யாருக்கும் சொல்லாமல் வெளிநாடு ட்ரிப்! அதிருப்தியில் இருக்கிறாரா விஜய்?
ஒரு நாளும் இல்லாத திருநாளாக அமைந்துவிட்டது இந்த முறை வந்த விஜய்யின் பிறந்த நாள்! அந்த பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதிக்கு முதல் நாள் வரைக்கும் கூட அவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கப் போவதில்லை, வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார் என்கிற தகவல் யாருக்கும் தெரிந்திருக்கவில்லையாம். தனது ட்ரிப் பற்றி ஒரு சிலரை தவிர வேறு யாருக்கும் சொல்லவில்லையாம் விஜய். நேரில் வாழ்த்து சொல்லும் நோக்கத்துடன் சென்னையிலிருந்து படப்பிடிப்பு நடந்த ஐதரபாத்துக்கு கிளம்பிப் போன ஒரு முக்கியஸ்தர் குழு, அங்கு விஜய் இல்லாததால் கடும் சோகத்திற்கு ஆளானதாம்.
அவர் எங்களுக்கே சொல்லலையே? திடீர்னு அவர் ஷுட்டிங்குக்கு வரல. என்ன காரணம்னு தெரியல. விசாரிச்சப்போதான் அவர் வெளிநாடு போயிட்டாருன்னு தெரிய வந்திச்சு என்று படப்பிடிப்பிலிருந்த முக்கியமான டெக்னீஷியன்கள் சொல்ல, ‘இந்த பதிலை கேட்கவா இவ்ளோ தூரம் வந்தோம்?’ என்று மெர்சல் ஆனார்களாம் இங்கிருந்து போனவர்கள்.
ஏனிந்த திடீர் புறக்கணிப்பு? விசாரித்தால் தயாரிப்பு தரப்புக்கும் விஜய்க்கும் சிறு மன சங்கடம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். தயாரிப்பு செலவு இயக்குனர் போட்டுக் கொடுத்த பட்ஜெட்டை விட பல மடங்கு ஏறிக் கொண்டே போக, டைரக்டரை அழைத்து கடிந்து கொண்டாராம் தயாரிப்பாளர். அதை விஜய் ரசிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பதினைந்து நாட்கள் கழித்துதான் விஜய் வருவார் என்பதால், அவசரம் அவசரமாக போட்ட ஷெட்யூல் அத்தனையிலும் சேஞ்ச் செய்து கொண்டிருக்கிறாராம் டைரக்டர்.
பொதுவாக விஜய் படத்துக்கு ரிலீஸ் நேரத்தில்தான் பிரச்சனை வரும். இப்போது முன் கூட்டியே வந்துவிட்டதால், ரிலீஸ் நன்றாக இருக்கும் என்று நம்புவோமாக!