களவாணியா, கடனாளியா? ஓவியா படத்திற்கு ஓயாத சிக்கல்!
இந்த பார்ட் 2 பஞ்சாயத்துகளை தீர்க்கவென்றே கோடம்பாக்கத்தில் தனி கோர்டுகள் தேவைப்படும் போலிருக்கிறது. சற்குணம் இயக்கத்தில் வந்து சக்கை போடு போட்ட களவாணி படத்தின் பார்ட்2 வை எடுக்க நினைத்ததுதான் இப்போது பெரும் பிரச்சனை. ‘அந்த தலைப்பு எனக்குதான் சொந்தம்’ என்று குறுக்கே கட்டையை போடுகிறார் களவாணி பார்ட் 1 ன் தயாரிப்பாளர் நசீர். ‘இல்லயில்ல… அந்த உரிமை படைப்பாளியான எனக்குதான்’ என்று கொடி பிடிக்கிறார் இயக்குனர் சற்குணம்.
பிக் பாஸ் 2 வுக்கு பின், ஓவியா உளமார ஓகே சொன்ன படமும் இதுதான்.
இந்த சண்டை ஒருபுறமிருக்க, தற்போதைக்கு கே.2 என்ற பெயரில் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சற்குணம். எல்லாம் முடிந்து ரிலீஸ் தேதிக்கு பஞ்சாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் கத்தி வேறொரு திசையிலிருந்து பாய்கிறது. எப்படி?
இதே சற்குணம் முதல் பிரதி அடிப்படையில் ‘டோரா’ என்றொரு பேய் படத்தை தயாரித்தார். ஹீரோயின் நயன்தாரா. இப்படத்திற்காக பணம் போட்ட தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்.
சொன்ன பட்ஜெட்டை விட, சுமார் 60 லட்ச ரூபாய் செலவை அதிகப்படியாக இழுத்துவிட்டாராம் சற்குணம். அதை கொடுத்தாலே போச்சு என்று கவுன்சிலில் பஞ்சாயத்து கூட்டிய ஜபக்குக்கு, ‘அடுத்த படத்தில் செட்டில் பண்ணுகிறேன்’ என்று அப்போதைக்கு வாயடைத்தார் சற்குணம்.
இப்போது அந்த பணத்தை திருப்பித்தராமல் கே.2 வை வெளியிடக் கூடாது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் நேமிசந்த் ஜபக்.
களவாணி 2 தலைப்புக்காக ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கும் சற்குணத்திற்கு, இன்னொருபக்கம் ஜபக் கொடுக்கிற குடைச்சலும் பெரும் தலைவலியாக இருக்கிறதாம்.
கடைசியில் களவாணிங்கிற பேற கடனாளின்னு மாத்திராதீங்கப்பு!