இனிப்பாய் வரும் குருப்பெயர்ச்சி! இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்க என்கிறாராம் ரஜினி?
கேதுவை போல கெடுப்பானுமில்லை, குருவை போல கொடுப்பானுமில்லை என்பார்கள் ஜோதிடர்கள். அதே குரு தேவையில்லாத இடத்திற்கு வந்தால், அழகு விழி கூட ஆட்டின் முழியாகிவிடும். அப்படியொரு இக்கட்டு திக்கெட்டும் பரவி திண்டாட விட்டுவிடும். வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. வருடா வருடம் ஒரு ராசி விட்டு இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் குருவால் இந்த முறை மகர ராசிக்கு மகோன்னதமான நன்மை நடைபெறுமாம்.
இந்த இடத்தில் நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், ரஜினிக்கு மகர ராசி என்பதுதான். பொதுவாக ராசிப்பலன், கர்மவினை மீதெல்லாம் கடும் நம்பிக்கை வைத்திருக்கும் ரஜினி, இந்த குருப்பெயர்ச்சிக்காக காத்திருக்கிறாராம். கடந்த முறை வந்த லிங்கா, அவரது பெயரை கடும் டேமேஜுக்கு ஆளாக்கிவிட்டு போனதல்லவா? அந்த பஞ்சாயத்தெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியில் எடுபடாது. ஏனென்றால் குருதான் சாதகமான இடத்திற்கு வந்துவிட்டாரே?
எனவே கபாலி படத்தை குருப்பெயர்ச்சிக்கு பிறகு ரிலீஸ் செய்தாலென்ன என்ற எண்ணத்திலிருக்கிறாராம் ரஜினி. அவரே சொல்லிவிட்ட பிறகு ஆட்சேபணை ஏது? ஜுலை 15 ல் ரிலீஸ் என்று முதலில் கிசுகிசுக்கப்பட்ட கபாலி, இப்போது ஜுலை 22 ல் வெளியாகும் என்று பேசப்படுகிறது. ஆனால் ரஜினி போட்டிருக்கும் கணக்குப்படி ஆகஸ்ட் 3 ந் தேதிக்கு பிறகுதான் கபாலி திரைக்கு வருவார் என்கிறார்கள் இது குறித்து புலனாய்வு செய்து வரும் ஜோதிட சிகாமணிகள்.
சிங்கம் எப்ப வந்தாலும் கர்ஜனைதான்! ஆகஸ்ட்லேயே வாங்க…