எங்களையும் குழப்ப வேண்டாம்! மக்களையும் குழப்ப வேண்டாம்!! முடிவா சொல்லுங்க, வருவீங்களா, மாட்டீங்களா? ஆரம்பித்தது முதல் கோஷம்?

‘ரஜினி தெளிவாதான் இருக்காரு. நாமதான் குழம்புறோம்’ என்று அங்கிகெணாதபடி எங்கெங்கும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் மக்கள். இணைய தளங்களிலும் மற்ற சமூக வலை தளங்களிலும் முன்பெல்லாம் ‘ரஜினி அரசியலுக்கு வர்றாராம்’ என்று நியூஸ் போட்டால், அலறி அடித்துக் கொண்டு ஆர்வமாக வந்து ‘லைக்’ போட்டவர்களில் 90 சதவீதத்தினர், இப்போதெல்லாம் ‘அட போங்கப்பா… அவருக்குதான் நேரம் போகலேன்னா உங்களுக்குமா?’ என்று காமெண்ட் போடுகிற அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது. நாளுக்கு நாள் சரிந்து வரும் ரஜினியின் அரசியல் செயல்பாடு கணக்குக்கு, சரியான எரிச்சல் காட்ட கிளம்பியிருக்கிறார்கள் அவரது சொத்து பத்து என்று கருதப்பட்ட ரசிகர்களே…!

இன்றோ நாளையோ சேலம் ரசிகர் மன்ற தலைமையகத்திலிருந்து சுட சுட அறிக்கை வரும்போல தெரிகிறது. அதற்கான ஆரம்பகட்ட குமுறல்கள் அங்கிருந்து புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ‘அரசியலுக்கு வர்றதுக்கு பயமில்ல. ஆனால் தயக்கமா இருக்கு’ என்று லிங்கா பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசினாலும் பேசினார். லேசாக கொழுந்துவிட ஆரம்பித்தது நம்பிக்கை. அதை அவரே காலி பண்ணினார் சில நாட்களில். கோவா விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் மீடியா கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் பெரிய சர்ச்சையாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னது வேறு. மீடியாக்கள் எழுதியது வேறு என்று அவரது ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, அது இல்ல. இது இல்ல என்று விளக்கமும் கலக்கமுமாக ஓடிக் கொண்டிருக்கிறது விவாத மேடை.

‘என்ன வேணும்னா இருக்கட்டும்ப்பா… மக்களையும் குழப்பி ரசிகர்களையும் குழப்புற வேலையை அவர் இனிமேலும் செய்யக்கூடாது. அரசியலுக்கு வருவீங்களா, மாட்டீங்களா? தெளிவா வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லுங்க’ இதுதான் சேலம் ரசிகர் மன்றத்தினர் வைக்கப் போகும் கோரிக்கையாம். ரஜினி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது பிரமாண்டமான யாகம் நடத்திய மன்றம் இது.

சிவாஜி திரைப்படம் வெளிவருதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருக்கிற மாவட்ட தலைமை ரசிகர் மன்றத்தினரை மட்டும் மண்டபத்தில் சந்தித்தார் ரஜினி. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர் அவர்களை தேவையில்லாமல் உசுப்பி விட்டது. ‘கடமையை செய். பலனை எதிர்பார்’ என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த வாசகம். ‘இப்படி எங்களை என்னவோ இருக்கு என்னவோ இருக்கு என்று பல காலமா ஏமாத்திகிட்டு இருக்கார் அவர். இனிமேலும் நாங்க பொறுத்துக் கொள்வதாக இல்லை’ என்கிறார்களாம் அவர்கள்.

ரஜினி ரசிகர்கள் வேண்டுமானால் பலனை எதிர்பார்க்கலாம். அதிலேயே இன்னொரு வர்க்கம் இருக்கிறது. அது ரஜினி பக்தர்கள் வர்க்கம். அவர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. அவர் நல்லாயிருந்தா போதும்! யாரை யார் வெல்லுவாரோ?

Read previous post:
VELLAKKARA DURAI STILLS & NEWS

Close