புகழ் விமர்சனம்
கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா? ‘இருக்க்க்க்க்க்க்கு… ஆனா?! ’
புகழ் புகழ்னு ஒரு பையன். அவனை சுற்றி ஏழெட்டு பிரண்ட்ஸ். அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதானம். விளையாடவும் அரட்டையடிக்கவும் உதவியாக இருந்த அந்த மைதானத்தின் மீது மினிஸ்டருக்கு ஒரு கண். அதை வளைத்து பில்டிங் கட்ட முயலும் அமைச்சரின் முயற்சியையும், அதற்கு ஆதரவாக இருந்த உள்ளூர் சேர்மனையும் அந்த புகழ் எப்படி முறியடித்தான்? பிளே கிரவுன்ட் தப்பித்ததா? இதுதான் புகழ் படத்தின் குறுங்கதை. ஆங் சொல்ல மறந்தாச்சே, இந்த புகழுக்கு ஒரு லவ். அதுவும் சைட் டிராக்கில் ஓடி ஓடி வருவதால், ஆக்ஷன் மூட் மற்றும் காதல் மூட் என்று மாறி மாறி டிராவல் செய்கிறான் ரசிகன். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘ஆமா… ஆணிய புடுங்கறதும் அரசியல்தான். ஆணிய அடிக்கறதும் அரசியல்தான்’ என்கிற உண்மை மண்டைக்குள் சுர்ரென்று தைக்கிறது. படத்தின் இயக்குனர் மணிமாறன் வெற்றிமாறனின் அசிஸ்டென்ட்டாக இருந்தவராம். (சொல்லாமலே புரிகிறது நைனா!)
ஜெய்தான் அந்த புகழ்! சுமார் ஒரு வருட ‘கேப்’ இருக்குமல்லவா அவரை பார்த்து? இன்னும் ஒரு வருஷத்துக்கு தாங்குகிற மாதிரிதான் நடித்திருக்கிறார். காதலியை கண்டு பம்மும் அதே ஸ்டைல்தான் இதிலும். பட்… பிடிச்சுருக்கே? இவருக்கும் சுரபிக்கும் வரும் அந்த லவ் டிராக் அழகு மற்றும் ரிலாக்ஸ். இன்னொரு புறம் அட்மாஸ்பியரில் தீப்பெட்டியை காட்டினாலே பற்றிக் கொள்வாரோ என்கிற அளவுக்கு சூடு காட்டுகிறார். ஒரு இளைஞன் பொதுப்பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் போது என்னவெல்லாம் நேருமோ, அவையெல்லாம் நேர்கிறது அவருக்கு. ஆனால் அதற்கெல்லாம் அஞ்சிவிடாமல் அதே சூடோடு அவர் திரிவதை நன்றாகவே ரசிக்க முடிகிறது. (இடைவெளி இல்லாம அப்பப்ப வாங்ணா….)
நட்பு புனிதமானது என்பதை நண்பனின் துரோகத்திற்கு பிறகும் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் ஜெய்யின் நடவடிக்கையால் புரிய வைக்கிறார் இயக்குனர். மனம் திருந்தி வரும் துரோக நண்பனை எல்லாரும் புறக்கணிக்க, எவ்வித முகச்சுளிப்பும் காட்டாமல், “சரக்கடிக்கிறியாடா” என்று ஜெய் கேட்கும் அந்த இடம், ஹை!
சுரபியை ஜீரோ சைசுக்கு ஆட்படுத்திய அந்த படு பாதக உடற்பயிற்சியாளருக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு கண்டனம். தமிழ் சினிமா ஹீரோயின்களின் வழக்கப்படி, சற்றே கொழுக் மொழுக் பார்முலாவை இனிமேலாவது கடை பிடிங்க ராசாத்தி. இருந்தாலும் உங்க சட் சட் பேச்சு செம ஈர்ப்பும்மா!
வில்லனாக நடித்திருக்கும் மாரிமுத்து, எவ்வித அலட்டலுக்கும் இடம் கொடுக்காமல், வீல் வீலென்று தொண்டை கிழிய கத்தாமல், அவ்வளவு இயல்பாக அசால்ட்டாக வெளிப்படுத்தியிருக்கிறார் தன் வில்லத்தனத்தை. படத்தின் வெயிட்டில் பாதி இவர் தலையில்தான். ஆனால் சுலபமாக ஏற்றிக் கொள்கிறது அது!
ஜெய்யின் அண்ணனாக கருணாஸ். தம்பியை வம்பு தும்புக்கு போக விடாமல் காப்பாற்றிவிட நினைக்கும் அவரே ஒரு கட்டத்தில், வெட்றா பார்ப்போம் என்று தம்பியை தள்ளிவிடுகிற காட்சிக்கு, விசிலடிக்கிறது தியேட்டர். ஜெய்யின் நண்பனாக நடித்திருக்கும் அந்த பையன், உணர்ந்து நடிக்கிறார். தனி ஆவர்த்தனத்துக்கே தாங்குவார் போலிருக்கிறது. கவனிங்க டைரக்டர்ஸ்…
விடிகாலை நேரம். ஆளில்லாத தெரு. அடுத்த சில நிமிஷங்களில் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பதை யூகிக்க வைத்து திடு திடுக்க வைக்கிறது கேமிரா. வேல்ராஜ் – தேவாம்சன் இருவர் கூட்டணியில் படத்தின் மூட் விட்டு அகலாத ஒளிப்பதிவுக்கு தனி சபாஷ்.
விவேக் சிவா- மெர்வின் சாலமன் என்ற இரட்டையர் இசையில் பின்னணி சிறப்பு. பாடல்களின் பிளேஸ்மென்ட்தான் கேண்டீனை தேட வைக்கிறது.
சாமிக்கு நேர்ந்துகிட்டு மொட்டை போடுறவன் கூட சாமி ஏதாவது பண்ணும்னு நம்பிதான் போட்றான். ஆனால் ஓட்டு போடறவனுக்கு அது கூட கிடையாது என்றெல்லாம் சுட சுட வசனம் எழுதியிருக்கிறார் டைரக்டர் மணிமாறன். அந்த சூடு படத்தின் வேகத்திலும் இருந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏக்கம் வராமலில்லை.
மெட்ராஸ் மாதிரி ஒரு படம். ஆனால் அட்ரஸ் இல்லாமல் அலைந்திருக்கிறது.
-ஆர்.எஸ்.அந்தணன்