ஒன்றரை கோடியில் அலங்காரம்! பளபள பிரசாத், கலகல கபாலி!

‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்… அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்பை விட, அபரிதமானது கல்யாணத்துக்கும் தியேட்டர்களுக்கும் இருக்கிற பந்த பாசம்! ரஜினி, கமல், விஜய், சூர்யா மட்டுமல்ல, அப்போதைய முதல்வர் கலைஞரிலிருந்து, அதிமுக்கியமான நீதிபதிகள் வரைக்கும் கூட, இந்த கல்யாணத்துக்கு போன் போட்டு, “வந்துகிட்டே இருக்கோம். படம் ரெடியா?” என்பார்கள். அப்புறமென்ன? லேக் ஏரியாவையே தன் காட்டுத் தொண்டையால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பார் அவர். மரியாதை மணமணக்க, மற்ற சவுகர்யங்கள் அணிவகுக்க, படத்தை என்ஜாய் பண்ணுவார்கள் மேற்படி விஐபிகள்.

இப்படியாக ஒயிட் ஸ்கிரீனும், அதைவிட பளிச்சென்ற ஒயிட் உள்ளமுமாக பறந்தோடிக் கொண்டிருந்த மிஸ்டர் கல்யாணம், இப்போது கல்யாண பிரசாத் ஆகிவிட்டார். எப்படி? சென்னை வடபழனியில் அமைந்திருக்கும் பிரசாத் லேப் தியேட்டருக்கு இப்போது கல்யாணம்தான் இன்சார்ஜ்! வந்த நாளில் இருந்தே பிரசாத் லேபின் ஒவ்வொரு செங்கல்லுக்கும் பாலிஷ் போட ஆரம்பித்துவிட்டார் அவர். உச்சகட்டமாக பிரசாத் லேப் தியேட்டரின் உள் கட்டமைப்பை அதிரடியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். செலவு ஒன்றரை கோடியாகுமாம். இவர் பட்ஜெட் கொடுத்ததுமே பரந்த உள்ளத்தோடு அதற்கு அனுமதியும் வழங்கிவிட்டாராம் முதலாளி ரமேஷ்பிரசாத்.

உட்காருகிற நாற்காலியில் ஆரம்பித்து, உள்ளே இருக்கிற லைட்ஸ், ஸ்பீக்கர், ஓயிட் ஸ்கிரீன் என்று எல்லாவற்றையும் புதுசாக்கிக் கொண்டிருக்கிறது 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர் குழு. அதுமட்டுமல்ல, இங்கே பொருத்தப்படுகிற வெள்ளை திரை இந்தியாவிலேயே வேறெந்த தியேட்டர்களிலும் இல்லையாம். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள்.

பாலீஷ், மாலீஷ் சமாச்சாரங்களுக்கு பின் புதுப்பொலிவோடு ஜொலிக்கவிருக்கும் இந்த தியேட்டரில் திரையிடப்படும் முதல் திரைப்படம்…. வேறு எதுவாக இருக்க முடியும்? கபாலிதான்! இப்பவே எதிரிலிருக்கிற டீக்கடையில் துவங்கி, கவுச்சிக்கடை, காய்கறிக்கடை, சூப் கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், வங்கிகள், வழிப்போக்கர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் கூடி வைத்த மாதிரி பேசுவது ஒன்றே ஒன்றுதான்…

“அடிக்கடி இங்க, கலைஞர் வருவாக… ரஜினி வருவாக… கமல் வருவாக… அஜீத் வருவாக… விஜய் வருவாக… மற்றும் அதிகாரி, அமைச்சரெல்லாம் கூட வருவாக… ”

“யேய்… யாருப்பா அது, குறுக்க நின்னு கொட்டாவி விட்றது? ஓரமா போ போ!” -கல்யாணத்தின் குரல் இனி நாலு கிலோ மீட்டருக்காவது கேட்கும்!

PrasadLab, Theater, FourFrames Kalyanam, Rajini, Kamal, Ajith, Vijay, Surya, Vikram, Kalaignar Karunanithi

Read previous post:
பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….”

“இலையை காட்டுனா பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா....” இந்த டயலாக்கை கபாலி ரஜினி ஸ்டைலில் ஒரு முறை சொல்லிப்பார்த்தால், தனுஷின் ஆத்திரம் புரியும். சும்மாவா சார்...

Close