பூவரசம் பீ பீ / விமர்சனம்

குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று. முழு சைக்கிளில் ஏறினால் அரை பெடலுக்கு கூட முக்குகிற உயரத்திலும் வயசிலும் இருக்கும் ஒரு சிறுவன், ‘டேய்… நாமெல்லாம் இதை ஒண்ணுக்கு போறதுக்கு மட்டும்தான்னு தப்பா நினைச்சுட்டோம்டா… இத வச்சுகிட்டு வேற என்னென்னமோ பண்ணலாம் போலிருக்கு’ என்கிறான். வேறொருவனுக்கு படுக்கையிலேயே சேலம் சித்த வைத்தியர் சமாச்சாரம்… போர்வையும் அவனும் அடுத்த காட்சியிலேயே ஒன்றாக நனைகிறார்கள். …தொடர்பான காட்சியில் ஒரு பெண் வயசுக்கு வந்த பேனர் வேறு.

இவற்றையெல்லாம் கூட மன்னித்துவிடலாம். அரை பாவாடை உயரத்திலிருக்கும் சின்னஞ்சிறு சிறுமிக்கு லவ்வாம். இவளையும் ஒரு பொடியனையும் ஒரு ஆற்றோரத்தில் உட்கார வைத்து ‘விண்ணை தாண்டி வருவாயா’ சிம்பு த்ரிஷா ரேஞ்சுக்கு ஒரு டூயட் வைத்திருக்கிறார்கள். இப்படி குழந்தைகளை வைத்துக் கொண்டு மனசுக்குள் தோன்றியதையெல்லாம் எடுத்திருப்பது யாரோ ஒரு தடியர் அல்ல…. பொறுப்பான தாய்குலம். சே… வெட்கம். அதிலும் பொய் புரட்டு என்பதையே அறியாத வயசில் அப்பாவிடம் ‘உச்சா போறேம்ப்பா’ என்று பொய் சொல்லிவிட்டு பாலத்திற்கு அந்த பக்கம் நிற்கும் பொடியனிடம் பேசிவிட்டு வருகிறாளாம் அவள். இதையெல்லாம் பொறுத்துக் கொள்கிற மனசிருப்பவர்கள் படத்தை கன்ட்னியூ செய்யலாம். இல்லாதவர்கள் தியேட்டருக்கு வெளியில் அரை கல் அகப்படுகிறதா பாருங்கள்….

கதை? அதுவும் கற்பனைக்கு எட்டாத விஷயம்தான் என்றாலும், ஒரு பாசிட்டிவ் அப்ரோச் இருப்பதால் கொஞ்சம் நிம்மதி.

ஆற்றில் குளிக்கப் போகும் மூன்று அரைக்கால் டவுசர் பசங்க, அங்கு ஆற்றோரத்தில் நடக்கும் ஒரு பாலியல் பலாத்காரத்தை பார்க்கிறார்கள். அந்த பெண் மறுநாள் ஆற்றில் சடலமாக மிதக்க, அவளை கொன்றவர்கள் யார் யார் என்பதை விஞ்ஞான அறிவோடு தேட ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கொலையாளிகளை நெருங்கும் அவர்களுக்கு பேரதிர்ச்சி. அதில் ஒருவன் அந்த சிறுவர்களின் கெமிஸ்ட்ரி வாத்தியார். ஊருக்கு தெரியாமல் இவர்கள் செய்யும் சட்டத்திற்கு புறம்பான தொழில்களை அவர்களே தயாரித்த ஒரு ரேடியோ மூலம் ஊருக்கு சொல்கிறார்கள். முடிவு? அந்த மூவரையும் சிறைக்கு அனுப்பி வைப்பதுதான்.

கோயம்பேடு மார்க்கெட்டில் கோல்டன் ஹவுஸ் திறந்த மாதிரி, இந்த படத்தின் ஒரே ஆறுதல் மனோஜ் பரமஹம்சாவின் மயங்க வைக்கும் ஒளிப்பதிவுதான். ஒரு தண்ணீர் குழாயை காண்பித்தால் கூட அதிலும் ஒரு அழகு சொட்டுகிறது. இப்படத்தை உயரே பிடித்திருக்கிற அவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட. பாராட்டுவதா, பழிப்பதா?

படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் ‘ஆர்வ’த்தோடும் அதே நேரத்தில் ‘கோளாறோடும்’ இந்த படத்தை அணுகியிருக்கிறார் என்பதை அந்த இந்து முஸ்லீம் கலவர காட்சியிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. கதைக்கு சிறிதும் தேவைப்படாத காட்சி அது. பிறகு ஏன் நல்லாயிருக்கிற ஊரில், நஞ்சை ஸ்பிரே பண்ண வேண்டும்? அதே போல காமெடி என்றால், பசங்க ‘gas’ ரிலீஸ் பண்ணுவதுதான் என்று நினைத்திருக்கிறார். காட்சிகளில் பெரும் பகுதி அதையே சுற்றி சுற்றி வருவதால். குமட்டுகிறது சகோதரி….

மற்றபடி ஆங்காங்கே தரப்படும் இன்பர்மேடிவ்வான விஷயங்கள் பாராட்டுகுரியவை. அதிலும் பொன் வண்டு பற்றி விளக்குகிற காட்சி. அதற்கப்புறம் சின்னப் பசங்களான அவர்கள் தங்களின் எல்லா சந்தேகங்களையும் கூகுளில் தேடி அறிந்து கொள்கிற காட்சியும் கூட.

நிறைய பொயட்டிக்கான காட்சிகளும் உண்டு. மரத்தில் மாட்டிக் கொண்ட பட்டம் ‘அப்படியே இருக்கட்டும்… எனக்கு அது வால் ஆடுறது ரொம்ப பிடிக்கும்’ என்று அந்த சிறுமி சொல்ல, அதை அப்படியே விட்டுவிட்டு போகும் சிறுவன், பிற்பாடு அந்த பட்டத்தாலேயே தப்பிக்கிற காட்சியும் பலே.

நமது வண்டவாளங்களை எங்கிருந்து யார் போட்டுக் கொடுக்கிறார்கள் என்பதே தெரியாமல் அந்த வில்லன் கோஷ்டி தவியாய் தவிப்பதும், தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு பிரிவதுமாக நல்ல ட்விஸ்ட். நள்ளிரவில் ஆவிக்கு அஞ்சி அவர்கள் குலை நடுங்குகிற காட்சியில் இறுக்கமான தியேட்டர் மொத்தமும் விழித்துக் கொண்டு சிரிக்கிறது. இப்படி ஆங்காங்கே ரசனைக்குரிய பல காட்சிகள் உண்டு.

அருள்தேவ் என்கிற புதிய இசையமைப்பாளரின் ட்யூன்களில் கூட குழந்தைகளுக்கான கொண்டாட்டம் இல்லை. எல்லாம் கவுதம் மேனன் படத்தில் வரும் காதல் பாடல்கள் போலதான்… கோபுரம் தெரியாம கும்பிடு போட்ட மாதிரி சம்பந்தமில்லாமலிருந்தாலும், ரசிக்க முடிகிறது.

குழந்தைகளை குழந்தைகளாக காட்டாத இந்த மொத்த படக்குழுவுக்கும் ரசிகர்கள் ஊதப் போவது பீப்பியா, அல்லது சங்குதானா?

காத்திருக்கிறேன் ஆவலோடு!

பின் குறிப்பு – வரிந்து கட்டிக் கொண்டு மார்க் போடும் அத்தனை ஊடகங்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். இந்த படத்தின் விமர்சனங்களை பாஸிட்டிவாக எழுத நினைப்பதற்கு முன், உங்கள் வீட்டு செல்லக் குழந்தை, பக்கத்து வீட்டில் அஞ்சாம்ப்பு படிக்கும் சிறுவனுக்கு லவ் லெட்டர் கொடுப்பதை போல கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்புறம் எழுத ஆரம்பியுங்கள்…

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
ஓங்கி அடிச்சா ஒரு கிராம் வெயிட் கூட இல்லடா…

இன்னும் எத்தனை நாளைக்குதான் காதலித்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஆக்ஷனுக்கு தாவி விடலாம் என்று நினைத்து வந்தார் நயன்தாரா. பூ ஒன்று புயலானது என்று இந்த ஆபரேஷனுக்கு பெயர்...

Close