார்த்து பயந்திருக்கிறோம்… வியந்திருக்கிறோம்…. வியர்த்திருக்கிறோம்… அலறியிருக்கிறோம்…. முதன் முறையாக கண்ணோரத்தில் கவலை ததும்ப காற்றில் தவழும் அந்த உருவத்திற்காக தழுதழுக்க ஆரம்பிக்கிறோம். ‘ஐயோ பவானி. என் தெய்வமே…’ என்று பெற்ற அப்பன் கதறுகிற நேரத்தில் பொளக்கென எட்டிப் பார்க்கும் அந்த கண்ணீர் துளிகள்தான் இந்த படத்தின் கைதட்டல்கள். இத்தனை காலம் பிசாசுக்கென செதுக்கப்பட்டிருந்த பிம்பத்தை உடைத்து வீசியிருக்கிறார் மிஷ்கின். (இப்படியொரு பிசாசுவை தந்ததற்காக உங்களின் வழக்கமான திமிரை கண்டிஷன்ஸ் அப்ளையோடு அனுமதிக்கிறோம் மிஷ்கின்)
விபத்தில் சிக்கிய இளம்பெண் ஒருத்தியை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறான் ஹீரோ நாகா. போனால் இறுகப்பற்றிய அவன் கையை விட்டுவிடாமலே இறந்து போகிறாள் அவள். கையருகே மரணம்…? வெருண்ட பார்வையோடு திரியும் நாகாவுக்கு அவள் விட்டுப் போன செருப்பு ஒன்றை ஏனோ பத்திரப்படுத்தி வைக்க தோணுகிறது. அதற்கப்புறம்தான் தெரிகிறது. அதே பெண் தன் வீட்டில் பிசாசாக திரிகிறாள் என்று. அப்புறமென்ன? அவளுக்கு அஞ்சி மொட்டை மாடியில் படுத்து, ‘ஏன் என்னை படுத்துற? என் அம்மாவுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா நான் செத்துப்போய் உன்னை வந்து உண்டு இல்லைன்னு ஆக்கிருவேன்’ என்று அவளிடம் சவால் விட்டு, கடைசியில் ‘அவ மட்டும் பொழச்சிருந்தா உங்க கால்ல விழுந்து அவளை கேட்டிருப்பேன்’ என்று அவளது அப்பாவிடமே புலம்புகிற அளவுக்கு போகிறான் அவன்.
ஒரு கட்டத்தில் குற்றவுணர்ச்சிக்கு தள்ளப்படும் நாகா, நான் அவளுக்காகவே செத்துப் போகிறேன் என்று கிளம்ப, பிசாசின் ரீயாக்ஷன் என்ன? கலீல் ஜிப்ரானின் கவிதை புத்தகத்தை தலையணைக்கு கீழே வைத்துக் கொண்டு உறங்கியதை போன்ற எபெக்டையும் சேர்த்து இந்த ஆவிப்படக்கதைக்குள் தந்திருக்கிறார் மிஷ்கின். அதே நேரத்தில் தனது வழக்கமான ஸ்டைலை விட்டுக் கொடுக்கவே போவதில்லை என்கிற அவரது பிடிவாதத்தை எந்த போகியில் போட்டு எரிக்க?
ஹீரோ நாகாவின் முகத்தை முழுசாக பார்க்கவே முடியாதளவுக்கு அவரது முன் நெற்றியை மறைக்கிறது முடி. அதையும் மீறி அவர் ஒற்றை கண்ணோடு வெட்ட வெளியை வெறித்து பார்க்கும் போதேல்லாம் படத்தில் வரும் பிசாசு ஹீரோவா, ஹீரோயினா என்கிற சந்தேகமே வந்து தொலைத்துவிடுகிறது. ஆனாலும் அந்த அடர்ந்த மயிர் காட்டுக்குள் ஒளிந்துகிடக்கிறது நாகாவின் பர்பாமென்ஸ். சமயங்களில் அதையும் மீறி அவர் கொடுக்கும் நவரசங்களில் சிரிப்பு மட்டும் மிஸ்சிங் என்றாலும், மற்றவை பலே ஜோர்! சுற்றி வளைத்து கொலையாளி யார் என்பதை அவர் கண்டுபிடித்து அதிர்வதுதான் இந்த படத்தின் திடுக்கிடும் திருப்பம்.
நாயகிக்கு எடுத்த எடுப்பிலேயே ஒரு அழகான குளோஸ் அப். அதற்கப்புறம் அந்த அழகான முகம் நமக்கு தெரியப்போவதில்லை என்பதால் போலும். ஒரு பிசாசுவின் நடமாட்டம் காற்றில் தவழ்வதாகதான் இருக்கும் என்பதாக யோசித்த விதம் அருமை என்றால், படம் முழுக்க அப்படியே பாம்பு போல அந்தரத்தில் வளைந்து நெளிந்து டிராவல் ஆகும் பிரயாகாவின் ரோப் வ(ழி)லி நடமாட்டமும் அழகு. ஒரு பிசாசு உயிரோடிருப்பவர்களை அலங்க மலங்க அடிப்பதுதானே முறை? ஆனால் இது புரட்சித்தலைவர் எம்ஜிஆரை போல மதுவை தொடாதே என்கிறது. மனைவியை அடிப்பவனை போட்டு சாத்துகிறது. இறுக்கமான தியேட்டரை கலகலப்பாக்கும் தருணங்கள் அவை. அதே நேரத்தில் கண்ணெதிரே கதறும் அப்பாவுக்கு ஆதரவாக அப்படியே மனமிரங்கி தன் கருத்த கைகளால் அவரது கன்னம் தடவுகிறதே… கலங்க வைக்கிற காட்சி அது.
வெகு காலம் கழித்து ராதாரவிக்கு சிறப்பான ரோல். ‘மகளே… தெய்வமே… வாம்மா நம்ம இடத்துக்கு போயிடலாம்’ என்று அவர் மண்டியிட்டுக் கொண்டே மகளின் ஆவியை நோக்கி ஓடுகிறபோது சிலிர்த்துக் கொள்கிறது அத்தனை நரம்புகளும்.
ஆவி படங்கள் என்றால் திகில் இல்லாமலா? ‘இது பச்சை கலர்தானே?’ என்று ஆட்டோக்காரரிடம் நாகா விசாரிக்கும் போது ஏற்படும் அதிவேக காற்றும், அதனால் ஆட்டோக்கள் பறப்பதுமாக அசரடிக்கிறது மிஷ்கினின் டெக்னிகல் டீம்! பேய் விரட்ட வருகிற பெண்ணொருத்தி காட்டுகிற பில்டப்பும் முடிவும் தாயத்துக்காக அலைகிற தமிழுள்ளங்கள் கவனித்து கரை சேர வேண்டிய பகுதி. அதே நேரத்தில் மொத்த தியேட்டரும் தன்னை ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வதற்காக உதவுகிற காட்சியும் கூட.
படத்தில் ஒரேயொரு பாடல். அரோல் கார்லியின் மியூசிக் உலகத்தில் இளையராஜா நுழைந்து கொண்டது போல அப்படியொரு நேர்த்தி. பின்னணி இசையிலும் வித்தை காட்டியிருக்கிறார் மனுஷன். (நம்ம ஊரு ஐயராத்து புள்ளையான அருளுக்கு அரோல் கார்லின்னு பேரு வச்ச மிஷ்கினை என்ன சொல்லி புலம்ப?) அதே போல ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிஷங்கரையும் ரவீஈஈஈ ராயாக மாற்றியிருக்கிறார். பெயர் எதுவாகவும் இருக்கட்டும். திறமை பளிச்.
கேரக்டர்கள் ஒரு ஆக்ஷனுக்கு பின் தன் பழைய இடத்தில் வந்து நின்று கொள்வது. அப்படியே விட்டத்தை வெறித்துப் பார்ப்பது. ‘கட்’டே இல்லாமல் போகிறதே… என்று கவலைப்படுகிற அளவுக்கு காட்சியின் நீட்சி இருப்பது என்று மிஷ்கினின் முந்தைய பட ஸ்டைல் இதிலும் தொடர்வதுதான் சற்றே நெளிய விடுகிறது.
‘பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?’ என்று கேட்பவர்கள் கூட இந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு போனால், ராவெல்லாம் லைட்டை எரிய விட்டுதான் உறங்குவார்கள். ஏனென்றால் பிசாசின் பின் விளைவுகள் அப்படி!
-ஆர்.எஸ்.அந்தணன்
Ananthapurathu veedu movie ithai vida anbhana pisasuvai kaati irupargal