வந்தார் ரஜினி! தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை?

தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சூடாகிவிட்டது. ‘சொல்லுவார்ப்பா… ஆனால் வர மாட்டாரு…’ என்கிற மக்களின் அலுப்புக்கு நேற்றோடு முடிவு கட்டிவிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். கடந்த ஒரு வருஷமா தமிழ்நாட்டை பார்த்து அண்டை மாநிலங்கள் சிரிக்கின்றன என்கிற துணிச்சலான கருத்தையும் கூறி பலரையும் வியக்க வைத்திருக்கிறார் அவர்.

வருகிற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு கால அவகாசம் இல்லை என்பதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டி என்று ரஜினி அறிவித்ததை இனிமேலும் ‘சும்மாச்சுக்கும்’ என்று எடுத்துக் கொள்ள முடியாது. பல வருஷங்களாக ரசிகர் மன்றத்திற்காக கடுமையாக உழைத்துவரும் தகுதியான நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறதாம். அவர்களை இப்போதிலிருந்தே தயார் படுத்தும் வேலைகளையும் ஆரம்பிக்கவிருக்கிறார்களாம்.

இதற்கிடையில் அவர் பி.ஜே.பி யின் கைப்பாவை என்றே வர்ணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அரசியல் தலைவர்கள். அதை நிரூபிப்பது போல, ஆன்மீக அரசியல் நடத்துவேன் என்று கூறியிருக்கிறார் ரஜினி. போக போகதான் இது என்ன மாதிரியான வடிவம் என்பதே ஜனங்களுக்கு புரியும்.

ஒரு நல்ல தலைவன் கனவிலாவது வந்துவிட மாட்டானா என்று காத்திருக்கிறது தமிழகம். காலில் விழுகிற அடிமைக் கலாச்சாரம். ஆடம்பரமான கட் அவுட் கலாச்சாரம். எதிர்த்துப் பேசினால் எட்டி உதைக்கும் ரவுடிக் கலாச்சாரம், இவற்றையெல்லாம் கண்டு கொதித்துப் போயிருக்கும் தமிழகம், ரஜினியை ஒரு மாற்றாக நினைக்க வேண்டும் என்றால், இவற்றையெல்லாம் தவிர்ப்பதுதான் அவரது முதல் கட்டளையாக இருக்க வேண்டும். முக்கியமாக மாற்றுக் கட்சியில் தின்று கொழுத்துவிட்டு, புதுசா ஒருத்தன் வந்திருக்கான். மொளகா அரைச்சுடலாம் என்று நினைத்து உள்ளே வரும் பீரங்கி வாயன்களை அருகிலேயே சேர்க்காமலிருப்பது உத்தமத்திலும் உத்தமம்.

தமிழகத்தை பொறுத்தவரை பி.ஜே.பி என்றாலே, ‘நாம உழைச்சு சேர்த்து வச்ச காசையெல்லாம் ஒரே ராத்திரியில அள்ளிட்டு போனவனுங்கப்பா…’ என்கிற எரிச்சல் இருக்கிறது. மேலும் மேலும் வரிச்சுமை. விலையேற்றம், காவிரி பிரச்சனையில் ஒருதலை பட்டசமான பார்வை என்று சகட்டு மேனிக்கு வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். போதும் போதாமைக்கு எச்.ராஜா, தமிழிசை போன்றவர்களின் வாய் சொல், இன்னும் அவர்களை கடுப்பேற்றி வருகிறது.

இப்படிப்பட்ட கொடூர காலத்தில்,

ரஜினியின் பிஜேபி ஸ்டேன்ட், அவரை குப்புறத் தள்ளிவிடும் என்பதில் துளி மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஆனால் ரஜினி என்கிற தேக்கு மரம், பிஜேபி என்கிற பலமான கெட்ட காற்றையும் தாங்கிக் கொண்டு தாக்குப்பிடித்து நின்றால்,

தமிழ்நாடு இன்னும் 2 எலக்ஷனுக்காவது வேறு தலைவனை தேட வேண்டிய அவசியம் இல்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
உங்க படத்தில் நான் நடிக்கிறேன்! ரஜினி போன்! இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்!

தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு...

Close